Isaiah 52 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 எழும்பு, சீயோனே எழும்பு, மகிமையான ஆடைகளை அணிந்துகொள்! பலத்தை எடுத்துக்கொள்! பரிசுத்தமான எருசலேமே எழுந்து நில்! தேவனைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளாத ஜனங்கள் மீண்டும் உனக்குள் நுழைய முடியாது! அந்த ஜனங்கள் சுத்தமும் பரிசுத்தமும் இல்லாதவர்கள்.
2 தூசியை உதறுங்கள்! உங்கள் அற்புதமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்! எருசலேமே, சீயோனின் மகளே, நீங்கள் சிறையில் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது, உங்கள் கழுத்தில் சுற்றிக்கிடந்த சங்கிலிகளில் இருந்து விடுதலை அடைந்தீர்கள்!
3 கர்த்தர் கூறுகிறார், “நீங்கள் காசுக்காக விற்கப்படவில்லை. எனவே, நான் உன்னை விடுதலை செய்ய பணத்தைப் பயன்படுத்தமாட்டேன்.”
4 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார் “என் ஜனங்கள் முதலில் எகிப்துக்கு வாழச் சென்றனர். பிறகு, அவர்கள் அடிமைகளானார்கள். பின்னர், அசீரியா அவர்களை அடிமைப்படுத்தினான்.
5 இப்போது என்ன நடந்தது என்று பார்! இன்னொரு நாடு எனது ஜனங்களை எடுத்துக்கொண்டது. என் ஜனங்களை எடுத்துக்கொள்ள அவர்கள் எதையும் கொடுக்கவில்லை. இந்த நாடு என் ஜனங்களை ஆளுகின்றனர், அவர்களைப் பார்த்து நகைக்கின்றனர். அந்த ஜனங்கள் எப்பொழுதும் என்னையும் என் நாமத்தையும் ஏளனம் செய்கிறார்கள்”.
6 கர்த்தர் கூறுகிறார், “இது நடந்திருக்கிறது. எனவே, என் ஜனங்கள் என்னைப்பற்றி கற்றுக்கொள்வார்கள். நான் யாரென்று என் ஜனங்கள் அறிவார்கள். என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள். பிறகு அவர்கள் இதைச் சொல்கிறவர் நானே அவரென்று அறிவார்கள்.”
7 ஒரு தூதுவன் நற்செய்தியோடு மலைக்கு மேல் வருவதைப் பார்ப்பது அற்புதமான ஒன்று. தூதுவன், “அங்கே சமாதானம் உள்ளது. நாம் காப்பாற்றப்பட்டிருக்கிறோம். சீயோனே, உங்கள் தேவனே அரசர்” என்று கூறுவதைக் கேட்பது அற்புதமான ஒன்று.
8 நகரக் காவலர்கள் சத்தமிடத் தொடங்கினார்கள். அவர்கள் கூடிக் களித்தனர். ஏனென்றால், அவர்களில் ஒவ்வொருவரும் கர்த்தர் சீயோனுக்குத் திரும்புவதைப் பார்க்கின்றனர்.
9 எருசலேமே, உனது அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் மகிழும். நீங்கள் கூடிக் களிப்பீர்கள். ஏனென்றால், கர்த்தர் எருசலேமிடம் தயவோடு உள்ளார். கர்த்தர் அவரது ஜனங்களை மீட்பார்.
10 அனைத்து நாடுகளிலும் கர்த்தர் தமது பரிசுத்தமான பலத்தைக் காட்டுவார். கர்த்தர் அவரது ஜனங்களை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதைத் தொலைதூர நாடுகள் எல்லாம் பார்க்கும்.
11 நீங்கள் பாபிலோனை விட்டுப்போங்கள். அந்த இடத்தை விடுங்கள்! ஆசாரியர்களே, தொழுகைக்குரிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். சுத்தமற்ற எதையும் தொடாதீர்கள்.
12 நீங்கள் பாபிலோனை விடுவீர்கள். ஆனால், அவர்கள் உங்களை அவசரப்படுத்தி வெளியேற்ற முடியாது. நீங்கள் வெளியே ஓடும்படி அவர்கள் உங்களைப் பலவந்தப்படுத்த முடியாது. நீங்கள் வெளியேறி நடப்பீர்கள், கர்த்தர் உங்களோடு நடப்பார். கர்த்தர் உங்கள் முன்னால் இருப்பார். இஸ்ரவேலின் தேவன் உங்கள் பின்பக்கமும் இருப்பார்.
13 “எனது தாசனைப் பார்! அவர் மிகவும் வெற்றிகரமாவார். அவர் மிகவும் முக்கியமாவார். எதிர்காலத்தில், ஜனங்கள் அவரைப் பெருமைபடுத்தி மரியாதை செய்வார்கள்.
14 ஆனால், பலர் என் தாசனைப் பார்த்தபொழுது, அதிர்ச்சி அடைந்தனர். அவர் மனிதன் என்று கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கும் வகையில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.
15 ஆனால் மிகுதியான ஜனங்கள் தெளிவடைவார்கள். அரசர்கள் அவரைப் பார்த்து எதுவும் சொல்லமாட்டார்கள். அந்த ஜனங்கள் எனது தாசன் பற்றிய கதையைக் கேட்கவில்லை. என்ன நடந்தது என்று பார்த்தனர். இந்த ஜனங்கள் அந்தக் கதையைக் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் புரிந்துகொண்டனர்”.