Job 30 in Tamil IRV Compare Tamil Indian Revised Version
1 இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; இவர்களுடைய தகப்பன்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.
2 வயது முதிர்ந்ததினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.
3 குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, அதிக நாட்களாய் வெறுமையான வெட்டவெளிக்கு ஓடிப்போய்,
4 செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுசெடிகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.
5 அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; திருடனைத் துரத்துகிறதுபோல்: திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
6 அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் குகைகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
7 செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
8 அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்களுமாக இருந்தார்கள்.
9 ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.
10 என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி, என் முகத்திற்கு முன்பாகத் துப்பத் தயங்காதிருக்கிறார்கள்.
11 நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினதினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
12 வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறி விழவைத்து, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
13 என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்; அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை.
14 பெரிய வழியை உண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
15 பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் செழித்தவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோனது.
16 ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது.
17 இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
18 வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
19 சேற்றிலே தள்ளப்பட்டேன்; புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
20 உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு பதில் கொடுக்காமலிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
21 என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
22 நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர்.
23 வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
24 ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும்,
25 துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும், ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக.
26 நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
27 என் உள்ளம் கொதித்து, அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
28 வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
29 நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், நரிகளுக்குத் தோழனுமானேன்.
30 என் தோல் என்மேல் கறுத்துப்போனது; என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது.
31 என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் சத்தமாகவும் மாறின.