Genesis 33 in Tamil IRV Compare Tamil Indian Revised Version
1 யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடுகூட நானூறு மனிதர்களும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு மறுமனையாட்டிகளிடத்திலும் தனிக்குழுக்களாகப் பிரித்துவைத்து,
2 மறுமனையாட்டிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் மத்தியிலும், ராகேலையும் யோசேப்பையும் கடைசியிலும் நிறுத்தி:
3 தான் அவர்களுக்கு முன்பாக நடந்து போய், ஏழுமுறை தரைவரைக்கும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் அருகில் போனான்.
4 அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்தான்; இருவரும் அழுதார்கள்.
5 அவன் தன் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்.
6 அப்பொழுது மறுமனையாட்டிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
7 லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
8 அப்பொழுது ஏசா: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் எதற்கு என்றான். அதற்கு யாக்கோபு: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைப்பதற்காக என்றான்.
9 அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது இருக்கிறது; உன்னுடையதை நீயே வைத்துக்கொள் என்றான்.
10 அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.
11 தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
12 பின்பு ஏசா: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன் என்றான்.
13 அதற்கு யாக்கோபு: பிள்ளைகள் இளவயதுள்ளவர்கள் என்றும், பால்கொடுக்கும் ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது வேகமாக ஓட்டினால், மந்தையெல்லாம் இறந்துபோகும்.
14 என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்திற்கு வரும்வரைக்கும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் நடைக்கும் பிள்ளைகளின் நடைக்கும் ஏற்றபடி, மெதுவாக அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான்.
15 அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற மனிதர்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது எதற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.
16 அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான்.
17 யாக்கோபு சுக்கோத்திற்குப் பயணம்செய்து, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களைப் போட்டான்; அதனால் அந்த இடத்திற்கு சுக்கோத் என்று பெயரிட்டான்.
18 யாக்கோபு பதான்அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று கூடாரம்போட்டான்.
19 தான் கூடாரம்போட்ட நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மகன்களிடம் நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கி,
20 அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்.