Luke 5 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.⒫4 அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.5 சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.12 இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என மன்றாடினார்.13 இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.14 இயேசு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கட்டளையிட்டார்.15 ஆயினும், இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்து கொண்டிருந்தார்கள்.16 அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.17 ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.18 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர்.19 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டுபோக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.20 அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.21 இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என்று எண்ணிக்கொண்டனர்.22 அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன?23 ‘உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, அல்லது ‘எழுந்து நடக்கவும்’ என்பதா, எது எளிது?24 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன்; நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!” என்றார்.25 உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.26 இதைக் கண்ட யாவரும் மெய்ம் மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக் கொண்டார்கள்.27 அதன்பின் இயேசு வெளியே சென்று சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரி தண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா!” என்றார்.28 அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.29 இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார். வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.30 பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், “வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று கேட்டனர்.31 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.32 நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்றார்.33 பின்பு, அவர்கள் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள்.34 இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா?35 ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.⒫36 அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.”⒫37 “அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும்.38 புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும்.39 பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார்; ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”Luke 5 ERV IRV TRV