Ezekiel 36 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மானிடா! இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்குரைத்துச் சொல்: இஸ்ரயேல் மலைகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.2 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களைக் குறித்து உங்கள் பகைவன், “ஆகா! பழங்கால உயர்விடங்கள் நமக்கு உரிமையிடங்கள் ஆயின” என்றான்.3 எனவே இறைவாக்காகச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உண்மையில் நீங்கள் எம்மருங்கும் பாழாக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, எஞ்சிய மக்களினங்களுக்கு உரிமையிடமாகி, வாய்க் கொழுப்புள்ளோரின் ஏளனப் பேச்சுக்கும் மக்களின் அவதூறுக்கும் உள்ளானீர்கள்.4 எனவே, இஸ்ரயேல் மலைகளே! தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் அழிவின் பாழிடங்களுக்கும், சுற்றிலுமுள்ள மற்ற நாடுகள் கொள்ளையிட்டு ஏளனம் செய்யும், குடிகளற்ற நகர்களுக்கும், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே;5 அவர் கூறுவது: உண்மையாகவே எரியும் என் சினத்தால் மற்ற நாடுகளுக்கெதிராகவும் ஏதோம் முழுவதற்கும் எதிராகவும் நான் பேசுகிறேன். ஏனெனில் இதயத்தில் மகிழ்வோடும் கெடுமதியோடும் என் நாட்டின் மேய்ச்சல் நிலங்களைக் கொள்ளையிட நாட்டைத் தாங்களே உடைமையாக்கிக் கொண்டன.6 எனவே இஸ்ரயேல் நாட்டைக் குறித்து இறைவாக்குரைத்து, மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் என் சகிப்பின்மையிலும் சினத்திலும் பேசுகிறேன். மக்களினங்களின் வசைமொழிகளை நீங்கள் சுமக்கிறீர்களே.7 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கையுயர்த்தி நான் ஆணையிடுகிறேன். உண்மையாகவே உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்கள் தங்கள் இழிவைத் தாங்களே சுமப்பர்.8 ஆனால் இஸ்ரயேல் மலைகளே! நீங்கள் உங்கள் கிளைகளைப் பரப்பி, என் மக்களுக்காய்க் கனிகளைச் சுமப்பீர்கள். ஏனெனில் அவர்கள் விரைவில் வந்துவிடுவர்.9 ஏனெனில், நான் உங்களுக்காய் இருக்கிறேன்: உங்களைக் கண்ணோக்குவேன். உங்கள் நாடு மீண்டும் உழப்பட்டு விதை விதைக்கப்படும்.10 உங்கள் மக்களைப் பெருகச் செய்வேன். இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் பெருகச் செய்வேன். நகர்களில் மக்கள் குடியேறுவர். அழிவிடங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும்.11 உங்களில் மானிடரையும் விலங்குகளையும் மிகுதியாக்குவேன். அவர்கள் பலுகிப் பெருகுவர். முற்காலங்களைப்போல் உங்களைக் குடியேற்றுவேன். முந்தைய காலங்களை விட மிகுதியாக நீங்கள் வளமடையச் செய்வேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.12 இஸ்ரயேல் மக்களாகிய என் மக்களை உங்களில் நடமாடச் செய்வேன். அவர்கள் உங்களை உடைமையாக்கிக் கொள்வார்கள். நீங்கள் அவர்களுக்கு உரிமைச் சொத்தாய் இருப்பீர்கள். நீங்கள் இனி ஒருபோதும் அவர்களைப் பிள்ளையில்லாதாராய்ச் செய்யமாட்டீர்கள்.13 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களிடம் மக்கள் “நீங்கள் மனிதரை விழுங்கி, உங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்கிறீர்கள்” என்று சொல்கிறார்கள்.14 எனவே, மனிதரை நீங்கள் இனிமேல் விழுங்க மாட்டீர்கள். உங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்ய மாட்டீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.15 இனிமேல், நாடுகளின் பழிச்சொல்லை நீங்கள் கேட்கவிடமாட்டேன்; மக்களினங்களின் இழிசொல்லை நீங்கள் சுமக்கமாட்டீர்கள்; உங்கள் நாட்டை விழ வைக்கமாட்டீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.16 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது:17 மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். அவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது.18 எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர்.19 நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுக்குத் தீர்ப்பிட்டேன்.20 வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து “இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று” என்று கூறப்பட்டது.21 இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன்.22 எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன்.23 நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.24 நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன்.25 நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன்.26 நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்.27 என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்.28 நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.29 உங்கள் எல்லாத் தீட்டிலிருந்தும் நான் உங்களை மீட்பேன். தானியம் முளைக்கச் செய்து அதை மிகுதியாய் விளையச் செய்வேன். உங்கள்மேல் பஞ்சம் வரவிடேன்.30 நீங்கள் மக்களினங்களிடையே பஞ்சத்தால் இழிவுறாதபடி மரங்களின் கனிகளையும் வயல்களின் விளைச்சலையும் பெருக்குவேன்.31 அப்போது நீங்கள் உங்கள் தீய வழிகளையும், தகாத செயல்களையும் எண்ணி உங்கள் பாவங்களுக்காகவும் உங்கள் அருவருப்பான செயல்களுக்காகவும் உங்களையே வெறுப்பீர்கள்.32 உங்களை முன்னிட்டு நான் இவ்வாறு செய்யவில்லை; இது தெரிந்திருக்கட்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் நடத்தைக்காக வெட்கி நாணமுறுங்கள்.33 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் உங்களைத் தூய்மைப்படுத்தும் நாளில், நகர்களில் உங்களை மீண்டும் குடியேற்றுவேன். அழிவிடங்களை மீண்டும் கட்டியெழுப்புவேன்.34 பாழான நிலம், கடந்து செல்லும் அனைவர் கண்முன்னும், பாழாய்க் கிடப்பதற்குப் பதிலாகப் பயிர் செய்யப்படும்.35 அப்போது மக்கள், “பாழாய்க் கிடந்த இந்த நிலம் ஏதேன் தோட்டம்போல் ஆகிவிட்டது. இடிந்து பாழாகிய அழிவிடங்களாய்க் கிடந்த நகர்கள் அரண்சூழ்ந்து குடியேற்ற நகர்களாகிவிட்டனவே!” என்பர்.36 அப்போது உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தார், ஆண்டவராகிய நான் அழிந்திருந்ததைக் கட்டியுள்ளேன் என்றும் பாழிடமாய் இருந்ததை விளை நிலமாக்கியுள்ளேன் என்றும் அறிந்துகொள்வர். ஆண்டவராகிய நான் இதை உரைத்தேன். நானே இதைச் செய்து முடிப்பேன்.37 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மேலும் இதனை நான் அவர்களுக்குச் செய்யும்படி இஸ்ரயேல் வீட்டார் என்னிடம் மன்றாடச் செய்வேன். அவர்களின் மக்களை மந்தை போல் பெருகச் செய்வேன்.38 அவர்கள் விழா நாள்களில் பலிகளுக்காக எருசலேமுக்கு வரும் ஆடுகள்போல் நிறைய இருப்பர்; அழிந்துபோன நகர்கள் மக்கள் திரளால் நிரப்பப்பெறும். அப்போது, நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.Ezekiel 36 ERV IRV TRV