Numbers 11 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 பின்னர், ஆண்டவரின் செவிகளில் படுமாறு தங்கள் கடினப்பாடுகளைப் பற்றி மக்கள் முறையிட்டனர்; ஆண்டவர் அதைக் கேட்டபோது அவருக்குச் சினம் மூண்டது; ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்தது; பாளையத்தின் கடைக்கோடிப் பகுதிகள் சிலவற்றை அது எரித்துவிட்டது.2 அப்போது மக்கள் மோசேயிடம் அழுதனர்; மோசே ஆண்டவரிடம் மன்றாடவே நெருப்பு அணைந்தது.3 எனவே, அந்த இடத்துக்குத் தபேரா* என்று பெயராயிற்று; ஏனெனில், ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே எரிந்தது.4 மேலும், அவர்களிடையே இருந்த பல இன மக்கள் உணவில் பெரு விருப்புக் கொண்டனர்; இஸ்ரயேல் மக்களும் மீண்டும் அழுது கூறியது: “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்?5 நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது.6 ஆனால், இப்பொழுதோ நம்வலிமை குன்றிப் போயிற்று; மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!”⒫7 மன்னா கொத்துமல்லி விதைபோன்றும் அதன் தோற்றம் முத்துப்போன்றும் இருந்தது.8 மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்; அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்; பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்; அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது.9 இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.⒫10 எல்லா வீடுகளிலுமிருந்த மக்களும் தம்தம் கூடார வாயிலில் இருந்து அழும் குரலை மோசே கேட்டார்; ஆண்டவரின் சினம் கொழுந்துவிட்டெரிந்தது; மோசேக்கும் அது பிடிக்கவில்லை.11 மோசே ஆண்டவரிடம் கூறியது: “உம் அடியானுக்கு ஏன் இந்தக்கேடு? நீர் எனக்குக் கருணை கட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்?12 இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? ‘பாலுண்ணும் குழந்தையை ஏந்திச் செல்பவள் போன்று இவர்களை மார்போடு ஏந்தி, அவர்கள் மூதாதையருக்கு நான் வாக்களித்திருந்த நாட்டுக்குக் கொண்டு செல்’ என்று நீர் சொல்வானேன்?13 இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய இறைச்சிக்கு நான் எங்குபோவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, ‘உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும்’ என்றும் கேட்கிறார்களே!14 நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது; இது எனக்கு மிகப்பெரும் பளு.15 இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்; உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.”⒫16 ஆண்டவர் மோசேயிடம் சொன்னது; இஸ்ரயேல் மூப்பரில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா; அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும், அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்; அவர்களைச் சந்திப்புக் கூடாரத்துக்கு அழைத்து வா; அவர்கள் அங்கே உன்னோடு நிற்கட்டும்.17 நான் இறங்கி வந்து அங்கே உன்னோடு பேசுவேன்; உன்னிலிருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து நான் அவர்களுக்கு அளிப்பேன்; நீ மட்டும் சுமக்காதபடி மக்களின் பளுவை அவர்களும் உன்னோடு சேர்ந்து தாங்குவார்கள்.18 மக்களிடம் சொல்: நாளை உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் இறைச்சி உண்பீர்கள்; ஆண்டவரின் செவிகளில்பட, ‘நமக்கு உண்ணஇறைச்சி யார் தருவார்? எகிப்தில் எங்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்தது!’ என்று அழுதிருக்கிறீர்கள்; எனவே, ஆண்டவர் உங்களுக்கு இறைச்சி தருவார், நீங்கள் உண்பீர்கள்.19 ஒரு நாள், இரண்டு நாள், ஐந்து நாள், பத்து நாள், இருபது நாள் அல்ல,20 அது உங்கள் மூக்கில் வெளி வந்து உங்களுக்குத் திகட்டிப்போகும்வரை ஒரு மாதம் முழுதும் உண்பீர்கள்; ஏனெனில், உங்களிடையே இருக்கும் ஆண்டவரை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள்; ‘ஏன் நாங்கள் எகிப்திலிருந்து வந்தோம்?’ என்று கூறி அவர்முன் நீங்கள் அழுதிருக்கிறீர்கள்.⒫21 ஆனால், மோசே கூறியது: என்னோடிருக்கும் காலாட்படையினர் எண்ணிக்கையோ ஆறு இலட்சம்; ‘அவர்கள் ஒரு மாதம் முழுதும் உண்ண அவர்களுக்கு இறைச்சி தருவேன்’ என்று நீர் சொல்லியிருக்கிறீர்.22 அவர்களுக்குப் போதுமானதாய் இருக்கும்படி ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும் அடிக்கப்படுமோ? அல்லது அவர்களுக்குப் போதுமான அளவில் கடலின் மீன்கள் எல்லாம் அவர்களுக்காகப் பிடித்துச் சேர்க்கப்படுமோ?23 ஆண்டவர் மோசேயிடம், “ஆண்டவரின் கை குறுகிவிட்டதா? இப்போது எனது வார்த்தையின்படியே உங்களுக்கு நடக்குமா, இல்லையா என்று பார்” என்றார்.⒫24 அவ்வாறே, மோசே வெளியே சென்று மக்களிடம் ஆண்டவரின் வார்த்தைகளைக் கூறினார்; மக்களின் மூப்பரில் எழுபது பேரை அழைத்துக் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தி வைத்தார்.25 பின்னர், ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து அவரோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர், அவர்கள் அப்படிச் செய்யவில்லை.26 இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கிவிட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள் மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால், அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை; ஆகவே, அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைத்தனர்;27 ஓர் இளைஞன் ஓடிவந்து மோசேயிடம், “எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்குரைக்கின்றனர்” என்று சொன்னான்.28 உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்றார்.⒫29 ஆனால், மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச்சிறப்பு!” என்றார்.30 பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.31 மேலும், ஆண்டவரிடமிருந்து ஒரு காற்றுப் புறப்பட்டுச் சென்றது; அது கடலிலிருந்து காடைகளை அடித்துக் கொண்டு வந்தது; பாளையத்தின் அருகில் ஒருபுறம் ஒருநாள் பயணத்தொலையிலும்* மறுபுறம் ஒருநாள் பயணத் தொலையிலும் பாளையத்தைச் சுற்றித் தரைக்கு மேல் இரண்டு முழ அளவு உயரத்தில் விழும்படி செய்தது.32 மக்கள் எழுந்து அந்தப் பகல்முழுதும் இரவு முழுதும், மறுநாள் பகல் முழுதும் காடைகளைச் சேர்த்தார்கள். மிகக் குறைவாகச் சேர்த்தவன் பத்து கலம்* அளவு சேர்த்திருந்தான்; அதை அவர்கள் பாளையத்தைச் சுற்றி வெளியே முழுதும் தங்களுக்காகப் பரப்பி வைத்தார்கள்.33 அவர்கள் விழுங்கு முன் பற்களிடையில் இறைச்சி இருக்கையிலேயே ஆண்டவரின் சினம் மக்களுக்கு எதிராக மூண்டது; ஆண்டவர் மாபெரும் வாதையால் மக்களைச் சாகடித்தார்.34 ஆகவே, அந்த இடத்துக்கு கிப்ரோத்து அத்தாவா* என்ற பெயர் வழங்கியது. ஏனெனில், பெருவிருப்புக் கொண்டிருந்த மக்களை அவர்கள் அங்கேயே புதைத்து விட்டனர்.35 கிப்ரோத்து அத்தாவிலிருந்து மக்கள் பயணமாகி அசரோத்துக்கு வந்து, அங்கே தங்கினர்.Numbers 11 ERV IRV TRV