1 இஸ்ரவேலர் எல்லோரும் மிஸ்பா நகரில் கர்த்தருக்கு முன்பாக நிற்பதற்காக ஒன்று கூடினார்கள். தாண் முதல் பெயர்செபா வரை இஸ்ரவேலின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், கீலேயாத்திலுள்ள இஸ்ரவேலரும் அங்குக் கூடினார்கள்.
2 இஸ்ரவேல் கோத்திரங்களின் எல்லாத் தலைவர்களும் அங்கிருந்தனர். தேவனுடைய ஜனங்களின் கூட்டத்தில் அவரவருக்குரிய இடங்களில் அமர்ந்தனர். அங்கு 4,00,000 வீரர்கள் தங்கள் வாளோடு நின்றனர்.
3 பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள் இஸ்ரவேலர் மிஸ்பாவில் ஒன்று கூடியிருப்பதை அறிந்தனர். இஸ்ரவேலர், “இந்த கொடிய காரியம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறு” என்றனர்.
4 எனவே கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் நடந்ததை விளக்கினான். அவன், “எனது வேலைக்காரியும் நானும் பென்யமீன் பகுதியிலுள்ள கிபியா நகரத்திற்கு வந்து, அங்கு இரவைக் கழித்தோம்.
5 ஆனால் இரவில் கிபியா நகரத்தின் தலைவர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டைச் சூழ்ந்து என்னைக் கொல்ல விரும்பினார்கள். அவர்கள் என் வேலைக்காரியை கற்பழித்தனர். அவள் மரித்தாள்.
6 எனவே நான் என் பணிப் பெண்ணை எடுத்துச் சென்று அவளைத் துண்டுகளாக்கினேன். பின் நான் ஒவ்வொரு துண்டையும் இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் அனுப்பினேன். நாம் பெற்ற தேசங்களுக்கெல்லாம் 12 துண்டுகளையும் அனுப்பி வைத்தேன். இஸ்ரவேலில் பென்யமீன் ஜனங்கள் இத்தகைய கொடிய காரியத்தைச் செய்ததால் நான் இவ்வாறு செய்தேன்.
7 இப்போது இஸ்ரவேலின் மனிதர்களே பேசுங்கள். நாம் செய்ய வேண்டியதென்ன என்பது பற்றிய உங்கள் முடிவைக் கூறுங்கள்” என்றான்.
8 அப்போது எல்லா ஜனங்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர். அவர்கள் ஒருமித்த குரலில், “யாரும் வீட்டிற்குத் திரும்பமாட்டோம். ஆம், யாரும் வீட்டிற்கு திரும்பிப் போக வேண்டியதில்லை.
9 இப்போது கிபியா நகரத்திற்கு இதனைச் செய்வோம். சீட்டுப்போட்டு தேவன் அவர்களுக்குச் செய்ய நினைப்பதென்ன என்பதைக் கண்டுபிடிப்போம்.
10 இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலிருந்தும் 100 பேரில் 10 ஆட்களைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு 1,000 பேரிலும் 100 பேரைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு 10,000 பேரிலும் 1,000 பேர்களைத் தேர்ந்தெடுப்போம். நாம் தேர்ந்தெடுத்தோர் ஆயுதங்களைக் கொண்டு வருவார்கள். இந்த சேனை பென்யமீன் பகுதியிலுள்ள கிபியா நகரத்திற்குச் செல்லும். இஸ்ரவேல் ஜனங்களிடையே அவர்கள் செய்தக் கொடிய தீமைக்காக அந்த ஜனங்களை சேனை தண்டிக்கும்” என்றனர்.
11 எனவே இஸ்ரவேலர் கிபியா நகரில் கூடினார்கள். தாங்கள் செய்வதில் எல்லோரும் ஒருமனப்பட்டிருந்தனர்.
12 இஸ்ரவேல் கோத்திரங்கள் சேர்ந்து பென்யமீன் கோத்திரம் எங்கும் பின்வரும் செய்தியுடன் ஒருவனை அனுப்பினார்கள். “உங்கள் ஆட்களில் சிலர் இந்த கொடிய தீமையைச் செய்ததேன்?
13 கிபியா நகரிலிருந்து அந்த துன்மார்க்கரை எங்களிடம் அனுப்புங்கள். அவர்களைக் கொல்லும்படிக்கு எங்களிடம் ஒப்படையுங்கள். இஸ்ரவேலரிடமிருந்து தீமையை அகற்ற வேண்டும்.” ஆனால் பென்யமீன் கோத்திரத்தினர் பிற இஸ்ரவேலரிடமிருந்து வந்த செய்தியைப் பொருட்படுத்தவில்லை.
14 பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள் தங்கள் நகரங்களை விட்டு, கிபியா நகரத்திற்குச் சென்றனர். இஸ்ரவேலின் பிற கோத்திரங்களுடன் போரிட அவர்கள் கிபியாவுக்குச் சென்றனர்.
15 பென்யமீன் கோத்திரத்தினர் போருக்குப் பயிற்சியளிக்கப்பட்ட 26,000 வீரர்களை ஒன்றாகக் கூட்டினார்கள். அவர்களிடம் கிபியாவில் பயிற்சி பெற்ற 700 வீரர்களும் இருந்தனர்.
16 இடதுகை பழக்கமுள்ள 700 பயிற்சி பெற்ற வீரர்களும் இருந்தனர். அவர்கள் கவண் கல்லை மிகவும் திறமையாகப் பயன்படுத்தக்கூடியவர்கள். ஒரு மயிரிழையும் தவறாது. அவர்கள் கவண் கல்லைப் பயன்படுத்துவதற்கு அறிந்திருந்தனர்.
17 பென்யமீன் அல்லாத மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களும் 4,00,000 வீரர்கனளத் திரட்டினார்கள். அந்த 4,00,000 மனிதர்களும் வாளேந்தியிருந்தனர். ஒவ்வொருவனும் பயிற்சிப் பெற்ற வீரனாக இருந்தான்.
18 இஸ்ரவேலர் பெத்தேல் நகரத்திற்குச் சென்றனர். பெத்தேலில் அவர்கள் தேவனிடம், “எந்தக் கோத்திரத்தினர் முதலில் பென்யமீன் கோத்திரத்தைத் தாக்கவேண்டும்?” என்று கேட்டனர். கர்த்தர், “யூதா முதலில் போகட்டும்” என்றார்.
19 மறுநாள் காலையில் இஸ்ரவேலர் எழுந்தனர். கிபியா நகருக்கருகே அவர்கள் ஒரு முகாம் அமைத்தனர்.
20 அப்போது இஸ்ரவேல் சேனை பென்யமீன் சேனையோடுப் போருக்குச் சென்றது. கிபியா நகரில் இஸ்ரவேல் சேனை பென்யமீன் சேனையை எதிர்த்துப் போரிடுவதற்குத் தயாராயிற்று.
21 அப்போது பென்யமீன் சேனை கிபியா நகரத்திலிருந்து வெளி வந்தது. அந்த நாளில் நடந்த போரில் பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையின் 22,000 மனிதர்களைக் கொன்றது.
22 இஸ்ரவேலர் கர்த்தரிடம் சென்றனர். மாலைவரைக்கும் அழுதனர். அவர்கள் கர்த்தரை நோக்கி, “பென்யமீன் ஜனங்களோடு மீண்டும் போரிடுவதற்குச் செல்ல வேண்டுமா? அவர்கள் எங்கள் உறவினர்கள்” என்றனர். கர்த்தர், “போய், அவர்களுக்கெதிராகப் போர் செய்யுங்கள்” என்று பதில் கூறினார். இஸ்ரவேல் மனிதர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினார்கள். மீண்டும் போருக்கு முதல்நாளைப் போலவே சென்றனர்.
24 இஸ்ரவேல் சேனை பென்யமீன் படையை நெருங்கிற்று. அது போரின் இரண்டாம்நாள்.
25 பென்யமீன் சேனை கிபியா நகரிலிருந்து இஸ்ரவேல் சேனையைத் தாக்க வந்தது. இம்முறை பென்யமீன் சேனை மேலும் இஸ்ரவேல் சேனையின் 18,000 மனிதர்களைக் கொன்றது. இஸ்ரவேலர் படையிலிருந்த அவ்வீரர்கள் அனைவரும் பயிற்சி பெற்றிருந்தனர்.
26 பின் இஸ்ரவேலர் பெத்தேல் நகரம் வரைக்கும் சென்றனர். அந்த இடத்தில் அமர்ந்திருந்து கர்த்தரை நோக்கி அழுதனர். அன்று மாலைவரை நாள் முழுவதும் அவர்கள் எதுவும் உண்ணவில்லை. அவர்கள் கர்த்தருக்குத் தகன பலியையும், சமாதான பலிகளையையும் செலுத்தினார்கள்.
27 இஸ்ரவேலர் கர்த்தரிடம் ஒரு கேள்வி கேட்டனர். (அந்நாளில் பெத்தேலில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. பினெகாஸ் என்பவன் தேவனுடைய ஆசாரியனாக இருந்தான்.
28 பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசார் ஆரோனின் மகன்.) இஸ்ரவேலர், “பென்யமீன் ஜனங்கள் எங்கள் உறவினர். நாங்கள் அவர்களோடு போரிட மீண்டும் போக வேண்டுமா? அல்லது போரை நிறுத்த வேண்டுமா?” என்று கேட்டனர். கர்த்தர், “போங்கள், நாளை அவர்களை வெல்வதற்கு உங்களுக்கு உதவுவேன்” என்று பதில் உரைத்தார்.
29 பின்பு இஸ்ரவேல் சேனை கிபியா நகரைச் சுற்றிலும் சிலரை ஒளித்து வைத்தது.
30 மூன்றாம் நாள் இஸ்ரவேல் சேனை கிபியா நகரை எதிர்த்துப் போரிடச் சென்றது. அவர்கள் முன்பு செய்தது போலவே போருக்குத் தயாராயினார்கள்.
31 பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையோடு போர் செய்வதற்காக கிபியா நகரை விட்டு வெளியே வந்தது இஸ்ரவேல் சேனை பின்னிட்டுத் தங்களைப் பென்யமீன் சேனை துரத்தும்படி செய்தது. இவ்வாறாக நகரை விட்டு சேனை வெகு தூரம் வரும்படியாக பென்யமீன் சேனைக்கு எதிராக தந்திரம் செய்யப்பட்டது. ஏற்கெனவே செய்தது போன்று பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையில் சில மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்தனர். சுமார் 30 இஸ்ரவேல் மனிதர்களை அவர்கள் கொன்றனர். வயல்களில் சிலரையும், பாதைகளில் சிலரையும் கொன்றனர். ஒரு பாதை பெத்தேல் நகரத்திற்கும் மற்றொருபாதை கிபியாவிற்கும் சென்றது.
32 பென்யமீன் மனிதர்கள், “முன்பு போலவே நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம்” என்றனர். இஸ்ரவேல் மனிதர் ஓடிப்போய்க் கொண்டிருந்தார்கள், ஆனால் அது ஓர் தந்திரமே. பென்யமீன் மனிதர்களை நகரத்திலிருந்து வெகுதூரத்திற்கும், பெரும் பாதைகளுக்கும் அழைத்துவர விரும்பினர்.
33 எனவே எல்லா மனிதரும் ஓடிவிட்டனர். பாகால் தாமார் என்னுமிடத்தில் அவர்கள் நின்றனர். கிபியாவிற்கு மேற்கே இஸ்ரவேலரில் சிலர் ஒளிந்து கொண்டிருந்தனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து ஓடிவந்து, கிபியாவைத் தாக்கினார்கள்.
34 கிபியா நகரை இஸ்ரவேலின் 10,000 வீரர்கள் தாக்கினார்கள். போர் கடுமையாக இருந்தது. ஆனால் பென்யமீன் சேனை தங்களுக்கு நேரவிருக்கும் கொடுமையானக் காரியத்தை அறியாதிருந்தார்கள்.
35 கர்த்தர் இஸ்ரவேல் சேனையைப் பயன்படுத்தி, பென்யமீன் சேனையைத் தோற்கடித்தார். அந்த நாளில் இஸ்ரவேல் படை பென்யமீன் சேனையிலிருந்து 25,100 வீரரைக் கென்றனர். அவர்கள் போர்ப்பயிற்சி பெற்றிருந்தனர்.
36 பென்யமீன் ஜனங்கள் தாம் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டனர். இஸ்ரவேல் சேனை பின்னோக்கிச் சென்றது. அவர்கள் திடீர் தாக்குதலை நம்பியிருந்ததால் அவ்வாறு பின்னே சென்றார்கள்.
37 மறைந்திருந்த மனிதர்கள் கிபியா நகரத்திற்கு விரைந்தனர். அவர்கள் நகரெங்கும் சென்று அங்கிருந்தோரை வாளால் கொன்றனர்.
38 ஒளிந்திருந்த மனிதர்கள் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை இஸ்ரவேல் வகுத்திருந்தனர். ஒளித்திருந்த மனிதர்கள் ஒரு விசேஷ அடையாளத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள். ஒரு பெரும் புகை மண்டலத்தை எழுப்புமாறு எதிர்பார்க்கப்பட்டனர்.
39 பென்யமீன் சேனை சுமார் 30 இஸ்ரவேல் படைவீரர்களைக் கொன்றிருந்தது. எனவே பென்யமீன் ஆட்கள், “முன்பு போலவே, நாங்கள் வெல்கிறோம்” என்றனர். அப்போது நகரிலிருந்து புகையெழுந்தது. பென்யமீன் ஜனங்கள் திரும்பி, புகையைப் பார்த்தனர். நகரம் முழுவதும் எரிய ஆரம்பித்தது. அப்போது இஸ்ரவேல் சேனையினர் ஓடுவதை நிறுத்தினார்கள். இதைக் கண்ட பென்யமீன் மனிதர்கள் பயந்தனர். அப்பொழுது தமக்கு நேர்ந்த கொடிய நிலையை அறிந்தனர்.
42 எனவே பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையைக் கண்டு ஓட ஆரம்பித்தது. அவர்கள் பாலைவனத்தை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களால் போரிடுவதை நிறுத்த முடியவில்லை. இஸ்ரவேலர் நகரங்களிலிருந்து வந்து அவர்களைக் கொன்றனர்.
43 இஸ்ரவேலர் பென்யமீன் மனிதரைச் சூழ்ந்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தனர். அவர்களை ஓய்வெடுக்க விடவில்லை. கிபியாவின் கிழக்குப் பகுதியில் அவர்களைத் தோற்கடித்தனர்.
44 பென்யமீன் சேனையைச் சார்ந்த 18,000 துணிவுமிக்க, பலமுள்ள வீரர்கள் கொல்லப்பட்டனர்.
45 பென்யமீன் சேனை திரும்பி, பாலைவனத்திற்கு நேரே ஓடினார்கள். அவர்கள் ரிம்மோன் பாறை எனப்படும் இடத்திற்கு ஓடினார்கள். ஆனால் இஸ்ரவேல் சேனையினர் பெரும் பாதைகளில் 5,000 பென்யமீன் வீரர்களைக் கொன்றனர். பென்யமீன் மனிதர்களை அவர்கள் துரத்திக் கொண்டேயிருந்தனர். அவர்களைக் கீதோம் வரைக்கும் துரத்தினார்கள். அவ்விடத்தில் இஸ்ரவேல் சேனை இன்னும் 2,000 வீரர்களைக் கொன்றது.
46 அந்த நாளில் பென்யமீன் படையிலுள்ள 25,000 பேர் கொல்லப்பட்டனர். அம்மனிதர்கள் வாளைச் சுழற்றி மிகவும் துணிவுடன் போர் செய்தனர்.
47 ஆனால் பென்யமீனைச் சேர்ந்த 600 பேர் பாலைவனத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் ரிம்மோன் பாறை என்னுமிடத்திற்குச் சென்று நான்கு மாதங்கள் அங்குத் தங்கினார்கள்.
48 இஸ்ரவேல் ஆட்கள் பென்யமீன் தேசத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கடந்து வந்த நகரங்களிலுள்ள மனிதர்களைக் கொன்றார்கள். அவர்கள் மிருகங்களையெல்லாம் கொன்றனர். அகப்பட்ட பொருட்களையெல்லாம் அழித்தனர். அவர்கள் நுழைந்த நகரங்களையெல்லாம் எரித்தனர்.
Judges 20 ERV IRV TRV