Psalm 62 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 என்ன நடந்தாலும் பரவாயில்லை என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது. என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
2 எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம். பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.
3 எத்தனை காலம் என்னைத் தாக்குவீர். நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன்.
4 மேன்மையான என் நிலையை எண்ணி அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள்.
5 தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது. தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
6 தேவனே என் அரண். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
7 என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது. அவர் எனக்குப் பலமான அரண். தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
8 ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்! தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்! தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
9 மனிதர்கள்உண்மையாகவே உதவ முடியாது. உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது. தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல் ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள். திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள். நீங்கள் செல்வந்தரானால் அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள்.
11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார். வல்லமை தேவனிடமிருந்து வருகிறது.
12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது. ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.