1 மூன்றாவது நாள், எஸ்தர் அவளுக்குரிய அரச உடைகளை அணிந்துக்கொண்டாள். பிறகு, அவள் அரசனது அரண்மனை உட்பகுதிக்குள் போய் நின்றாள். அப்பகுதி அரசனது சபைக்கு முன்னால் இருந்தது. அரசன் தனது சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் அரண்மனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் இருந்தான்.
2 பிறகு, அரசன் எஸ்தர் அரசி முற்றத்தில் நிற்பதைப் பார்த்தான். அவன் அவளைப் பார்த்தபோது மகிழ்ச்சிடைந்தான். அதனால் அவன் அவளை நோக்கி தனது கையிலுள்ள செங்கோலை நீட்டினான். எனவே, எஸ்தர் அந்த அறைக்குள் சென்று அரசன் அருகில் போனாள். பிறகு அவள் அரசனது பொற் செங்கோலின் முனையைத் தொட்டாள்.
3 பிறகு அரசன், “எஸ்தர் அரசியே, நீ விரும்புகிறது என்ன? நீ என்னிடம் என்ன வேண்டுமென கேட்கிறாய்? நீ என்ன கேட்டாலும் நான் உனக்குத் தருவேன். எனது பாதி இராஜ்யம் கேட்டாலும் தருவேன்” என்றான்.
4 அதற்கு எஸ்தர், “நான் உங்களுக்கும் ஆமானுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்று அந்த விருந்துக்கு நீங்களும் ஆமானும் வரமுடியுமா?” என்று கேட்டாள்.
5 பிறகு அரசன், “ஆமானை விரைவாக அழைத்து வா. எனவே எஸ்தர் என்ன கேட்கிறாளோ, அதன்படிச் செய்வோம்” என்றான். எனவே, அரசனும், ஆமானும் எஸ்தர் தயார் செய்த விருந்துக்குப் போனார்கள்.
6 அவர்கள் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போது அரசன் மீண்டும் எஸ்தரிடம், “இப்போது எஸ்தரே, என்னிடம் நீ என்ன கேட்க விருப்புகிறாய்.? நான் அதனை உனக்கு கொடுப்பேன். நீ என்ன விரும்புகிறாய்? நீ என்ன விரும்பினாலும் அதனை நான் உனக்குக் கொடுப்பேன். நான் எனது பாதி இராஜ்யம்வரை கொடுப்பேன்.” என்றான்.
7 எஸ்தர், “இது தான் நான் உம்மிடம் கேட்க விரும்பியது.
8 அரசன், எனக்கு ஆதரவு கொடுத்தால், அரசன் என்னிடம் தயவாக இருந்தால், அரசனும் ஆமானும் நாளையும் வரவேண்டும். நாளை அரசனுக்கும், ஆமானுக்கும் இன்னொரு விருந்து ஏற்பாடு செய்வேன். அப்பொழுது, நான் உண்மையில் என்ன விரும்புகிறேன் என்று சொல்வேன்” எனப் பதிலுரைத்தாள்.
9 அவனது வீட்டைவிட்டு ஆமான் மிகவும் மகிழ்ச்சியோடு சென்றான். அவன் நல்ல மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை அரசனது வாசலில் பார்த்ததும் அவனுக்கு மொர்தெகாய் மீது கோபம் வந்தது. ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபமடைந்தான். ஏனென்றால், அவன் ஆமான் நடந்து வரும்போது எவ்வித மரியாதையையும் தரவில்லை. மொர்தெகாய் ஆமானைக் கண்டு பயப்படவில்லை. அது அவனை மேலும் கோபத்திற்குள்ளாக்கிற்று.
10 ஆனால் ஆமான் தனது கோபத்தைக் அடக்கிக்கொண்டு வீட்டிற்குப் போனான். பிறகு ஆமான் தனது நண்பர்களையும், மனைவி சிரேஷையும் அழைத்தான்.
11 தான் எவ்வளவு செல்வமுடையவன் என்ற பெருமையோடு பேச ஆரம்பித்தான். அவன் தனது பல மகன்களைப் பற்றியும் அரசன் எவ்வழியில் எல்லாம் தன்னை பெருமைபடுத்துக்கிறான் என்பதைப் பற்றியும் பெருமையோடு பேசினான். மற்ற அதிகாரிகளைவிட தன்னை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருக்கிறான் என்பதையும் பெருமையோடு பேசினான்.
12 ஆமான், “அதுமட்டுமல்ல, அரசி எஸ்தர் அரசனுக்குக் கொடுத்த விருந்தில் என்னை மட்டுமே அழைத்திருந்தாள். அவள் நாளை மீண்டும் விருந்துக்கு வருமாறு அழைத்தாள்.
13 ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் அரசனின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று சொன்னான்.
14 பிறகு ஆமானின் மனைவி சிரேஷ் மற்றும் நண்பர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவர்கள், “யாராவது ஒருவரை அவனைத் தூக்கிலிட கம்பம் கட்டச் சொல். அதனை 75 அடி உயரமுள்ளதாகச் செய். பிறகு, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கில் போடுமாறு அரசனை கேள். பிறகு, அரசனோடு விருந்துக்குப் போ. அப்போது உன்னால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியும்” என்றனர். ஆமான் இக்கருத்தை விரும்பினான். எனவே, அவன் சிலரிடம் தூக்கு மரக் கம்பம் செய்யுமாறு கட்டளையிட்டான்.
Esther 5 ERV IRV TRV