Psalm 26 in Punjabi ERV Compare Tamil Easy Reading Version
1 கர்த்தாவே, என்னை நியாயந்தீரும். நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும். கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை.
2 கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும். என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும்.
3 நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன். உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.
4 நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை. அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
5 அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன். தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன்.
6 கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.
7 கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன். நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன்.
8 கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன். மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.
9 கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும். அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும்.
10 அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும். தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும்.
11 ஆனால் நான் களங்கமற்றவன். எனவே, தேவனே, என்னிடம் தயவாயிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
12 நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன். கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் சந்திக்கையில் நான் உம்மைத் துதிக்கிறேன்.