1 இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுக்கு கீழ்ப்படியாமலிருந்தனர். சிம்ரி என்பவனின் பேரனும், கர்மீ என்பவனின் மகனுமாகிய யூதா கோத்திரத்தைச் சார்ந்த ஆகான் என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் அழிக்கப்பட வேண்டிய சில பொருட்களை எடுத்து வைத்திருந்தான். எனவே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தர் மிகுந்த கோபமடைந்தார்.
2 அவர்கள் எரிகோவை தோற்கடித்த பிறகு, யோசுவா சில மனிதரை ஆயீக்கு அனுப்பினான். ஆயீ, பெத்தாவேனுக்கு அருகில், பெத்தேலுக்குக் கிழக்காக உள்ளது. யோசுவா அவர்களிடம், “ஆயீக்குச் சென்று அவ்விடத்தின் பெலவீனங்களைத் தெரிந்து வாருங்கள்” என்றான். அம்மனிதர்களும் அந்த இடத்தை உளவறிந்து வருவதற்கு சென்றனர்.
3 பின்னர் அவர்கள் யோசுவாவிடம் திரும்பி வந்து, “ஆயீ ஒரு பலவீனமான பகுதி. அவ்விடத்தை தோற்கடிக்க நம் ஜனங்கள் அனைவரும் தேவையில்லை. 2,000 அல்லது 3,000 ஆட்களை அங்கு போர்செய்ய அனுப்புங்கள். படை முழுவதையும் பயன்படுத்த வேண்டியிராது. நம்மை எதிர்த்துப் போர் செய்வதற்குச் சில மனிதர்களே உள்ளனர்” என்றார்கள்.
4 எனவே சுமார் 3,000 மனிதர் ஆயீக்குப் போனார்கள். ஆனால் ஆயீயின் ஜனங்கள், இஸ்ரவேலரில் சுமார் 36 பேரைக் கொன்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் ஓடிவிட்டனர். நகரவாசலிலிருந்து இஸ்ரவேலரை மலைச் சரிவு வரைக்கும் துரத்தினார்கள். ஆயீயின் ஜனங்கள் அவர்களைப் பயங்கரமாகத் தோற்கடித்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் இதைக் கண்டு அஞ்சி, துணிவிழந்தனர்.
6 யோசுவா இதைக் கேட்டபோது, துயரமுற்றுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக விழுந்து வணங்கினான். மாலைவரைக்கும் அங்கேயே இருந்தான். இஸ்ரவேலரின் தலைவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்கள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதற்கு சாம்பலைத் தலையில் தூவிக்கொண்டனர்.
7 யோசுவா, “எனது ஆண்டவராகிய கர்த்தாவே! எங்கள் ஜனங்களை நீர் யோர்தான் நதியைக் கடக்க வைத்தீர். ஏன் எங்களை இத்தனை தூரம் அழைத்து வந்து எமோரியரால் அழிவுற வைக்கிறீர்? நாங்கள் திருப்தியோடு யோர்தானின் அக்கரையில் வாழ்ந்திருக்கலாம்!
8 கர்த்தாவே! எனது உயிரின் மீது ஆணையிடுகிறேன், நான் சொல்லக்கூடியது எதுவுமில்லை. இஸ்ரவேலரைப் பகைவர்கள் சூழ்ந்துள்ளனர்.
9 கானானியரும் இந்நாட்டின் எல்லா ஜனங்களும் நடந்ததை அறிவார்கள். அவர்கள் எங்களைத் தாக்கி அழிப்பார்கள்! அப்போது உமது மேலான பெயரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்வீர்” என்றான்.
10 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்துகிடக்கிறாய்? எழுந்து நில்!
11 இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவர்கள் கீழ்ப்படியுமாறு கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறினார்கள். அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை திருடிவிட்டனர். அவர்கள் பொய் கூறிவிட்டனர். அப்பொருட்களை அவர்களுக்காக எடுத்துள்ளனர்.
12 அதனால் தான் இஸ்ரவேல் படை போரிலிருந்து புற முதுகு காட்டித் திரும்பிவிட்டது. அவர்கள் தவறு செய்ததாலேயே அவ்விதம் நடந்தது. நான் உங்களுக்கு உதவமாட்டேன். நீங்கள் அழிக்கவேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்கமாட்டேன்.
13 “இப்போதும் போய், ஜனங்களை பரிசுத்தப்படுத்து. ஜனங்களிடம், ‘உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நாளைக்குத் தயாராகுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இங்கு சிலர், கர்த்தர் அழிக்குமாறு கட்டளையிட்ட பொருட்களை வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் பகைவர்களை ஒருபோதும் வெல்ல முடியாமல் போகலாம்.
14 “‘நானை காலையில் கர்த்தரின் முன்பாக எல்லோரும் வரவேண்டும். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன்பு நிற்கும்போது, கர்த்தர் ஒரு கோத்திரத்தாரைத் தேர்ந்தெடுப்பார். அப்போது அந்தக் கோத்திரத்தினர் கர்த்தரின் முன் நிற்கவேண்டும். கர்த்தர் அந்தக் கோத்திரத்திலிருந்து ஒரு வம்சத்தை தேர்ந்தெடுப்பார். பின் அவ்வம்சத்திலிருந்து கர்த்தர் ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பார். பின் கர்த்தர் அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் பார்ப்பார்.
15 அழிக்க வேண்டிய பொருளை வைத்திருக்கிறவன் அப்போது அகப்படுவான். அம்மனிதனும், அவனுக்குச் சொந்தமானவையெல்லாம் அவனோடு நெருப்பினால் அழிக்கப் படவேண்டும். அம்மனிதன் கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை மீறினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகுந்த தீமையான காரியத்தைச் செய்தான்!’ என்று சொல்” என்றார்.
16 மறுநாள் அதிகாலையில், யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தரின் முன்னால் நிற்கும்படி செய்தான். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன் நின்றனர். கர்த்தர் யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்
17 எனவே அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த எல்லாக் குழுக்களும் கர்த்தருக்கு முன்னே நின்றனர். கர்த்தர் சேரா குழுவினரைத் தேர்ந்தெடுத்தார். பின் சேரா குழுவினரின் எல்லாக் குடும்பத்தாரும் கர்த்தருக்கு முன்னே நின்றார்கள். சிம்ரியின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
18 யோசுவா அக்குடும்பத்தின் ஆண்களையெல்லாம் கர்த்தருக்கு முன் வருமாறு கூறினான். கர்த்தர் கர்மீயின் மகன் ஆகானைத் தேர்ந்தெடுத்தார். (கர்மீ சிம்ரியின் மகன், சிம்ரி சேராவின் மகன்.)
19 யோசுவா ஆகானை நோக்கி, “மகனே, உனது விண்ணப்பங்களைச் சொல். நீ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தி, உனது பாவங்களை அவரிடம் கூறு. நீ செய்ததை எனக்குக் கூறு. என்னிடமிருந்து எதையும் மறைக்காதே!” என்றான்.
20 ஆகான், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தது உண்மை. நான் செய்தது இதுவே:
21 நாம் எரிகோவையும் அந்நகரத்தின் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டபோது பாபிலோனிலிருந்து கொண்டுவந்த அழகிய மேலாடையையும், சுமார் ஐந்து பவுண்டு வெள்ளியையும், ஒரு பவுண்டு பொன்னையும் கண்டேன். அவற்றை எடுத்துக் கொண்டேன். அப்பொருள்கள் எனது கூடாரத்திற்கடியிலுள்ள நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். மேலாடையின் கீழே வெள்ளி இருக்கிறது” என்றான்.
22 எனவே யோசுவா சிலரைக் கூடாரத்திற்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்திற்கு ஓடிச் சென்று, அப்பொருட்கள் கூடாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். மேலாடையின் கீழே வெள்ளி இருந்தது.
23 அவர்கள் அப்பொருட்களைக் கூடாரத்திற்கு வெளியே எடுத்து வந்து, அவற்றை யோசுவாவிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கொண்டு சென்று, கர்த்தருக்கு முன் அவற்றைத் தரையில் போட்டனர்.
24 சேராவின் மகனாகிய ஆகானை யோசுவாவும், ஜனங்களும் ஆகோர் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றனர். அந்த வெள்ளி, மேலாடை, பொன், ஆகானின் மகன்கள், மகள்கள், அவனது ஆடு மாடுகள், கழுதைகள் கூடாரம், பிற பொருட்களையும் ஆகோர் பள்ளத்தாக்கில் சேர்ப்பித்தனர்.
25 அப்போது யோசுவா, “எங்களுக்கு நேர்ந்த தொந்தரவுகளுக்கு நீ காரணமாக இருந்தாய்! இப்போது கர்த்தர் உனக்குத் தொல்லையளிப்பார்!” என்றான். அப்போது ஜனங்கள் ஆகானின் மீதும் அவன் குடும்பத்தினர் மீதும் அவர்கள் மரிக்கும்படி கற்களை வீசினார்கள். பிறகு ஜனங்கள் அவர்களின் உடல்களையும் அவர்களின் பொருட்களையும் எரித்தனர்.
26 ஆகானை எரித்த பின், அவன் உடம்பின் மீது கற்களைக் குவித்தனர். அவை இன்னும் அங்கு உள்ளன. தேவன் ஆகானின் குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்தார். அதனால் அவ்விடம் ஆகோர் (தொல்லை) பள்ளத்தாக்கு எனப்படுகிறது. அதன் பின் கர்த்தர் ஜனங்களிடம் கோபமாயிருக்கவில்லை.
Joshua 7 ERV IRV TRV