1 Samuel 18 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.2 அன்று சவுல் தாவீதை தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அளிக்கவில்லை.3 பின்பு, யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில், அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.4 யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் கழற்றி தாவீதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார்.5 தாவீது சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொணர்ந்தார்; அதனால் சவுல் அவரை படைத்தலைவராக்கினார். மக்கள் எல்லோரும் மற்றும் சவுலின் அலுவலர்களும் இதைப் பெரிதும் விரும்பினர்.6 தாவீது பெலிஸ்தியனைக் கொன்ற பின், வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலை சந்திக்க வந்தனர். அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர்.7 அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில் “சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்” என்று பாடினார்.8 இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, “அவர்கள் ‘தாவீதுக்குப் பதினாயிரம் பேர்’ என்றனர். எனக்கோ ‘ஆயிரம் பேர் மட்டுமே’ என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்!” என்று கூறினார்.9 அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கலானார்.⒫10 மறுநாளே கடவுள் அனுப்பிய தீய ஆவி சவுலை ஆட்கொள்ள, அவர் தம் வீட்டில் பிதற்றினார். அப்போது தாவீது ஒவ்வொரு நாளும் செய்வது போல் யாழ் எடுத்து மீட்டினார். சவுலின் கையில் ஈட்டி இருந்தது.11 “நான் தாவீதை சுவரோடு சேர்த்துக் குத்துவேன்” என்று சவுல் நினைத்துத் தம் ஈட்டியை அவர்மேல் எறிந்தார்; ஆனால், தாவீது இருமுறை அதைத் தவிர்த்துவிட்டார்.⒫12 ஆண்டவர் தம்மிடமிருந்து விலகி, தாவீதுடன் இருந்ததனால் அவருக்குச் சவுல் அஞ்சினார்.13 ஆதலால், சவுல் அவரைத் தம் முன்னின்று அகற்றி, ஆயிரவர் தலைவராக்கினார். தாவீது வீரர்களை முன்னின்று நடத்தினார்.14 ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால் அவர் செய்த யாவற்றிலும் வெற்றி கண்டார்.15 அவர் பெரும் வெற்றிகளைக் குவிப்பதைக் கண்ட போது, சவுல் அவருக்கு இன்னும் அஞ்சினார்.16 ஆனால், இஸ்ரயேலரும் யூதா மக்கள் அனைவரும் தாவீதின் மீது அன்பு செலுத்தினர். ஏனெனில், அவரே அவர்களை முன்னின்று நடத்திச் சென்றார்.17 பின்பு சவுல், “என்கை அவன் மேல் படாமல் பெலிஸ்தியர் கை அவன் மேல் படட்டும்” என்று எண்ணி, தாவீதை நோக்கி, “இதோ என் மூத்த மகள் மேராபு! அவளை உனக்கு மணம் முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் வீரம்முள்ளவனாக செயல்பட்டு ஆண்டவரின் படைகளை நடத்திச் செல்” என்றார்.18 அப்பொழுது தாவீது சவுலிடம், “அரசனின் மருமகன் ஆவதற்கு நான் யார்? என் உறவினர் யார்? இஸ்ரயேலில் என் தந்தையின் குலம் என்ன?” என்று கேட்டார்.19 சவுலின் மகள் மேராபைத் தாவீதுககு மணம் முடிக்கவிருந்த நேரத்தில், அவள் மெகொலாயனாகிய அதிரியேலுக்கு மனைவியாக அளிக்கப்பட்டாள்.20 அதன் பின், சவுலின் மகள் மீக்கால் தாவீதின் மீது காதல் கொண்டாள். இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் மகிழ்ச்சியுற்றார்.21 “நான் அவளை அவனுக்குக் கொடுப்பேன். அவளும் அவனுக்கு மனைவியாய் இருப்பாள். பெலிஸ்தியரும் அவனுக்கு எதிராக எழுவர்” என்று சவுல் நினைத்து, தாவீதை நோக்கி, “இப்பொழுது என் இரண்டாம் மகள்மூலம் நீ என்மருமகனாய் ஆவாய்” என்று கூறினார்.22 சவுல் தம் பணியாளர்களிடம் “தாவீதோடு இரகசியமாய் பேசி, 'இதோ! அரசர் உம்மீது விருப்பம் கொண்டுள்ளார். அவர்கள் அலுவலர்கள் எல்லோரும் உம்மீது அன்பு கொண்டுள்ளார்கள். ஆதலால் நீ இப்போது அரசருக்கு மருமகனாய் இரும்' என்று செல்லுங்கள்” என்றார்.23 சவுலின் பணியாளர்கள் அந்த வார்த்தைகளை தாவீதின் காதுகளில் ஓதினர். அப்பொழுது தாவீது, “அரசருக்கு மருமகனாய் ஆவது உங்களுக்கு அவ்வளவு எளிதானதாய் தோன்றுகிறதா? நான் எளியவனும் தாழ்ந்தவனுமாய் உள்ளேன் அன்றோ?” என்றார்.24 சவுலின் பணியாளர்கள் அவரிடம், “தாவீது இவ்வார்த்தைகளைச் சொன்னான்” என்றனர்.⒫25 பின்பு சவுல், “தாவீதிடம் இவ்வாறு நீங்கள் சொல்லுங்கள்: 'அரசர் திருமணப் பரிசம் ஏதும் விரும்பவில்லை; அரசருடைய எதிரிகளை பழிவாங்கி, பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கொண்டுவந்தால் போதும்' என்று சொல்லுங்கள்” என்றார். தாவீது பெலிஸ்தியனின் கையில் அகப்பட்டு மடியவேண்டுமென்பதே சவுலின் திட்டம்.26 சவுலின் பணியாளர்கள் தாவீதுக்கு அந்த வார்த்தைகளைக் கூறிய போது, அரசருக்கு மருமகனாய் ஆவது குறித்து தாவீது மகிழ்ச்சியுற்றார்.27 திருமணநாள் நெருங்குமுன் தாவீது தம் ஆள்களுடன் சென்று பெலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்றார். பின்னர், தாவீது அவர்களின் நுனித் தோல்களைக் கொண்டுவந்து, அரசனின் மருமகனாய் ஆகும் பொருட்டு, அவற்றை அவரிடம் சரியாக எண்ணிவைத்தார். எனவே, சவுல் தம் மகள் மீக்காலைத் தாவீதுக்கு மணம்முடித்துக் கொடுத்தார்.28 ஆனால், ஆண்டவர் தாவீதோடு இருப்பதையும், இஸ்ரயேல் முழுவதும் அவர் மீது அன்புக் கொண்டுள்ளதையும், சவுல் தெளிவாகக் கண்டுணர்ந்தார்.29 எனவே, சவுல் தாவீதுக்கு அதிகம் அஞ்சினார். சவுல் தாவீதை என்றென்றும் தம் எதிரியாக கருதினார்.30 பின்பு, பெலிஸ்தியப் படைத் தலைவர்கள் போரிடுமாறு புறப்பட்டு வந்தனர். அப்படி அவர்கள் வந்தபோதெல்லாம் சவுலின் மற்ற எல்லாத் தலைவர்களைவிடத் தாவீது மிகுதியான வெற்றி அடைந்தார். அதனால், தாவீதின் புகழ் மேலோங்கியது.1 Samuel 18 ERV IRV TRV