1 தாவீது அனைத்து இஸ்ரயேலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம் பேரை மீண்டும் ஒன்றுதிரட்டினார்.2 தாவீதும் அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர, பாலை யூதாவுக்குச் சென்றனர். இது கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவர் பெயரால் அழைக்கப்படுகிறது.3 குன்றின்மீது இருந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை ஒரு புதிய வண்டியில் வைத்துக்கொண்டு வந்தார்கள். அபினதாபின் புதல்வர்கள் உசாவும் அகியோவும் அப்புது வண்டியை நடத்திவந்தார்கள்.4 குன்றின்மீது இருந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை அவர்கள் கொண்டு வந்தார்கள். அகியோ பேழைக்கு முன்னால் சென்றான்.5 தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் தேவதாரு மரத்தாலான இசைக்கருவிகளோடும், யாழ், வீணை, சுரமண்டலம், மேளம், தாளம் ஆகியவற்றோடும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தனர்.6 அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்தபோது காளைமாடுகள் மிரள, உசா கடவுளின் பேழையைத் தாங்கிப் பிடித்தான்.7 அப்போது உசாவுக்கு எதிராக ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. கடவுள் அவனது தவற்றுக்காக அங்கேயே அவனை வீழ்த்தினார். அவன் கடவுளின் பேழையருகே இறந்தான்.8 ஆண்டவர் சினமுற்று உசாவைத் திடீரெனத் தாக்கியதால், தாவீது மனவேதனை அடைந்தார். இந்நாள் வரை அவ்விடம் 'பெரேசு-உசா'* என்று அழைக்கப்படுகிறது.9 அன்று தாவீது ஆண்டவருக்கு அஞ்சி, “இத்தகைய ஆண்டவரின் பேழையை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்வேன்?” என்று வினவினார்.10 எனவே, ஆண்டவரின் பேழையைத் தாவீதின் நகருக்குத் தம்மோடு எடுத்துச்செல்ல அவர் விரும்பவில்லை. கித்தியனான ஓபேது ஏதோமின் இல்லத்திற்கு அதைத் திருப்பிவிட்டார்.11 ஆண்டவரின் பேழை கித்தியனான ஓபேது — ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கிற்று. ஆண்டவர் ஓபேது ஏதோமுக்கும் அவன் வீட்டார் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.12 ஆண்டவரின் பேழையை முன்னிட்டு ஓபோது — ஏதோமின் வீட்டாருக்கும் அவனுக்குரிய அனைத்துக்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார் என்று அரசர் தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது — ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார்.13 ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார்.14 நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக்கொண்டிருந்தார்.15 தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.16 ஆண்டவரின் பேழை தாவீதின் நகரை அடைந்தபோது, சவுலின் மகள் மீக்கால் பலகணி வழியாகப் பார்த்தாள். அரசர் தாவீது ஆண்டவர் முன்பு குதித்து ஆடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவரைத் தன் உள்ளத்தில் வெறுத்தாள்.17 ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவு பலிகளையும் செலுத்தினார்.18 எரிபலிகளையும் நல்லுறவு பலிகளையும் செலுத்தியபின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார்.19 பிறகு, தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.20 தாவீது தம் வீட்டாருக்கு ஆசி வழங்க வந்தார். அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, “இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழற்றுவதுபோல, இஸ்ரயேலின் அரசர் தம் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமை கொண்டாரே!” என்று ஏளனம் செய்தாள்.21 “ஆண்டவரின் மக்கள்மீதும் இஸ்ரயேல்மீதும் தலைவனாக இருக்குமாறு உன் தந்தையையும் அவர் தம் வீட்டாரையும் ஒதுக்கிவிட்டு, என்னைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன்; இன்னும் ஆடுவேன்.22 நான் என்னை இன்னும் கடையவனாக்கிக் கொள்வேன்; என் கண்முன் என்னைத் தாழ்த்திக் கொள்வேன்; நீ குறிப்பிட்ட பணிப்பெண்களுக்கு முன்பாக நான் பெருமை அடைவேன்” என்று தாவீது மீக்காலிடம் கூறினார்.23 சவுலின் மகள் மீக்காலுக்குச் சாகும் வரை குழந்தைப்பேறு கிட்டவில்லை.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.