2 Chronicles 14 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 அபியா தன் மூதாதையருடன் துயில்கொண்டான். அவனைத் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவனுக்குப்பின் அவன் மகன் ஆசா ஆட்சி செய்தான். அவன் காலத்தில் நாடு பத்தாண்டு அமைதி பெற்றிருந்தது.2 ஆசா, தன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் நல்லதும் நேரியதும் செய்து வந்தான்.3 வேற்றுப் பலிபீடங்களையும், தொழுகை மேடுகளையும் அகற்றினான்; சிலைத்தூண்களை உடைத்தெறிந்தான்; அசேராக் கம்பங்களை வெட்டி வீழ்த்தினான்.4 தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரை வழிபட்டு, அவர்தம் திருச்சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் ஏற்ப வாழ வேண்டுமென யூதா மக்களுக்கு ஆணையிட்டான்.5 மேலும், யூதாவின் நகர்களில் இருந்த எல்லாத் தொழுகை மேடுகளையும், தூபப்பீடங்களையும் அகற்றினான். அவனது ஆட்சியில் நாடு அமைதி கண்டது.6 பின்பு, அவன் யூதாவில் அரண்சூழ் நகர்களை எழுப்பினான். ஏனெனில், நாடு அமைதியாக இருந்தது. அவ்வாண்டுகளில் எவனும் அவனோடு போரிடவில்லை, ஆண்டவர் அவனுக்கு ஓய்வு அளித்திருந்தார்.7 அவன் யூதா மக்களிடம், “நம் கடவுளாம் ஆண்டவரை நாம் நாடியதால், நாடு நம் கையில் நிலைத்துள்ளது; நமக்கு எத்திக்கிலும் அவர் அமைதி அளித்துள்ளார். எனவே, நாம் நகர்களைக் கட்டி, அவற்றைச் சுற்றிலும் கோட்டை, கொத்தளங்களையும், தாழ்ப்பாள்கள் கொண்ட வாயில்களையும் அமைப்போம்” என்று கூறினான்.8 யூதாவிலிருந்து பரிசையும் ஈட்டியும் தாங்கிய மூன்று லட்சம் வீரரும் பென்யமினிலிருந்து கேடமும் வில்லும் தாங்கிய இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் வீரரும் கொண்ட ஒரு பெரும் படையை ஆசா கொண்டிருந்தான். இவர்கள் எல்லாரும் வலிமைமிகு வீரர்கள்.⒫9 எத்தியோப்பியன் செராகு, பத்து இலட்சம் வீரரோடும் முந்நூறு தேர்களோடும் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்து, மாரேசா வரை வந்தான்.10 ஆசா அவனை எதிர்த்துச் செல்ல, அவர்கள் மாரேசாவிலுள்ள செப்பாத்தா சமவெளியில் போருக்கு அணிவகுத்து நின்றனர்.11 அப்பொழுது, ஆசா தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்கள் கடவுளாம் ஆண்டவரே! உம்மில் நம்பிக்கை வைத்து, உமது பெயரால் இப்படையை எதிர்க்க வந்துள்ள எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்! எம்மனிதனும் உம்மை மேற்கொள்ள விடாதீர்” என்று மன்றாடினான்.⒫12 ஆண்டவர் எத்தியோப்பியரை ஆசா, யூதா முன்பாக முறியடிக்கவே, அவர்கள் தப்பியோடினர்.13 அப்பொழுது ஆசாவும் அவனோடிருந்த மக்களும் அவர்களைக் கேரார் வரை துரத்திச் சென்றனர். ஆண்டவருக்கும் அவர் மக்களுக்கும் முன்பாக எத்தியோப்பியர் வீழ்ச்சியுற்றனர்; அவர்களுள் எவனும் உயிர் தப்பவில்லை, அவர்கள் முற்றிலும் நசுக்கப்பட்டனர். யூதாவின் வீரர்களோ மிகுதியான பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.14 மேலும், கேராரைச் சுற்றியிருந்த எல்லா நகர்களையும் வீழ்த்தினர்; ஏனெனில், ஆண்டவரின் அச்சம் அவற்றைப் பற்றிக்கொண்டது. எல்லா நகர்களையும் அவர்கள் சூறையாடினர்; ஏனெனில், அங்கே கொள்ளைப் பொருள்கள் மிகுதியாய் இருந்தன.15 மேலும், அவர்கள் கூடாரங்களை இழுத்துத் தள்ளி, ஏராளமான ஆடுகளையும் ஒட்டகங்களையும் கைப்பற்றி எருசலேமுக்குத் திரும்பினர்.2 Chronicles 14 ERV IRV TRV