1 “வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன். பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள்.
2 எனது போதனைகள் மழையைப் போன்று வரும், பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும், மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும், பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும்.
3 நான் கர்த்தருடைய நாமத்தைப் பேசுவேன். தேவனைப் போற்றுங்கள்!
4 “அவர் பாறை (கர்த்தர்), அவரது செயல்கள் பரிபூரணமானவை! ஏனென்றால் அவரது வழிகள் எல்லாம் சரியானவை! தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர். அவர் நீதியும் செம்மையுமானவர்.
5 நீங்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல. உங்களது பாவங்கள் அவரை அசுத்தமாக்கியது. நீங்கள் கோணலான பொய்யர்கள்.
6 உங்களுக்காக இவ்வளவு செய்த கர்த்தருக்கு இந்த வழியிலா நீங்கள் திரும்ப கொடுப்பீர்கள்? இல்லை! நீங்கள் அறிவில்லாத அஞ்ஞான ஜனங்கள். கர்த்தர் உங்களது தந்தையாக இருக்கிறார். அவர் உங்களை உண்டாக்கினார். அவர் உங்களைத் தாங்குகிறார்.
7 “நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத் துப்பாருங்கள். பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள். உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான். உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள்.
8 உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார். அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார். இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார்.
9 கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு, யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம்.
10 “கர்த்தர் யாக்கோபை (இஸ்ரவேல்) ஒரு வனாந்திரத்தில் கண்டுபிடித்தார். அது ஒரு காலியான காற்று மிகுந்த நிலம். கர்த்தர் அவனைக் காப்பாற்றுவதற்கு யாக்கோபுவைச் சுற்றி வளைத்துக்கொண்டார். அவர் அவனை தன் சொந்த கண்மணியைப் போல் காத்தார்.
11 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார். ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும். பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும். அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும், அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும். கர்த்தர் இதனைப் போன்றவர்.
12 கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார். அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை.
13 கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார். யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான். கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார். கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார்.
14 கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார். அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும், சிறந்த கோதுமையையும் கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள்.
15 “ஆனால் யெஷுரன் கொழுத்துப் போய் கொழுத்த காளையைப்போன்று உதைத்தான் (ஆமாம், நீங்கள் நன்றாகப் போஷிக்கப்பட்டீர்கள்! நீங்கள் திருப்தியாகி கொழுத்தீர்கள்.) அவன் தன்னை உண்டாக்கின தேவனை விட்டு விலகினான். தன்னை இரட்சித்த பாறையை (தேவன்) விட்டு ஓடினான்.
16 கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர். கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள்.
17 அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர். அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும். அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும்.
18 நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டுவிலகினாய். உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய்.
19 “கர்த்தர் இதனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார். ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்!
20 அதனால் கர்த்தர் கூறினார், ‘நான் அவர்களிடமிருந்து திரும்புவேன். அப்போது அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கட்டும்! அவர்கள் மிகவும் கலகக்கார ஜனங்களாய் இருக்கின்றனர். அவர்கள் தம் பாடங்களைப் படிக்காத பிள்ளைகளைப் போன்று இருக்கின்றார்கள்.
21 அவர்கள் பிசாசுகளை தொழுதுகொண்டு என்னைப் பொறாமைபடும்படிச் செய்தனர். இவ்விக்கிரகங்கள் உண்மையான தேவன் அல்ல. அவர்கள் பயனற்ற விக்கிரகங்கள் மூலம், என்னைக் கோபமடையச் செய்தனர். எனவே, நான் இஸ்ரவேலுக்குப் பொறாமையை உண்டாக்குவேன். ஒரு தேசமாக மதிக்கப்படாத மூட ஜனங்களின் மூலம் நானும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குவேன்.
22 எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது. அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது. அது பூமியையும், பூமி உற்பத்தி செய்யும் பொருட்களையும் எரிக்கிறது. அது மலைகளின் அஸ்திவாரங்களையும் எரிக்கிறது!
23 “‘நான் இஸ்ரவேலர்களுக்குத் துன்பங்களைக் கொண்டுவருவேன். நான் அவர்கள் மீது எனது அம்புகளை எய்வேன்.
24 அவர்கள் பசியால் மெலிந்து பலவீனம் அடைவார்கள். பயங்கரமான நோய்கள் அவர்களை அழிக்கும். நான் அவர்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன். விஷப் பாம்புகளும் பல்லிகளும் அவர்களைக் கடிக்கும்.
25 வீரர்கள் அவர்களை வீதிகளில் கொல்லுவார்கள். அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே பயப்படுவார்கள். படைவீரர்கள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கொல்வார்கள். அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கொல்வார்கள்.
26 “‘நான் இஸ்ரவேலர்களை அழிக்க விரும்பினேன். எனவே ஜனங்கள் அவர்களை முழுமையாக மறப்பார்கள்!
27 அவர்களது பகைவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நான் அறிவேன். பகைவருக்கு அது புரியாது, அவர்கள் பெருமை கொண்டு சொல்வார்கள். “கர்த்தர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் வென்றோம்!”’
28 “இஸ்ரவேல் ஜனங்கள் அறிவில்லாதிருக்கிறார்கள். அவர்கள் புரிந்துகொள்கிறதில்லை.
29 அவர்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் புரிந்திருக்கக்கூடும். என்ன நடந்திருக்கக் கூடும் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள்!
30 ஒருவனால் 1,000 பேரைத் துரத்த முடியுமா? இரண்டு பேரால் 10,000 பேரை ஓடவைக்க முடியுமா? கர்த்தர் அவர்களை எதிரிகளுக்குக் கொடுத்திருந்தால் மட்டுமே அது நிகழும்! அவர்களின் பாறையானவர் (தேவன்) அடிமைகளைப்போன்று விற்றிருந்தால் மட்டுமே அது நிகழும்!
31 எதிரிகளின் ‘பாறையானவன்’ நமது பாறையானவரைப் (கர்த்தர்) போன்று பலமுள்ளவன் அல்ல. நமது பகைவர்கள் கூட இதனைத் தெரிந்திருக்கின்றார்கள்!
32 பகைவர்களின் திராட்சைத் தோட்டங்களும், வயல்களும் சோதோம் மற்றும் கொமோராவைப் போன்று அழிக்கப்படும். அவர்களது திராட்சைப் பழங்கள் விஷமுள்ளதாகும்.
33 அவர்களது திராட்சைரசம் பாம்பு விஷம் போன்றிருக்கும்.
34 “கர்த்தர் கூறுகிறார், ‘நான் அந்தத் தண்டனையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நான் அதனை எனது சேமிப்பு அறையில் பூட்டியுள்ளேன்!
35 அவர்கள் தீமையான கிரியைகளைச் செய்யும்போது நான் அதற்குத் தண்டனையை வைத்திருப்பேன். அவர்கள் தவறானவற்றைச் செய்ததால் நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் துன்ப காலம் அருகில் உள்ளது. அவர்களது தண்டனை விரைவில் வரும்.’
36 “கர்த்தர் தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பார். அவர்கள் அவரது வேலைக்காரர்கள், அவர்களுக்கு அவர் இரக்கம் காண்பிப்பார். அவர்களது வல்லமை போய்விட்டதை அவர் பார்ப்பார். அவர்களில் அடிமைகளும், சுதந்திரமானவர்களும் ஏகமாய் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் பார்ப்பார்.
37 பின்னர் கர்த்தர் கூறுவார், ‘பொய்த் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்? பாதுகாப்பிற்காக நீங்கள் ஓடிய “பாறை” எங்கே?
38 அப்பொய்த் தெய்வங்கள் உங்கள் பலிகளில் உள்ள கொழுப்பைத் தின்றன. அவை உங்கள் காணிக்கையில் உள்ள திராட்சை ரசத்தைக் குடித்தன. எனவே அந்தத் தெய்வங்கள் எழுந்து உங்களுக்கு உதவட்டும். அவை உங்களைக் காக்கட்டும்!
39 “‘இப்பொழுது நானே, நான் ஒருவரே தேவனாக இருக்கிறதைப் பார்! வேறு தேவன் இல்லை. நான் ஜனங்களை மரிக்கச் செய்வேன். நானே ஜனங்களை உயிருடன் வைப்பேன். நான் ஜனங்களைக் காயப்படுத்த முடியும். நான் அவர்களைக் குணப்படுத்தவும் முடியும். எனது அதிகாரத்திலிருந்து ஒருவனும் இன்னொருவனைக் காப்பாற்ற முடியாது.
40 நான் எனது கையைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். நான் என்றென்றும் ஜீவித்திருக்கிறவர் என்பதினால் அவை நிகழும் என்பதும் உண்மையாகும்!
41 நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன். எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன். அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன்.
42 எனது பகைவர்கள் கொல்லப்படுவார்கள். கைதிகளாக சிறைபிடிக்கப்படுவார்கள். எனது அம்புகள் அவர்களது இரத்தத்தால் மூடப்படும். அவர்களது வீரர்களின் தலைகளை எனது வாள் வெட்டும்.’
43 “இந்த உலகம் முழுவதும் தேவஜனங்களுக்காக மகிழவேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களது வேலைகாரர்களைக் கொன்ற ஜனங்களை அவர் தண்டிக்கிறார். அவர் அவரது பகைவர்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுக்கிறார். அவர் அவரது நாட்டையும், ஜனங்களையும் சுத்தம் செய்கிறார்.”
44 மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் மகனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான்.
45 மோசே இவற்றை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து முடித்தபோது
46 அவன் அவர்களிடம், “இன்று நான் உங்களுக்குச் சொன்ன அனைத்துக் கட்டளைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லவேண்டும்.
47 இந்தப் போதனைகளை முக்கியமற்றவை என்று நீங்கள் எண்ணவேண்டாம். அவை உங்கள் ஜீவன் ஆகும். இந்தப் போதனைகள் மூலம், யோர்தான் ஆற்றைக் கடந்துபோய் நீங்கள் சுதந்தரிக்கத் தயாராக இருக்கும் தேசத்தில் நீண்ட வாழ்வை வாழப்போகிறீர்கள்” என்றான்.
48 கர்த்தர் மோசேயிடம் அதே நாளில் பேசினார். கர்த்தர்,
49 “அபாரீம் எனும் மலைகளுக்குப் போ, எரிகோவிற்கு எதிர்ப்புறமாக இருக்கிற மோவாப் நாட்டிலுள்ள நேபோ மலையின்மேல் ஏறு. பிறகு நீ, இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்வதற்காக நான் கொடுக்கிற, கானான் நாட்டினைப் பார்க்க முடியும்.
50 நீ அந்த மலைமீது மரணமடைவாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் மலைமீது மரித்து முற்பிதாக்களிடம் சேர்ந்ததுபோல் நீயும் உன் முற்பிதாக்களிடம் சேருவாய்.
51 ஏனென்றால், நீங்கள் இருவரும் எனக்கு எதிராக பாவம் செய்தீர்கள். நீங்கள் காதேசிலே மேரிபாவின் தண்ணீர் அருகில் இருந்தீர்கள். அது சீன் வனாந்தரத்திலே இருந்தது. அங்கே, இஸ்ரவேல் ஜனங்கள் முன்பாக, நான் பரிசுத்தமானவர் என்று நீ கனப்படுத்தவில்லை.
52 எனவே, இப்போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கிற தேசத்தை நீ பார்க்கலாம். ஆனால், நீ அந்த தேசத்திற்குள் செல்லமுடியாது” என்று கூறினார்.
Deuteronomy 32 ERV IRV TRV