1 மேலும் கர்த்தர் மோசேயிடம்,
2 “இவை தொழுநோயாளிகள் குணமாவதற்கும், அவர்களைச் சுத்தப்படுத்துவதற்கு முரிய விதி முறைகளாகும். “தொழுநோயுள்ள ஒருவனை ஆசாரியன் சோதித்துப் பார்க்க வேண்டும்.
3 ஆசாரியன் கூடாரத்திற்கு வெளியே போய் அவன் நோய் குணமாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.
4 அவனது நோய் குணமாகியிருந்தால் அவனிடம் கீழ்க்கண்டவற்றை செய்யும்படி கூறவேண்டும். முதலில் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டைகளையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வரவேண்டும்.
5 பின்னர், ஆசாரியன் அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும்.
6 அடுத்து ஆசாரியன், உயிருள்ள குருவியையும் அதோடு கேதுரு கட்டையையும் சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து அதில் கொல்லப்பட்டக் குருவியின் இரத்தத்தைத் தோய்க்க வேண்டும்.
7 பின் ஆசாரியன் நோய் நீங்கப்பட்டவனின் மேல் ஏழுதரம் தெளித்து அவனைச் சுத்தப்படுத்த வேண்டும். பிறகு ஆசாரியன் அவனைத் தீட்டில்லாதவன் என அறிவிக்க வேண்டும். பின் ஆசாரியன் திறந்த நிலப்பரப்பிற்கு சென்று உயிருள்ள குருவியை விட்டுவிட வேண்டும்.
8 “பிறகு அவன் தன் ஆடைகளை துவைத்து, தன் முடியை மழித்துக்கொண்டு, தண்ணீரில் குளிக்க வேண்டும். பின்னரே அவன் சுத்தமாவான். அதன் பின் அவன் கூடாரத்திற்குள் செல்லலாம். ஆனால் அவன் ஏழு நாட்கள் கூடாரத்திற்கு வெளியிலேயே தங்கவேண்டும்.
9 ஏழாவது நாள் அவன் தன் தலை முடி, தாடி, புருவம் என அனைத்து முடியையும் மழித்துவிட வேண்டும். பின் தன் ஆடைகளைத் துவைத்துக் குளிக்க வேண்டும். இதன்பின் அவன் சுத்தமாவான்.
10 “எட்டாவது நாள், எவ்விதமான குறையு மற்ற இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு வயதான எக்குறையுமில்லாத பெண் ஆட்டுக்குட்டியையும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவன் தானியக் காணிக்கைக்காக கொண்டு வரவேண்டும். இருபத்து நான்கு கிண்ணங்கள் எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவையும், ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டு வரவேண்டும்.
11 அவனை தீட்டில்லாதவன் என்று அறிவித்த அதே ஆசாரியன் நோயுற்றவனையும் அவனது பலிப் பொருட்களையும் கர்த்தருக்கு முன்னால் ஆசரிப்புக் கூடாரத்திற்கு கொண்டு வர வேண்டும்.
12 ஆசாரியன் ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை குற்ற பரிகார பலியாக செலுத்த வேண்டும். அவன் அதனையும் சிறிது எண்ணெயையும் அசைவாட்டும் பலியாகப் பயன்படுத்த வேண்டும்.
13 பிறகு ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை பாவப் பரிகார பலியையும் தகனபலியையும் கொல்லுகிற பரிசுத்த இடத்தில் கொல்ல வேண்டும். குற்ற நிவாரண பலியானது பாவப்பரிகார பலி போன்றதாகும். அது ஆசாரியனுக்குரியது. அது மிகவும் பரிசுத்தமானது.
14 “ஆசாரியன் குற்ற பரிகார பலியின் இரத்தத்தில் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைச் சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது நுனியில் தடவ வேண்டும். அது அவனைச் சுத்தமாக்கும். பிறகு கொஞ்சம் இரத்தத்தை அவனது வலது கையின் பெருவிரலிலும், வலதுகால் பெரு விரலிலும் தடவ வேண்டும்.
15 மேலும் ஆசாரியன் எண்ணெயை எடுத்து தனது இடது உள்ளங்கையில் ஊற்றி
16 வலது கை விரலில் தொட்டு ஏழுமுறை கர்த்தரின் சந்நிதியில் தெளிக்க வேண்டும்.
17 பிறகு ஆசாரியன் தன் உள்ளங்கையில் உள்ள மீதி எண்ணெயை எடுத்து சுத்திகரிக்கப்படவேண்டியவனின் வலது காது நுனியிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவ வேண்டும்.
18 மேலும் மீதியுள்ள எண்ணெயை அவனது தலையிலே தடவ வேண்டும். இவ்வாறு, ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அவனைச் சுத்தப்படுத்தி விடுகிறான்.
19 “பின் ஆசாரியன் பாவப்பரிகார பலியைச் செலுத்தி சுத்திகரிக்கப்படவேண்டியவனின் தீட்டு நீங்க அவனுக்குப் பாவப்பரிகாரம் செய்துவிட வேண்டும்.
20 பின்பு தகன பலிக்குரிய மிருகத்தைக் கொன்று அதனோடு தானியக் காணிக்கையையும் பலிபீடத்தின்மேல் வைத்து அவனுக்காகப் பாவப்பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது அவன் சுத்தமாவான்.
21 “ஆனால் ஒரு ஏழையால் இத்தகைய பலியைக் கொடுக்க இயலாது. அப்போது அவன் ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை மட்டும் கொண்டு வந்தால் போதும். அது அசைவாட்டும் பலியாகும். ஆசாரியன் இதன் மூலம் அவனைச் சுத்தப்படுத்தலாம். இதற்கு ஆசாரியன் எண்ணெயுடன் கலந்த மிருதுவான மாவிலே 8 கிண்ணம் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தானியக் காணிக்கைக்காக உபயோகப்படுத்தப்படும்.
22 இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரு புறாக் குஞ்சுகளையாவது கொடுக்க வேண்டும். இவற்றில் ஒன்று பாவப்பரிகார பலிக்கும் இன்னொன்று தகன பலிக்கும் உரியது.
23 “எட்டாவது நாளில் மேற்கண்ட எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு அவன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் வர வேண்டும். அவை கர்த்தருக்கு முன்பு அளிக்கப்பட வேண்டும். அதனால் அவன் சுத்தமாவான்.
24 ஆசாரியன் ஆண் ஆட்டுக்குட்டியைக் குற்றப்பரிகார பலிக்காக எடுத்துக்கொள்வான். இதையும் ஆழாக்கு எண்ணெயையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக செலுத்துவான்.
25 பிறகு அந்த ஆண் ஆட்டுக்குட்டியை குற்றப்பரிகார பலிக்காகக் கொல்லுவான். அதன் இரத்தத்தைக் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காதின் நுனியிலும், வலதுகை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவுவான்.
26 ஆசாரியன் தனது இடது உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு
27 பின் வலது கை விரலால் தொட்டு கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிப்பான்.
28 மிச்சமிருக்கிற எண்ணெயைத் தொட்டு இரத்தத்தை தடவிய இடங்களில் எல்லாம் தடவுவான். அதனை அவனின் வலது காதின் நுனியிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவுவான்.
29 உள்ளங்கையில் மேலும் மிச்சமிருக்கிற எண்ணெயை அவனது தலையில் தடவுவான். இவ்வாறு ஆசாரியன் அவனைக் கர்த்தருக்கு முன்பு சுத்தப்படுத்த வேண்டும்.
30 “பிறகு ஆசாரியன் ஒரு காட்டுப் புறா வையாவது, புறாக்குஞ்சையாவது பலியிட வேண்டும். (ஒருவன் எவற்றைக் கொடுக்க முடியுமோ அவற்றையே காணிக்கையாக அளிக்க வேண்டும்.)
31 இவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். தானியக் காணிக்கையோடு இதனைச் சேர்த்துச் செலுத்த வேண்டும். இவ்வாறு ஆசாரியன் அவனைக் கர்த்தருக்கு முன்பு சுத்திகரிப்பு செய்யவேண்டும். அவனும் சுத்திகரிக்கப்படுவான்” என்றார்.
32 தொழுநோயுற்றவன் குணம் அடைந்தபின் சுத்திகரிப்புச் செய்யவேண்டிய விதிகள் இவையாகும். முறையான பலிகளைத் தரமுடியாதவர்கள் இவ்வாறு சில விதிகளைக் கடைப்பிடிக்கலாம் என்று கூறினார்.
33 மேலும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் பார்த்து,
34 “நான் உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் அங்கு போய்ச் சேர்ந்த பின்பு உங்களில் சிலரது வீட்டிலே தொழுநோய் ஏற்படும்படி செய்தால்
35 அப்போது அந்த வீட்டிற்கு உரியவன் ஆசாரியனிடம் வந்து, ‘என் வீட்டில் தொழுநோய் போன்று ஒன்று இருப்பதைப் பார்த்தேன்’ என்று சொல்ல வேண்டும்.
36 “பிறகு அந்த ஆசாரியன், வீட்டில் உள்ள யாவற்றையும் வெளியே எடுத்துச் செல்ல ஜனங்களிடம் கூறவேண்டும். ஆசாரியன் அந்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீட்டுக்குரியவை என்று சொல்லத் தேவை இருக்காது. வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே வைத்த பிறகுதான் ஆசாரியன் வீட்டிற்குள் நுழைய வேண்டும்.
37 ஆசாரியன் அந்த வீட்டிற்குள் நுழைந்து தொழுநோயுள்ள இடங்களைக் கவனித்து பார்க்க வேண்டும். அப்போது சுவரில் கொஞ்சம் பச்சையும், சிவப்புமான குழிகள் சுவற்றின் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இருப்பதைக் கண்டால்,
38 ஆசாரியன் வெளியே வந்து அவ்வீட்டை ஏழு நாட்கள் பூட்டிவைக்க வேண்டும்.
39 “ஏழாம் நாள் ஆசாரியன் திரும்பப் போய், சோதித்துப் பார்க்க வேண்டும். தோஷம் வீட்டுச் சுவர்களில் பரவியிருந்தால்
40 ஆசாரியன் தோஷம் படிந்த கற்களைச் சுவற்றிலிருந்து பெயர்த்தெடுத்துப் பட்டணத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட அசுத்தமான இடத்திலே கொண்டு போய் போடச் சொல்ல வேண்டும்.
41 வீட்டினுள்ளே தரையைப் பெயர்த்து, அதையும் வெளியே அசுத்தமான இடத்தில் போட்டுவிட வேண்டும்.
42 பிறகு சுவரில் புதிய கற்களை வைத்துப் பூசவேண்டும்.
43 “கற்களைப் பெயர்த்து வீட்டைச் செதுக்கி புதிதாய்ப் பூசின பிறகும் நோய் திரும்பவும் வந்தால்,
44 ஆசாரியன் போய் அந்த வீட்டைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த நோய் மேலும் சுவரில் பரவி இருந்தால் அதனை வீட்டை அரிக்கிற தொழுநோயாகக் கருதவேண்டும். அது தீட்டுள்ளதாக இருக்கும்.
45 எனவே வீடு முழுவதையும் இடித்து அதன் கற்களையும் மரங்களையும் காரையையும் ஊருக்கு வெளியே அசுத்தமான தனி இடத்தில் கொட்டிவிட வேண்டும்.
46 அந்த வீட்டிற்குள் நுழைகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்.
47 அந்த வீட்டில் எவனாவது உண்டாலோ, உறங்கினாலோ, அவனும் தனது ஆடையைத் துவைக்க வேண்டும்.
48 “புதிய கற்களும் பூச்சும் முடிந்தபிறகு அவ்வீட்டை ஆசாரியன் சோதிக்கும்போது நோய் பரவியதற்கான அறிகுறி எதுவும் இல்லாவிட்டால் அவ்வீடு தீட்டு இல்லாததாய் ஆயிற்று என்று அறிவிக்க வேண்டும்.
49 “பிறகு அந்த வீட்டை சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்கு ஆசாரியன் இரண்டு குருவிகளையும், கேதுரு கட்டையையும், ஒரு துண்டு சிவப்புத் துணியையும், ஈசோப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
50 அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும்.
51 பிறகு கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்தில் இவற்றை மூழ்க வைக்க வேண்டும். பிறகு அந்த இரத்தத்தை ஆசாரியன் வீட்டின்மேல் ஏழுதரம் தெளிக்கவேண்டும்.
52 குருவியின் இரத்தம், ஊற்று தண்ணீர், உயிருள்ள குருவி, ஈசோப்பு, கேதுருக் கட்டை, சிவப்பு நூல் போன்றவற்றால் வீட்டின் தீட்டினைக் கழிக்க வேண்டும்.
53 பின் உயிருள்ள குருவியை நகருக்கு வெளியே விட்டுவிட வேண்டும். இம்முறையில் ஆசாரியன் வீட்டைச் சுத்தம் செய்வான். பிறகு வீடு சுத்தமாகும்” என்று கூறினார்.
54 துணிகளிலோ அல்லது வீட்டிலோ தோஷம் பிடித்தல், தொழுநோய், ஆகியன உண்டாகும்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே.
56 வீக்கம், அசறு, தோலில் வெள்ளைப் புள்ளிகள் உண்டாகுதல் ஆகியவற்றின்போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே.
57 பொருட்கள் எப்பொழுது சுத்தமாயுள்ளன, எப்பொழுது சுத்தமற்றவையாக உள்ளன எனக் கற்பிப்பதற்குரிய விதிகள் இவைகளே.
Leviticus 14 ERV IRV TRV