2 Chronicles 12 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ரெகபெயாம், தனது அரசை உறுதியுடன் நிலைநாட்டி, தன்னையே வலிமைப்படுத்திக் கொண்டபோது, ஆண்டவரின் திருச்சட்டத்தைப் புறக்கணிக்கத் தொடங்கினான். இஸ்ரயேலர் எல்லாருமே அவனைப்போலவே நடந்தனர்.2 அவர்கள் ஆண்டவருக்கு எதிராகத் துரோகம் செய்ததால் ரெகபெயாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான்.3 சீசாக்கின் படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதாயிரம் குதிரைப்படை வீரரும் இருந்தனர்; அவனோடு எகிப்திலிருந்து எண்ணற்ற ஆள்கள் — லிபியர், சுக்கியர், எத்தியோப்பியர் வந்திருந்தனர்.4 அவன் யூதாவின் அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றியபின், எருசலேமுக்கு வந்தான்.⒫5 அப்பொழுது இறைவாக்கினர் செமாயா, ரெகபெயாமிடமும் சீசாக்கின் பொருட்டு எருசலேமில் கூடியிருந்த யூதாவின் தலைவர்களிடமும், வந்து அவர்களை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: என்னை நீங்கள் புறக்கணித்ததால், நீங்கள் சீசாக்கின் கையில் பிடிபடும்படி நானும் உங்களைப் புறக்கணித்துவிட்டேன்” என்று கூறினார்.6 அதைக் கேட்ட இஸ்ரயேல் தலைவர்களும் அரசனும் தங்களையே தாழ்த்தி 'ஆண்டவர் நீதியுள்ளவர்' என்று கூறினர்.⒫7 அவர்கள் தங்களையே தாழ்த்திக் கொண்டதைக் கண்டு, ஆண்டவர் மீண்டும் செமாயாவிடம், “அவர்கள் தங்களையே தாழ்த்திக்கொண்டதால் அவர்களை நான் அழிக்க மாட்டேன். விரைவில் அவர்களுக்கு விடுதலை அளிப்பேன்; என் கடும் சினம் சீசாக்கின் வழியாக எருசலேம்மீது விழாது.8 ஆயினும், எனக்கு ஊழியம் செய்வதற்கும் மற்ற நாடுகளின் அரசர்களுக்கு ஊழியம் செய்வதற்குமுள்ள வேறுபாட்டை உணரும்வண்ணம், அவர்கள் சீசாக்கின் அடிமைகளாக இருப்பார்கள்” என்றார்.⒫9 அவ்வாறே, எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, ஆண்டவரது இல்லத்தின் கருவூலங்கள், அரண்மனைச் செல்வங்கள் அனைத்தையும் சூறையாடினான். மேலும், சாலமோன் செய்திருந்த பொற் கேடயங்களையும் எடுத்துச் சென்றான்.10 அவற்றிற்குப் பதிலாக அரசன் ரெகபெயாம் வெண்கலக் கேடயங்கள் செய்து, அவற்றை அரண்மனை வாயிற்காப்போரின் தலைவரிடம் ஒப்படைத்தான்.11 ஆண்டவரின் இல்லத்திற்குள் அரசன் நுழையும் போதெல்லாம், வாயிற்காப்போர் அக்கேடயங்களை ஏந்தி உடன் செல்வர்; பின்னர், அவற்றைக் காவல் அறையில் வைப்பர்;12 இவ்வாறு, அரசன் தன்னையே தாழ்த்திக்கொண்டதாலும், யூதாவில் நற்செயல்கள் காணப்பட்டதாலும், ஆண்டவர் அவனை முற்றிலும் அழிக்காதவாறு அவரது சினம் அவனைவிட்டு அகன்றது.13 அரசன் ரெகபெயாம் தன்னையே வலிமைப்படுத்திக்கொண்டு எருசலேமில் ஆட்சி செய்தான். ரெகபெயாம் அரசனானபோது, அவனுக்கு வயது நாற்பத்து ஒன்று. ஆண்டவர் தம் திருப்பெயரை நிலைபெறச் செய்ய இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் தேர்ந்துகொண்ட நகரான எருசலேமில் ரெகபெயாம் பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அம்மோனியளான நாமா என்பவளே அவன் தாய்.14 ஆண்டவரை நாடுவதில் அவனது உள்ளம் உறுதியாய் இராததால், அவன் தீயன செய்தான்.⒫15 ரெகபெயாமின் பிற செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை இறைவாக்கினர் செமாயாவின் குறிப்பேட்டிலும், திருக்காட்சியாளர் இத்தோவின் பதிவேட்டிலும் எழுதப்பட்டுள்ளன அல்லவா? ரெகபெயாமும் எரொபவாமும் வாழ்நாள் முழுவதும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.16 பின்பு, ரெகபெயாம் தன் மூதாதையருடன் துயில் கொண்டான்; அவனைத் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவனுக்குப் பின் அவன் மகன் அபியா ஆட்சி செய்தான்.2 Chronicles 12 ERV IRV TRV