Psalm 60 in Punjabi IRV Compare Tamil Indian Revised Version
1 தாவீது மெசொபத்தாமியா தேசத்து சீரியர்களோடும், சோபா தேசத்து சீரியர்களோடும் யுத்தம் செய்தபோது யோவாப் திரும்பி உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பன்னிரெண்டாயிரம் பேரை வெட்டினபோது அவன் சாட்சியை விளக்கும் ஆறு நரம்பு கின்னரத்திலே போதிப்பதற்காக பாடினதும் இராகத்தலைவனுக்கு ஒப்புவித்ததுமான மிக்தாம் என்னும் பாடல் தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாக இருந்தீர்; மறுபடியும் எங்களிடமாகத் திரும்பியருளும்.
2 பூமியை அதிரச்செய்து, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தச்செய்யும்; அது அசைகிறது.
3 உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
4 சத்தியத்தினால் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா)
5 உமது பிரியர்கள் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் காப்பாற்றி, எனக்குச் செவிகொடுத்தருளும்.
6 தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.
8 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம், ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.
9 பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம்வரை எனக்கு வழி காட்டுகிறவர் யார்?
10 எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீர் அல்லவோ?
11 ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.
12 தேவனாலே பலத்தோடு போராடுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.