1 ஐயோ! கோடைக்காலத்தின் பழங்களைச் சேர்த்து, திராட்சைபழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; சாப்பிடுவதற்கு ஒரு திராட்சைக்குலையும் என் ஆத்துமா விரும்பிய முதல் அறுப்பின் பழமும் இல்லை.
2 தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனிதர்களில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லோரும் இரத்தம் சிந்தப் பதுங்கியிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.
3 பொல்லாப்புச் செய்வதற்கு அவர்களுடைய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேரும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் தகாத ஆசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாகப் புரட்டுகிறார்கள்.
4 அவர்களில் நல்லவன் முட்செடியைப்போன்றவன், செம்மையானவன் நெரிஞ்சிலைவிட மிகவும் கூர்மையானவன்; உன் காவற்காரர்கள் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு.
5 சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறக்காமல் எச்சரிக்கையாயிரு.
6 மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமியாருக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனிதனுடைய எதிரிகள் அவன் வீட்டார்தானே.
7 நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.
8 என் எதிரியே, எனக்கு விரோதமாகச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
9 நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்கும்வரை அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.
10 உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் எதிரியானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள்.
11 உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போகும்.
12 அந்நாளிலே அசீரியா முதல் எகிப்தின் பட்டணங்கள் வரைக்கும், எகிப்து முதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு மலைமுதல் மறு மலைவரைக்குமுள்ள மக்கள் உன்னிடத்திற்கு வருவார்கள்.
13 ஆனாலும் தன் குடிமக்களினிமித்தமும் அவர்கள் செயல்களுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும்.
14 கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.
15 நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணச்செய்வேன்.
16 அந்நியமக்கள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாகிவிடும்.
17 பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.
18 தமக்குச் சொந்தமானவர்களில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபப்படமாட்டார்.
19 அவர் மீண்டும் நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை நீக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
20 தேவரீர் ஆரம்பநாட்கள்முதல் எங்கள் முன்னோர்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.
Micah 7 ERV IRV TRV