Deuteronomy 9 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 இஸ்ரயேலரே, செவிகொடுங்கள்! நீங்கள் இன்று யோர்தானைக் கடந்து, உங்களைவிட எண்ணிக்கையும் வலிமையும் மிகுந்த நாடுகளையும், வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும் கைப்பற்றுவீர்கள்.2 அந்த மக்கள், எண்ணிக்கையிலும் உயரத்திலும் மிகுந்த ஏனாக்கின் வழிமரபினர். அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ‘ஏனாக்கின் புதல்வரை எதிர்த்து நிற்கக் கூடியவன் எவன்?’ என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பது அவர்களைப்பற்றியே.3 சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்று உங்களை வழி நடத்திச் செல்பவர் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் அவர்களை முறியடித்து உங்கள் முன் வீழ்ச்சியுறச் செய்வார். அதனால், ஆண்டவர் வாக்களித்தபடி, நீங்கள் அவர்களைத் துரத்தி விரைவில் அழிப்பீர்கள்.⒫4 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடித்தபின், ‘எங்களுடைய நேரிய நடத்தையின் பொருட்டே இந்த நாட்டை உடைமையாக்கிக்கொள்ளும்படி ஆண்டவர் எங்களைக் கூட்டி வந்தார்’, என்று உங்கள் உள்ளத்தில் எண்ண வேண்டாம். ஏனெனில், அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே ஆண்டவர் அவைகளை உங்கள் முன்னின்று விரட்டியடிப்பார்.5 அவர்களது நாட்டை நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போவது உங்களது நேரிய நடத்தையினாலோ உங்களது உள்ளத் தூய்மையினாலோ அன்று; மாறாக, அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடிப்பார். அதனால், உங்கள் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு ஆண்டவர் ஆணையிட்டு உரைத்த வாக்கு நிறைவேறும்.6 எனவே, நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளும்படி இந்த வளமிகு நாட்டை உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குத் தரப்போவது உங்களது நேரிய நடத்தையின் பொருட்டு அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் வணங்காக் கழுத்தினர்.⒫7 பாலைநிலத்தில் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் சினத்துக்கு உள்ளாக்கினதை நினையுங்கள்; அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியே வந்த நாள் முதல் இந்த இடத்திற்கு வரும்வரை ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள்.8 ஓரேபிலும் நீங்கள் ஆண்டவரைக் கடுஞ்சினத்துக்கு உள்ளாக்கினீர்கள். அதனால், உங்களை அழிக்கும் அளவுக்கு ஆண்டவர் சினம்கொண்டார்.9 ஆண்டவர் உங்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக் கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தேன். அப்பொழுது, நான் அப்பம் உண்டதுமில்லை; நீர் பருகியதுமில்லை.10 கடவுளின் விரலால் எழுதப்பட்டிருந்த இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார். சபை கூடிய நாளில், மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசிய எல்லா வார்த்தைகளும் அவற்றில் இருந்தன.11 நாற்பது பகலும் நாற்பது இரவும் கழிந்த பின், உடன்படிக்கைப் பலகைகளான இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார்.⒫12 அப்பொழுது ஆண்டவர் என்னிடம், ‘எழுந்து, இங்கிருந்து விரைந்து இறங்கிச் செல். ஏனெனில், நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த உன் மக்கள் சீரழிந்து விட்டனர். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகிவிட்டனர். வார்ப்புச்சிலை ஒன்றை அவர்களுக்கெனச் செய்து கொண்டனர்’ என்றார்.⒫13 மேலும், அவர் என்னிடம், ‘நானும் இந்த மக்களைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்; இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள்.14 என்னை விட்டு விடு. நான் அவர்களை அழிப்பேன். மண்ணினின்று அவர்கள் பெயர் இல்லாது ஒழிப்பேன். பிறகு, அவர்களைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுதியான மக்களினமாக உன்னை ஆக்குவேன்’ என்றார்.⒫15 பின்னர், நான் திரும்பி, மலையிலிருந்து இறங்கினேன். மலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடன்படிக்கையின் இரு பலகைகளும் என் இருகைகளிலும் இருந்தன.16 நான் பார்த்தபொழுது நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து கொண்டிருந்தீர்கள். உங்களுக்கென வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்து, ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகியிருந்தீர்கள்.17 அப்பொழுதுநான் இரு பலகைகளையும் தூக்கி என் இரண்டு கைகளிலுமிருந்து வீசி எறிந்து உங்கள் கண்களுக்கு முன்னே உடைத்தேன்.18 பிறகு, ஆண்டவர் சினம்கொள்ளுமாறு நீங்கள் அவர் முன்னிலையில் தீச்செயல் செய்து புரிந்த பாவம் அனைத்துக்காகவும் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் ஆண்டவர்முன் தாழ்ந்து பணிந்து கிடந்தேன். முன்புபோலவே நான் அப்பம் உண்ணவும் இல்லை, நீர் பருகவும் இல்லை.19 உங்களை அழிக்கும்படி ஆண்டவர் உங்கள்மேல் கொண்டிருந்த சினத்தையும் கோபக் கனலையும் கண்டு நான் அஞ்சினேன். ஆனால், ஆண்டவர் மீண்டும் ஒருமுறை என் மன்றாட்டைக் கேட்டார்.20 ஆரோன் மீதும் ஆண்டவர் கடும் சினம் கொண்டு அவனை அழிக்க எண்ணியிருந்தார். நான் ஆரோனுக்காகவும் மன்றாடினேன்.21 அப்பொழுது, நீங்கள் செய்த உங்கள் பாவப் பொருளாகிய கன்றுக்குட்டியை நான் எடுத்து, நெருப்பில் சுட்டெரித்து, தூசுபோல் ஆகுமட்டும் நொறுக்கித் தூளாக்கி, அந்தத் தூளை மலையிலிருந்து கீழே ஓடும் ஆற்றில் கொட்டினேன்.⒫22 தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத்து அத்தாவாவிலும் ஆண்டவருக்குக் கடும் சினம் வரச் செய்தீர்கள்.23 ஆண்டவர் உங்களைக் காதேசு பர்னேயாவிலிருந்து அனுப்பி, ‘நான் உங்களுக்குக் கொடுத்துள்ள நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுங்கள்’ என்றார். நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள். அவர்மீது நம்பிக்கை கொள்ளவும் இல்லை; அவர் குரலுக்குச் செவி கொடுக்கவும் இல்லை.24 நான் உங்களை அறிந்த நாளிலிருந்து நீங்கள் ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்துகொண்டே இருக்கிறீர்கள்.25 ஆண்டவர், ‘நான் உங்களை அழிப்பேன்’ என்று சொன்னதால் நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவர் முன்னால் தாழ்ந்து பணிந்து கிடந்தேன்.26 அப்போது இறைவனாகிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடியது: ‘என் தலைவராம் ஆண்டவரே! நீர் உமது மாட்சியால் விடுவித்து, உமது வலிமைமிகு கரத்தால் எகிப்திலிருந்து அழைத்துவந்த உம் உடைமையாகிய மக்களை அழிக்க வேண்டாம்.27 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உம் அடியார்களை நினைவு கூர்ந்தருளும், இம்மக்களின் வணங்காக் கழுத்தையும், அவர்களது தீய நடத்தையையும், பாவங்களையும் பொருட்படுத்த வேண்டாம்.28 இல்லையெனில், நீர் எந்த நாட்டினின்று எங்களை விடுவித்து அழைத்து வந்தீரோ, அந்த நாட்டினர் ‘ஆண்டவர் அவர்களுக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுச் சொன்ன நாட்டில் அவர்களைக் கொண்டு போக இயலாததாலும், அவர்களை வெறுத்ததாலும், பாலை நிலத்தில் அவர்களைக் கொல்லுமாறு எகிப்திலிருந்து கூட்டிவந்தார்’ என்று ஏளனம் செய்வர் அன்றோ!29 ஆண்டவரே, உமது மிகுந்த வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் வெளிக்கொணர்ந்த இவர்கள் உமது உடைமையாகிய மக்களாய் உள்ளனர் அன்றோ!