1 அம்பிப்பொலி, அப்பொலோனியா நகர்களின் வழியாக அவர்கள் தெசலோனிக்கா வந்து சேர்ந்தார்கள். அங்கே யூதருடைய தொழுகைக் கூடம் ஒன்று இருந்தது.

2 தம் வழக்கத்தின்படியே பவுல் அவர்களிடம் சென்று தொடர்ச்சியாக மூன்று ஓய்வுநாள்கள் மறைநூலை அடிப்படையாக வைத்து அவர்களுடன் வாதாடினார்.

3 “மெசியா துன்பப்படவும், இறந்து உயிர்த்தெழவும் வேண்டும்; நான் உங்களுக்கு அறிவிக்கிற இயேசுவே அந்த மெசியா” என்று அவர்களுக்கு விளக்கிக் காட்டினார்.

4 அவர்களுள் சிலர் அதை நம்பி பவுல், சீலா ஆகியோருடன் சேர்ந்துகொண்டனர். கடவுளை வழிபட்ட திரளான கிரேக்கரும் மகளிருள் முதன்மையான பலரும் அவ்வாறு செய்தனர்.

5 ஆனால், யூதர்கள் பொறாமை கொண்டு, சந்தை வெளியில் இருந்து சில பொல்லாத பேர்வழிகளைச் சேர்த்து, கூட்டத்தைக் கூட்டி நகரில் அமளி உண்டாக்கினார்கள்; பவுலையும் சீலாவையும் தேடிக் கண்டுபிடித்து மக்களிடையே கூட்டிக் கொண்டுவருவதற்காக யாசோனுடைய வீட்டைத் தாக்கினார்கள்.

6 அவர்களை அங்கே காணாததால் யாசோனையும் அவரோடு சில சகோதரர்களையும் நகராட்சி மன்றத்தினரிடம் இழுத்து வந்து, “உலகமெங்கும் கலகம் உண்டாக்குகிற இவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள்.

7 யாசோன் இவர்களைத் தன் வீட்டில் வரவேற்றிருக்கிறான். இவர்கள் அனைவரும் இயேசு என்னும் இன்னொரு அரசர் இருப்பதாகச் கூறிச் சீசருடைய சட்டங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்” என்று கூச்சலிட்டார்கள்.

8 மக்கள் கூட்டத்தினரும் நகராட்சி மன்றத்தினரும் இவற்றைக் கேட்டுக் கலக்கமுற்றனர்.

9 யாசோனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிணை பெற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்தனர்.

10 இரவோடு இரவாக சகோதரர் சகோதரிகள் பவுலையும் சீலாவையும் பெரோயா நகருக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் யூதருடைய தொழுகைக் கூடத்துக்குச் சென்றார்கள்.

11 அங்கு இருந்தவர்கள் தெசலோனிக்காவில் உள்ளவர்களைவிடப் பரந்த மனப்பான்மை உடையவர்கள். அவர்கள் முழு ஆர்வத்துடன் இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டு அவர்கள் கூறுவன மறைநூலுடன் ஒத்துள்ளதா என நாள்தோறும் ஆய்ந்து வந்தார்கள்.

12 அவர்களுள் பலரும் மதிப்புக்குரிய கிரேக்க மகளிர், ஆடவர் பலரும் நம்பிக்கை கொண்டனர்.

13 பவுல் இறைவார்த்தையைப் பெரோயாவிலும் அறிவித்ததைத் தெசலோனிக்க யூதர் அறிந்து, அங்கேயும் வந்து மக்கள் கூட்டத்தினரைக் குழப்பிக் கலகம் உண்டாக்கினர்.

14 உடனே சகோதரர் சகோதரிகள் பவுலைக் கடற்கரைக்குப் போகுமாறு அனுப்பி வைத்தார்கள். ஆனால், சீலாவும் திமொத்தேயுவும் அங்கேயே தங்கினர்.

15 பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச் சென்றார்கள். சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும் என்னும் கட்டளையைப் பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

16 பவுல் அவர்களுக்காக ஏதென்சில் காத்திருந்தபோது, அந்நகரில் சிலைகள் நிறைந்திருப்பதைக் கண்டு மனம் கலங்கினார்.

17 எனவே, அவர் தொழுகைக் கூடத்தில் யூதர்களோடும் கடவுளை வழிபடுவோரோடும், சந்தை வெளிகளில் சந்தித்த மக்களோடும் ஒவ்வொரு நாளும் விவாதித்து வந்தார்.

18 எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் ஆகிய மெய்யியல் அறிஞர்கள் சிலர் அவருடன் கலந்து உரையாடினர். வேறு சிலர், “இவன் என்னதான் பிதற்றுகிறான்?” என்றனர். அவர் இயேசுவையும் அவரது உயிர்த்தெழுதலையும் நற்செய்தியாக அறிவித்து வந்ததால் மற்றும் சிலர், “இவன் வேற்றுத் தெய்வங்களைப் பற்றி அறிவிப்பவன் போலத் தெரிகிறது” என்றனர்.

19 பின்பு, அவர்கள் அவரை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், “நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா?

20 நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே! அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றார்கள்.

21 ஏனென்சு நகரத்தார் அனைவரும், அங்குக் குடியேறி வாழ்ந்துவந்த அந்நியரும் இதுபோன்ற புதிய செய்திகளைக் கேட்பதிலும் சொல்லுவதிலும் மட்டுமே தங்கள் நேரத்தைப் போக்கினர்.

22 அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: “ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன்.

23 நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப்பார்த்துக் கொண்டு வந்தபோது “அறியாத தெய்வத்துக்கு” என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

24 “உலகையும், அதிலுள்ள அனைத்தையம் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை.

25 அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே. எனவே, மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை.

26 ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின் மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார்.

27 கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில், அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்.

28 அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, “நாம் அவருடைய பிள்ளைகளே.”

29 நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனித கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது.

30 ஏனெனில், மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார்.

31 ஏனென்றால், ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார். இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானதென எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்.”

32 “இறந்தவர் உயிர்த்தெழுதல்” என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், “இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்” என்றார்கள்.

33 அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார்.

34 சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர்.

Acts 17 ERV IRV TRV