2 Samuel 12 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை.2 செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.3 ஏழையிடம் ஒரு ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர்குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது.4 வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்”.⒫5 உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம்கொண்டு “ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்,6 இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார்.7 அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; நான் உன்னைச் சவுலின் கையினின்று விடுவித்தேன்.8 உன் தலைவரின் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்; அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக்கினேன்; இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்; இது போதாதென்றால் உனக்கு மேலும் மிகுதியாய்க் கொடுத்திருப்பேன்.9 பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இரையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்!10 இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது; ஏனெனில், நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்.’11 இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வர வழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான்.12 நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்” என்று கூறினார்.⒫13 அப்போது தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார்.14 ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்” என்று சொன்னார்.15 பின்பு, நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.16 தாவீது அக் குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக்கிடந்தார்.17 அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பமில்லை. அவர்களோடு அவர் உண்ணவுமில்லை.18 பின் ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததைத் தாவீதின் பணியாளர் அவரிடம் சொல்ல அஞ்சினர். “குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசிய போது அவர் நம் குரலுக்குச் செவி கொடுக்கவில்லையே! குழந்தை இறந்து விட்டது என்று நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ?’ என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.⒫19 பணியாளர் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டதைத் தாவீது கண்டு, குழந்தை இறந்துவிட்டதை உணர்ந்து, தம் பணியாளரிடம், “குழந்தை இறந்து விட்டதா?” என்று கேட்க, அவர்களும், “ஆம், இறந்துவிட்டது” என்று பதில் கூறினர்.20 உடனே தாவீது தரையினின்று எழுந்தார். குளித்து, நறுநெய் பூசி, உடைகளை மாற்றிக் கொண்டார்; கடவுளின் இல்லம் சென்று அவரைத் தொழுதார்; பிறகு அவர்தம் இல்லம் வந்தார். அவரே கேட்க, உணவு பரிமாறப்பட்டது. அவர் அதை உண்டார்.⒫21 “நீவிர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர்; ஆனால்,குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே!” என்று அவருடைய பணியாளர் அவரிடம் கூறினர்.22 “குழந்தை உயிரோடிருந்தபோது ஒரு வேளை ஆண்டவர் இரங்குவார்; அவனும் பிழைப்பான் என்று நினைத்து, நான் உண்ணா நோன்பிருந்து அழுதேன்.23 இப்போது அவன் இறந்துவிட்டான். இனி நான் ஏன் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்? என்னால் அவனைத் திருப்பிக் கொண்டுவர முடியுமா? நான் தான் அவனிடம் செல்ல முடியுமே ஒழிய, அவன் என்னிடம் திரும்பி வர மாட்டான்” என்று கூறினார்.24 தாவீது தம் மனைவி பத்சேபாவுக்கு ஆறுதல் கூறினார். பிறகு அவளுடன் உடலுறவு கொண்டார். அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க அவனைச் சாலமோன் என்று அழைத்தார். ஆண்டவர் அவன் மீது அன்பு கொண்டிருந்தார்.25 ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தானை அனுப்பினார். அவர் ஆண்டவரை முன்னிட்டு அவனை எதிதியா* என்று அழைத்தார்.26 யோவாபு அம்மோனியரின் நகரான இரபாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் கோட்டையைக் கைப்பற்றினார்.27 யோவாபு தாவீதிடம் தூதரை அனுப்பி, “இரபாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் நீருற்றுகளை கைப்பற்றிவிட்டேன்.28 இப்போது எஞ்சியுள்ள மக்களை நீர் ஒன்றுதிரட்டி, நகருக்கு எதிரே கூடாரமிட்டு அதைக் கைப்பற்றிக்கொள்ளும். ஏனெனில், நான் இந்நகரைக் கைப்பற்றிக்கொண்டால், அதை என் பெயரால் அழைக்க நேரிடும் அல்லவா?” என்று கூறினார்.29 தாவீது மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி இரபாவுக்குச் சென்று அதற்கு எதிராகப் போரிட்டு அதைக் கைப்பற்றினார்.30 அதன் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்தார். பொன்னாலும் விலையுயர்ந்த கற்களாலுமான அம் மகுடம் ஒரு தாலந்து எடை கொண்டதாய் இருந்தது. அதைக் கொண்டு தாவீதுக்கு முடிசூட்டினர். அந்நகரிலிருந்து கொள்ளைப் பொருளையும் அவர் மிகுதியாகக் கொண்டு வந்தார்.31 அங்கிருந்த மக்களையும் அவர் கொண்டுவந்து இரம்பம், கடப்பாரை, கோடரி வேலைகளுக்கும் செங்கல் சூளை வேலைகளுக்கும் அவர்களை அமர்த்தினார். இவ்வாறே அனைத்து அம்மோனிய நகர்களுக்கும் செய்தார். பிறகு தாவீதும் மக்கள் அனைவரும் எருசலேம் திரும்பினர்.2 Samuel 12 ERV IRV TRV