1 ஒரு நாள் மாமியாராகிய நகோமி ரூத்திடம், “நீ இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவா?

2 போவாசு நமக்கு உறவினர். அவருடைய பணிப்பெண்களோடுதான் நீ இத்தனை நாள்களும் இருந்தாய். நான் சொல்வதைக் கவனமாயக் கேள். இன்றிரவு அவர் களத்தில் வாற்கோதுமையைத் தூற்றிக் கொண்டிருப்பார்.

3 நீ குளித்துவிட்டு, எண்ணெய் தடவிக் கொண்டு, உன்னிடமுள்ள ஆடைகளில் மிகவும் நல்லதை உடுத்திக்கொள்; பின்னர் அவருடைய களத்துக்குப் போ. ஆனால் அவர் உண்டு குடிக்கும் வரை, அவர் கண்ணில் படாமலிரு; அவர் படுக்கும் இடத்தைப் பார்த்து வைத்துக்கொள்.

4 அவர் உறங்கியதும், நீ சென்று அவர் கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு அங்கேயே படுத்துக்கொள். அதற்கு மேல் நீ செய்ய வேண்டியதை அவரே உன்னிடம் சொல்வார்” என்றார்.

5 ரூத்து, “நீர் சொல்லித்தந்த அனைத்தையும் நான் செய்கிறேன்” என்றார்.⒫

6 அவ்வாறே ரூத்து அந்தக்களத்துக்குச் சென்று, தம் மாமியார் சொல்லித் தந்த அனைத்தையும் செய்தார். போவாசு உண்டு குடித்து மகிழ்ச்சியாய் இருந்தார்.

7 பிறகு, அவர் தானியக் குவியல் ஒன்றின் அருகே சென்று உறங்குவதற்காகப் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து ரூத்து ஓசையின்றி அங்கே சென்று அவர் கால்களை மூடியிருந்த போர்வையை விலக்கி விட்டுப் படுத்துக்கொண்டார்.

8 நள்ளிரவில் திடீரென்று போவாசு விழித்துக் கொண்டார்; தலை உயர்த்திப் பார்க்கையில் தம் காலருகில் ஒரு பெண் படுத்துக்கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உடனே அவர், “யார் நீ?” என்று கேட்க, அவர், “நான் தான் ஐயா! ரூத்து, உம்முடைய அடியாள். நீரே என்னைக் காப்பாற்றும் கடமையுள்ள என் முறை உறவினர். அந்த முறைப்படி என்னை உமது போர்வையால் மூடும்” என்றார்.

9 அதற்கு அவர் “என் மகளே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! நீ இது வரை காட்டிய குடும்பப்பற்றைவிட இப்போது காட்டும் குடும்பப்பற்றே மேலானது என்பேன்.

10 ஏனெனில் பணமுள்ள ஓர் இளைஞனை நீ நாடவில்லை; ஏழையாயினும் இளைஞனே வரவேண்டும் என்று நீ கேட்கவில்லை.

11 என் மகளே, கவலைப்படாதே! என் உறவின் முறையினர் அனைவருக்கும் நீ எவ்வளவு நல்லவள் என்பது தெரியும். நீ கேட்பது அனைத்தையும் நான் செய்து முடிப்பேன்.

12 நான் உன்னைக் காப்பாற்றும் கடமையுள்ள உன்னுடைய முறை உறவினன் என்பது உண்மைதான். எனினும், என்னைவிட இன்னும் நெருங்கிய முறை உறவினர் ஒருவர் உனக்கு இருக்கிறார்.

13 இந்த இரவு கழியும்வரை நீ இங்கேயே இரு. காலையில் அவர் உன்னுடைய முறை உறவினராகத் தம் கடமையை ஏற்றுக் கொள்ள முன்வருவாரானால் நல்லது. அவர் ஏற்றுக் கொள்ளாவிடில், நானே அக்கடமையை ஏற்றுக்கொள்வேன். வாழும் ஆண்டவர் மேல் இதை ஆணையிட்டுக் கூறுகிறேன். பொழுது புலரும்வரை இங்கேயே படுத்திரு” என்றார்.⒫

14 அவ்வாறே ரூத்து பொழுது புலரும்வரை அவர் அருகே படுத்திருந்தார். ஒரு பெண் களத்திற்கு வந்திருந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று போவாசு ஏற்கனவே அவரிடம் சொல்லியிருந்தார். அதற்கிணங்க, ஆள் அடையாளம் கண்டுகொள்ள இயலாத வைகறைப் பொழுதிலேயே ரூத்து எழுந்துவிட்டார்.

15 போவாசு அவரிடம், “உன் போர்வையை விரித்துப்பிடி” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். அவர் ஆறு மரக்கால் எடையுள்ள வாற்கோதுமையை அதில் கொட்டி, அதை அவர் எடுத்துப் போகுமாறு கொடுத்தார்.

16 ரூத்து மாமியாரிடம் வந்ததும், நகோமி, “மகளே, என்ன நடந்தது?” என்று கேட்டார். போவாசு தமக்குச் செய்ததையெல்லாம் ரூத்து கூறினார்.

17 மேலும் அவர், “நான் உம்மிடம் வெறுங்கையோடு வரக்கூடாது என்று அவர் ஆறு மரக்கால் வாற்கோதுமையும் கொடுத்தார்” என்றார்.

18 நகோமி அவரிடம், “மகளே, இது எப்படி முடியும் என்பதை அறியும்வரை காத்திரு. அவர் காலந்தாழ்த்தமாட்டார்; இன்றே இதற்கு நல்லதொரு முடிவு காண்பார்” என்றார்.

Ruth 3 ERV IRV TRV