1 Thessalonians 2 in Oriya TRV Compare Thiru Viviliam
1 சகோதர சகோதரிகளே! நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாகவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.2 உங்களிடம் வருமுன்பே பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம். இழிவாக நடத்தப்பட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் பெரும் எதிர்ப்புக்கிடையில் கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம்.3 எங்கள் அறிவுரைகள் தவற்றையோ, கெட்ட எண்ணத்தையோ, வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவையல்ல.4 நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப, நாங்கள் பேசுகிறோம். மனிதர்களுக்கு அல்ல, எங்கள் இதயங்களைச் சோதித்தறியும் கடவுளுக்கே உகந்தவர்களாயிருக்கப் பார்க்கிறோம்.5 நாங்கள் என்றும் போலியாக உங்களைப் புகழ்ந்ததேயில்லை. இது உங்களுக்குத் தெரிந்ததே. போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை. இதற்குக் கடவுளே சாட்சி.6 ❮6-7❯கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால், மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம்.7 Same as above8 இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில், நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள்.9 அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்.⒫10 நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும் நேர்மையோடும் குற்றமின்றியும் ஒழுகினோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி!11 ❮11-12❯ஒரு தந்தை தம் பிள்ளைகளை நடத்துவதுபோல உங்களை நடத்தினோம். தம்முடைய ஆட்சியிலும் மாட்சியிலும் பங்குபெற உங்களை அழைக்கும் கடவுளுக்கு ஏற்ப நடக்குமாறு உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கினோம்; உங்களை ஊக்குவித்தோம்; வற்புறுத்தினோம். இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவையே.⒫12 Same as above13 கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது.14 சகோதர சகோதரிகளே! இயேசு கிறிஸ்துவின் உறவில் யூதேயாவில் வாழும் கடவுளின் சபைகளுக்கு நேர்ந்ததுபோலவே உங்களுக்கும் நேர்ந்தது. யூதர்களால் அவர்கள் துன்புறுத்தப்பட்டதுபோலவே நீங்களும் உங்கள் சொந்த இனத்தாரால் துன்புறுத்தப்பட்டீர்கள்.15 அந்த யூதரே ஆண்டவராகிய இயேசுவையும் இறைவாக்கினரையும் கொன்றார்கள். எங்களையும் துரத்திவிட்டார்கள். அவர்கள் கடவுளுக்கு உகந்தவர்கள் அல்ல; மனித இனத்திற்கே எதிரிகள்.16 ஏனெனில், பிற இனத்தார் மீட்புப் பெறுமாறு நாங்கள் அவர்களிடம் பேசுவதைத் தடுக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களை என்றும் பெருக்கிக் கொண்டே போகிறார்கள். இறுதியில் கடவுளின் சினம் அவர்கள் மேல் வந்துவிட்டது.17 அன்பர்களே! நாங்கள் உள்ளத்தால் அல்ல, உடலால் மட்டுமே உங்களை விட்டுச் சிறிதுகாலம் பிரிந்து தவித்தோம். உங்கள் முகத்தைக் காண பேராவலோடு ஏங்கியிருந்தோம்.18 ஆகையால், நாங்கள் உங்களிடம் வர விரும்பினோம். அதிலும் பவுலாகிய நான் ஒருமுறை அல்ல, இருமுறை உங்களிடம் வரத் திட்டமிட்டேன். ஆனால், சாத்தான் எங்களைத் தடுத்து விட்டான்.19 நம் ஆண்டவர் இயேசுவின் வருகையின்போது, அவர்முன், உங்களைத்தானே நாங்கள் எதிர்நோக்கி இருக்கப் போகிறோம்? நீங்கள்தானே எங்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையோடு சூடப்போகும் வெற்றிவாகையுமாய் இருக்கப் போகிறீர்கள்? உங்களைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?20 ஆம், உங்களால்தான் எங்களுக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.