Deuteronomy 20 in Tamil IRV Compare Tamil Indian Revised Version
1 நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டுப்போகும்போது, குதிரைகளையும், இரதங்களையும், உன்னைவிட பெரிய கூட்டமாகிய மக்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாதே; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்.
2 நீங்கள்போர்செய்யத் துவங்கும்போது, ஆசாரியன் சேர்ந்து வந்து, மக்களிடத்தில் பேசி:
3 இஸ்ரவேலர்களே, கேளுங்கள்; இன்று உங்கள் எதிரிகளுடன் போர்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் வருந்தவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படவும், கலங்கவும், திகைக்கவும் வேண்டாம்.
4 உங்களுக்காக உங்கள் எதிரிகளுடன் போர்செய்யவும் உங்களை இரட்சிக்கவும் உங்களுடன்கூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்.
5 அன்றியும் அதிபதிகள் மக்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அதை அர்ப்பணம் செய்யவேண்டியதாகும்.
6 திராட்சைத்தோட்டத்தை நாட்டி, அதை அனுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அதை அனுபவிக்கவேண்டியதாகும்.
7 ஒரு பெண்ணைத் தனக்கு நிச்சயம் செய்துகொண்டு, அவளைத் திருமணம்செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அவளைத் திருமணம்செய்ய வேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.
8 பின்னும் அதிபதிகள் மக்களுடனே பேசி: பயந்தவனும் மிகவும் பெலவீனமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரர்களின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகச்செய்யாதபடி, தன் வீட்டுக்குத் திரும்பிப் போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.
9 அதிபதிகள் மக்களுடன் பேசி முடிந்தபின்பு, மக்களை நடத்துவதற்கு சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.
10 நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்ய நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறுவாயாக.
11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்திரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லோரும் உனக்கு வரி கட்டுகிறவர்களாகி, உனக்கு வேலை செய்யக்கடவர்கள்.
12 அவர்கள் உன்னுடன் சமாதானமாகாமல், உன்னுடன் போர் செய்வார்களானால், நீ அதை முற்றுகையிட்டு,
13 உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள ஆண்கள் எல்லோரையும் பட்டயத்தால் வெட்டி,
14 பெண்களையும், குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் எதிரிகளின் கொள்ளைப்பொருளை அனுபவிப்பாயாக.
15 இந்த மக்களைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.
16 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,
17 அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய்.
18 அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.
19 நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்து அதைப் பிடிக்க அநேகநாட்கள் முற்றுகையிட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம் செய்யாதே அவைகளின் கனியை நீ சாப்பிடலாமே; ஆகையால் உனக்குக் கோட்டைமதில் அமைக்க உதவும் என்று அவைகளை வெட்டாதே; வெளியின் மரங்கள் மனிதனுடைய உயிர்வாழ்வதற்கு ஏற்றவைகள்.
20 சாப்பிடுவதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டி அழித்து, உன்னோடு போர்செய்கிற பட்டணம் பிடிபடும்வரை அதற்கு எதிராகக் கோட்டைமதில் போடலாம்.