Psalm 64 in Oriya ERV Compare Tamil Easy Reading Version
1 தேவனே நான் கூறுவதைக் கேளும். நான் என் பகைவர்களுக்கு அஞ்சுகிறேன். என் ஜீவனைப் பகைவரிடமிருந்து காத்தருளும்.
2 என் பகைவரின் இரகசிய திட்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும். அத்தீய ஜனங்களிடமிருந்து என்னை மறைத்து வையும்.
3 அவர்கள் என்னைக்குறித்து இழிவான பொய்கள் பலவற்றைக் கூறினார்கள். அவர்கள் நாவுகளோ கூரிய வாள்களைப் போன்றவை. அவர்களின் கசப்பான வார்த்தைகள் அம்புகளுக்கு ஒப்பானவை.
4 அவர்கள் ஒளிந்திருந்து உடனடியாக எவ்வித பயமுமின்றித் தங்கள் அம்புகளை நேர்மையான, சாதாரண ஒரு மனிதனை நோக்கி எய்கிறார்கள்.
5 அவர்கள் ஒவ்வொருவரும் தீங்கு செய்வதற்கு தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர். அவர்கள் பொய்களைக் கூறி, கண்ணிகளை வைக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி “நாம் கண்ணி வைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
6 அவர்கள் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் பலியை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஜனங்கள் நினைப்பதை அறிவது கடினமானது.
7 ஆனால் தேவனும் தமது “அம்புகளை” எய்யக்கூடும்! தீயோர் அதை அறிந்துகொள்ளும் முன்னமே காயமுற்றிருப்பார்கள்.
8 தீயோர் பிறருக்குத் தீயவற்றைச் செய்ய நினைப்பார்கள். ஆனால் தேவனால் அவர்கள் திட்டத்தை அழிக்க முடியும். அத்தீய காரியங்கள் அவர்களுக்கே நிகழுமாறு செய்ய இயலும். அவர்களைக் காணும் ஒவ்வொருவரும் ஆச்சரியத்தால் தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
9 தேவன் செய்ததை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். அவரைக் குறித்து அந்த ஜனங்கள் பிறருக்குச் சொல்வார்கள். அப்போது ஒவ்வொருவரும் தேவனைக் குறித்து அதிகமாக அறிவார்கள். தேவனுக்கு அஞ்சி, அவரை மதிக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
10 நால்லோர் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பார்கள். அவர்கள் தேவனில் நம்பிக்கைக்கொள்வார்கள். நல்லோராகிய நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.