Ezekiel 14 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 இஸ்ரயேலின் பெரியோருள் சிலர் என்னிடம் வந்து, என்முன் அமர்ந்தனர்.2 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:3 மானிடா! இம்மனிதர் சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து, அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் என் திருவுளத்தை அறிய நான் விடுவேனோ?4 ஆகையால், நீ அவர்களோடு பேசி, அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே இறைவாக்கினரிடம் வந்தால், அவர்களுக்கு ஆண்டவராகிய நானே அவர்களின் எண்ணற்ற சிலைகளுக்கேற்ப பதில் அளிப்பேன்!5 இவ்வாறு, சிலைகளால் என்னை விட்டு விலகிப்போயிருக்கும் இஸ்ரயேல் வீட்டாரின் இதயங்கள் அனைத்தையும் நான் என் வயமாக்கிக்கொள்வேன்.⒫6 ஆகவே, இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; திரும்புங்கள், உங்கள் சிலைகளை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் அருவருப்புகள் அனைத்தையும் விட்டு உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.7 ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது, இஸ்ரயேல் வீட்டில் வாழும் அயலாருள் எவராவது என்னைவிட்டகன்று, தங்கள் சிலைகளிடம் மனத்தைப் பறிகொடுத்து அவற்றைத் தங்கள் முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே, இறைவாக்கினரிடம் வந்து அவர் வழியாக என் திருவுளத்தை அறிய முற்பட்டால், அவர்களுக்கு நானே, ஆண்டவராகிய நானே சரியான பதில் அளிப்பேன்!8 அவர்களுக்கெதிராக என் முகத்தைத் திருப்பி, அவர்களை அடையாளமாகவும் பழிச் சொல்லாகவும் ஆக்குவேன். அவர்களை என் மக்கள் நடுவிலிருந்து வெட்டியெறிவேன். அப்போது, நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.⒫9 இறைவாக்கினன் ஒருவன் ஏமாற்றப்பட்டு ஒரு வாக்கை உரைப்பானாகில், ஆண்டவராகிய நானே அவனை ஏமாற்றினேன். நான் என் கையை அவனுக்கு எதிராக நீட்டி என் மக்கள் இஸ்ரயேலின் நடுவிலிருந்து அவனை அழித்து விடுவேன்.10 என் திருவுளத்தை அறிய முற்படுவோரின் குற்றப்பழியைப் போலவே இறைவாக்கினனின் குற்றப்பழியும் இருக்கும். அவரவர்கள் தங்கள் குற்றப்பழியைச் சுமப்பார்கள்.11 அப்போது, இஸ்ரயேல் வீட்டார் என்னை விட்டு வழிதவறிப் போகாமலும், தங்கள் எண்ணற்ற குற்றங்களால் மீண்டும் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமலும் இருப்பர். அப்போது அவர்கள் என் மக்களாய் இருப்பர். நானும் அவர்கள் கடவுளாய் இருப்பேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.12 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:13 மானிடா! ஒரு நாடு நம்பிக்கைத் துரோகம் இழைத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால், நான் கையை நீட்டி, உணவின் தரவை நிறுத்தி, அங்குப் பஞ்சத்தை அனுப்பி, அங்குள்ள மனிதரையும் கால்நடைகளையும் அழிப்பேன்.14 அப்போது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூவரும் அங்கிருந்தால், அவர்கள் தங்கள் நேர்மையால் தங்கள் உயிரைமட்டுமே காத்துக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.15 நான் காட்டு விலங்களை நாடு முழுவதும் அலைந்து திரியவிட, அவை அதனைப் பாழாக்கி வெறுமையாக்கும். அவற்றின் காரணமாய் யாரும் அங்கே நடமாட முடியாதிருக்கும்.16 அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால் — என்மேல் ஆணை — அவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவர். தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும்; நாடும் பாழாய்ப்போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.17 அல்லது, நான் அந்த நாட்டின்மீது வாளை வரச்செய்து,‘ வாள் நாட்டை ஊடுருவட்டும்’ என ஆணையிட்டு மனிதரையும், கால்நடைகளையும் வெட்டி வீழ்த்துவேன்.18 அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால் — என்மேல் ஆணை — அவர்கள்மட்டுமே காப்பாற்றப்படுவர்; தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.19 அல்லது, நான் அந்நாட்டினுள் கொள்ளை நோயை அனுப்பி, அதனின்று மனிதரையும் கால்நடைகளையும் அழிப்பதற்காக, என் சீற்றத்தைக் குருதியாய் அதன்மீது கொட்டுவேன்.20 அப்போது, நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கிருந்தால் — என்மேல் ஆணை — மகனையோ மகளையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற்போகும். தங்கள் நேர்மையின் பொருட்டுத் தங்கள் உயிரை மட்டுமே காத்துக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.⒫21 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உண்மையிலேயே நான் மனிதரையும் கால்நடைகளையும் எருசலேமினின்று ஒழிப்பதற்காக, வாள், பஞ்சம், காட்டுவிலங்கு, கொள்ளைநோய் ஆகிய என்னுடைய நான்கு கடும் தீர்ப்புகளையும் அதன்மீது அனுப்புவேன்.22 அப்போது, அங்கிருந்து தப்பிப் பிழைக்கும் சிலர் தங்கள் புதல்வரோடும் புதல்வியரோடும் வெளியேறி உங்களிடம் வந்து சேர்வர். அவர்களின் நடத்தையையும் செயல்களையும் பார்த்த பிறகு, நான் எருசலேமின்மீது வரச்செய்த தீங்கை — நான் அதன்மீது வரச்செய்த ஒவ்வொரு தீங்கையும் — குறித்து நீங்கள் தேற்றப்படுவீர்கள்.23 நீங்கள் அவர்களின் நடத்தையையும் செயல்களையும் பார்க்கும்போது அவர்களே உங்களுக்கு ஆறுதலாய் இருப்பர். அப்போது நான் அங்குச் செய்ததெல்லாம் காரணமின்றிச் செய்யவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.Ezekiel 14 ERV IRV TRV