1 சவுல் பெலிஸ்திரைத் தொடர்வதைக் கைவிட்டுத் திரும்பிய போது; “இதோ ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறான்” என்று தெரிவிக்கப்பட்டது.2 சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார்.3 அவர் சென்ற போது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர்.4 தாவீதின் ஆள்கள் அவரிடம், “‘இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன். உன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்குச் செய்,’ என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!” என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார்.5 தாவீது சவுலின் தொங்கலை அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார்.6 அவர் தம் ஆள்களைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர் மேல் கைவைக்கக்கூடாது” என்றார்.7 ஆதலின், தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு, சவுல் எழுந்து குகையை விட்டு தம் வழியே சென்றார்.⒫8 அதன்பின், தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின் தொடர்ந்து, “அரசே, என் தலைவரே!” என்று அழைத்தார். சவுல் பின்புறம் திரும்பிய போது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார்.9 பின்பு, தாவீது சவுலை நோக்கி, “‘தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்’ என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா?10 இதோ! குகையில் ஆண்டவர் என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால், ‘அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது’ என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன்.11 என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லையென்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை.12 உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என்பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால், உமக்கு எதிராக என் கை எழாது.13 முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, ‘தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்’. ஆதலால்’ உம் மேல் நான் கைவைக்க மாட்டேன்.14 இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின் தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ?15 ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!” என்றார்.⒫16 தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தபின் சவுல், “என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா!” என்று சொல்லி உரத்த குரலில் அழுதார்.17 அவர் தாவீதிடம், “நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால், நானோ உனக்குத் தீங்கு செய்தேன்.18 ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய்.19 ஏனெனில், ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!20 இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்.21 ஆதலால், எனக்குப் பின்வரும் என் வழிமரபை நீ வேரறுப்பதில்லை என்றும் என் தந்தை வீட்டாரிலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் ஆண்டவர் மேல் எனக்கு ஆணையிட்டுக் கூறு” என்றார்.⒫22 அவ்வாறே, தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கூறினார். பின்னர், சவுல் வீடு திரும்ப, தாவீதும் அவர் தம் ஆள்களும் பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்றனர்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.