Isaiah 44 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 “யாக்கோபே, நீ எனது தாசன், என்னைக் கவனி! இஸ்ரவேலே, நான் உன்னைத் தேர்ந் தெடுக்கிறேன். நான் சொல்வதைக் கேள்.
2 நானே கர்த்தர். நான் உன்னைப் படைத்தேன். நீ எப்படி இருக்க வேண்டுமென்று உன்னைப் படைத்தவர் நான் ஒருவரே. நீ உன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே, நான் உனக்கு உதவியிருக்கிறேன். எனது தாசனாகிய யாக்கோபே, அஞ்சாதே! யெஷூரனே, நான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறேன்.
3 “தாகமுள்ள ஜனங்களுக்கு நான் தண்ணீர் ஊற்றுவேன். வறண்ட நிலங்களில் நீரூற்றுகளைப் பாயச்செய்வேன். உனது பிள்ளைகள்மீது எனது ஆவியையும் உனது சந்ததியார்மீது எனது ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். இது உங்கள் குடும்பத்தின்மீது பாய்கிற நீரோடை போன்றிருக்கும்.
4 உலகிலுள்ள ஜனங்கள் மத்தியில் அவர்கள் வளருவார்கள். தண்ணீர் கரையில் வளருகின்ற மரங்களைப் போல அவர்கள் வளருவார்கள்.
5 “ஒருவன் சொல்வான், ‘நான் கர்த்தருக்கு உரியவன்’ இன்னொருவன் ‘யாக்கோபின்’ பெயரைப் பயன்படுத்துவான். இன்னொருவன் ‘நான் கர்த்தருடையவன்’ என்று கையெழுத்து இடுவான். இன்னொருவன் ‘இஸ்ரவேல்’” என்ற பெயரைப் பயன்படுத்துவான்.
6 கர்த்தர் இஸ்ரவேலின் அரசர். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் கூறுகிறார், “நான் ஒருவரே தேவன்! வேறு எந்தத் தெய்வமும் இல்லை. நானே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்!
7 என்னைப் போன்ற தேவன் வேறு யாருமில்லை. அவ்வாறு இருந்தால், அந்த தெய்வம் இப்போது பேசட்டும். அந்த தெய்வம் வந்து என்னைப் போன்றவன் என்று நிரூபிக்கட்டும். இந்த ஜனங்களை நான் என்றென்றும் நிலைத்திருக்கும்படி செய்தேனே. இதுவரை என்ன நடந்தது என்று அந்த தெய்வம் எனக்குச் சொல்லட்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவன் அறிந்திருந்தால் அந்த தெய்வம் எனக்கு அடையாளம் காட்டட்டும்.
8 அஞ்சாதே! கவலைப்படாதே! என்ன நடக்கபோகிறது என்பதை ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். நீங்களே எனது சாட்சிகள். வேறு தேவன் இல்லை. நான் ஒருவரே அந்த ஒருவர். வேறு ஒரு கன்மலை இல்லை. நானே அந்த ஒருவர் என்பதை நான் அறிவேன்”.
9 சில ஜனங்கள் சிலைகளைச் (பொய்த் தெய்வங்களை) செய்கிறார்கள். அவை வீணானவை. ஜனங்கள் அந்தச் சிலைகளை நேசிக்கிறார்கள். ஆனால் அந்தச் சிலைகள் பயனற்றவை. அந்த ஜனங்களே சிலைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள். ஆனால் அவைகளால் பார்க்கமுடியாது. அவைகளுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் தம் செய்கைக்கு வெட்கப்படும் அளவிற்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.
10 இந்தப் பொய்த் தெய்வங்களை யார் செய்தது? பயனற்ற இந்தச் சிலைகளைச் செய்தது யார்?
11 வேலைக்காரர்கள் இந்தச் தெய்வங்களைச் செய்தனர். அந்த வேலைக்காரர்கள் எல்லாம் மனிதர்கள், தெய்வங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் கூடி இதைப் பற்றி விவாதித்தால் இதற்காக அவர்கள் வெட்கமும் அச்சமும் அடைவார்கள்.
12 ஒரு வேலைக்காரன் கருவிகளைப் பயன்படுத்தி சூடான உலையிலே இரும்பைக் காய வைத்தான். அவன் தன் சுத்தியைப் பயன்படுத்தி உலோகத்தை அடித்ததால் அது சிலையானது. இந்த மனிதன் தனது வல்லமை வாய்ந்த கைகளைப் பயன்படுத்தினான். ஆனால், அவனுக்குப் பசி வரும்போது தனது வல்லமையை இழக்கிறான். அவன் தண்ணீர் குடிக்காவிட்டால் பலவீனன் ஆகிறான்.
13 இன்னொரு வேலைக்காரன் தனது நூலைப் பிடித்து மட்டப்பலகையால் மரத்தில் குறியிடுகிறான். எங்கே வெட்டவேண்டும் என்பதை இது அவனுக்குக் காட்டுகிறது. அவன், தனது உளியைப் பயன்படுத்தி அந்த மரத்திலிருந்து சிலையைச் செதுக்குகிறான். அவன் தனது அளவு கருவியால் அச்சிலையை அளக்கிறான். இவ்வழியில், வேலைக்காரன் சரியாக மனிதனைப் போன்றே தோன்றும்படிச் சிலையைச் செய்கிறான். மனிதனின் இந்தச் சிலை வீட்டில் இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை.
14 ஒருவன் கேதுரு, மருதமரம் அல்லது கர்வாலி மரத்தை வெட்டுகிறான். (அந்த மனிதன் மரங்களை வளரச் செய்வதில்லை. அந்த மரங்கள் காட்டில் தன் சொந்த பலத்தாலேயே வளர்கிறது. ஒருவன் அசோக மரத்தை நட்டால் மழை அதை வளரச்செய்யும்).
15 பிறகு, அந்த மனிதன் எரிப்பதற்காக அந்த மரங்களை வெட்டுகிறான். அவன் அந்த மரத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறான். அவன் அதனைச் சமைக்கவும், வெப்பப்படுத்திக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்கிறான். அவன் சில மரத் துண்டுகளை எரித்து தனக்காக அப்பத்தைச் சுடுகிறான். ஆனால், அவன் சில துண்டுகளில் தெய்வத்தின் சிலை செய்து அதனைத் தொழுதுகொள்கிறான். அந்தத் தெய்வம் மனிதனால் செய்யப்பட்ட ஒரு சிலையாகும். ஆனால், அந்த சிலைகளுக்கு முன்னால் பணிந்து வணங்குகிறான்.
16 மனிதன் பாதி மரத்துண்டுகளை நெருப்பில் எரித்தான். மனிதன் அந்த நெருப்பை இறைச்சியை சமைக்கப் பயன்படுத்தினான். அதனை வயிறு நிரம்பும்வரை சாப்பிடுகிறான். மனிதன் தன்னை வெப்பப்படுத்திக்கொள்ள மரத்துண்டுகளை எரிக்கிறான். மனிதன் கூறுகிறான், “நல்லது நான் இப்போது வெப்பமாக இருக்கிறேன். என்னால் பார்க்கமுடியும் ஏனென்றால், நெருப்பிலிருந்து ஒளி வருகிறது”.
17 ஆனால், சிறு மரத்துண்டு மீதியுள்ளது எனவே மனிதன் அந்த மரத்திலிருந்து சிலை செய்து அதனைத் தெய்வம் என்று அழைக்கிறான். அந்த தெய்வத்திற்கு முன்பு அவன் அடிபணிந்து வணங்குகிறான். அவன் அந்த தெய்வத்தினிடம் ஜெபம் செய்து சொல்கிறான், “நீயே எனது தெய்வம். என்னைக் காப்பாற்று”.
18 அந்த ஜனங்களுக்குத் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை. அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. காணமுடியாதபடி அவர்களது கண்கள் கட்டப்பட்டதுபோல அது இருக்கிறது. அவர்களின் இதயங்கள் புரிந்துகொள்ளவும் முயல்வதில்லை.
19 அந்த ஜனங்கள் இவற்றைப்பற்றி சிந்தித்திருக்கவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அவர்கள் தமக்குள், “நான் பாதி மரத்தை எரித்தேன். நான் நெருப்புத் துண்டுகளை எனது அப்பங்களைச் சுடவும், எனது இறைச்சியைச் சமைக்கவும் பயன்படுத்தினேன். பிறகு அந்த இறைச்சியை நான் தின்றேன். மீதியுள்ள மரத்தைப் பயன்படுத்தி இந்த அருவருப்பை செய்தேன். ஒரு மரத்துண்டை நான் தொழுதுகொண்டிருக்கிறேன்!” என்று எண்ணுவதில்லை.
20 அந்த மனிதன், தான் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லை. அவன் குழம்பியிருக்கிறான். எனவே, அவனது இதயம் அவனை தவறான வழியில் செலுத்துகின்றது. அவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாது. அவனுக்குத் தான் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று அறிய முடியாது. அவன், “நான் பிடித்துக்கொண்டிருக்கின்ற இந்தச் சிலை பொய்த் தெய்வம்” என்று சொல்லமாட்டான்.
21 யாக்கோபே இவற்றை நினைத்துப் பார்! இஸ்ரவேலே, நீ எனது தாசன் என்பது நினைவிருக்கட்டும். நான் உன்னைச் செய்தேன். நீ எனது தாசன். எனவே இஸ்ரவேலே என்னை மறக்காதே.
22 உனது பாவங்கள் பெரிய மேகத்தைப் போன்றிருந்தது. ஆனால், நான் அந்தப் பாவங்களை துடைத்துவிட்டேன். உங்களது பாவங்கள் காற்றில் கலந்துவிடும் மேகங்களைப் போன்று மறைந்துவிட்டன. நான் உன்னை மீட்டுக் காப்பாற்றினேன், எனவே என்னிடம் திரும்பி வா.
23 வானங்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றன ஏனென்றால், கர்த்தர் பெரிய செயலைக் செய்திருக்கிறார். பூமி மகிழ்ச்சியோடு உள்ளது. பூமியின் தாழ்விடங்களும் மகிழ்கிறது. மலைகள் தேவனுக்கு நன்றிசொல்லிப் பாடுகின்றன. காட்டிலுள்ள மரங்களெல்லாம் மகிழ்ச்சியோடு உள்ளன. ஏனென்றால், கர்த்தர் யாக்கோபைக் காப்பாற்றினார். கர்த்தர் இஸ்ரவேலுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்.
24 நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கர்த்தர் படைத்தார். நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே கர்த்தர் இதனைச் செய்தார். கர்த்தர் கூறுகிறார், “கர்த்தராகிய நான், எல்லாவற்றையும் செய்தேன். நானாகவே வானங்களை வைத்தேன். எனக்கு முன்னால் பூமியைப் பரப்பி வைத்தேன்”.
25 பொய்த் தீர்க்கதரிசிகள் பொய் சொல்கிறார்கள். ஆனால் கர்த்தர் அவர்களின் தீர்க்கதரிசனங்கள் போலியானவை என்று காட்டுகிறார். கர்த்தர் மந்திரவேலை செய்பவர்களை முட்டாளாக்குகிறார். கர்த்தர் ஞானிகளைக் குழப்புகிறார். அவர்கள் தமக்கு மிகுதியாகத் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், கர்த்தர் அவர்களை முட்டாளாக்குகின்றார்.
26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் தமது செய்திகளைச் சொல்ல அனுப்புகிறார். கர்த்தர் அந்தச் செய்திகளை உண்மையாக்குகிறார். கர்த்தர் ஜனங்களிடம் அவர்கள் செய்யவேண்டியதைச் சொல்லத் தூதுவர்களை அனுப்புகிறார். கர்த்தர் அவர்களது ஆலோசனைகளை நிறைவேற்றுவார். கர்த்தர் எருசலேமிடம் கூறுகிறார், “ஜனங்கள் மீண்டும் உன்னிடம் வாழ்வார்கள்!” யூதாவின் நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் மீண்டும் கட்டப்படுவீர்கள்!” அழிந்துபோன நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்: “நகரங்களே! உங்களை மீண்டும் அமைப்பேன்”.
27 ஆழமான தண்ணீரிடம் கர்த்தர் கூறுகிறார்: “வற்றிப் போங்கள்! நான் உங்கள் ஊற்றுகளை வற்றச் செய்வேன்!”
28 கர்த்தர் கோரேசிடம் கூறுகிறார்: “நீ எனது மேய்ப்பன். நான் விரும்புவதை நீ செய்வாய். நீ எருசலேமிடம் சொல்வாய், ‘நீ மீண்டும் கட்டப்படுவாய்’ நீ தேவாலயத்திடம் கூறுவாய், ‘உனது அஸ்திரபாரம் மீண்டும் கட்டப்படும்!’”