Deuteronomy 27 in Nepali TRV Compare Thiru Viviliam
1 மோசே இஸ்ரயேலின் தலைவர்களோடு சேர்ந்து மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: ‘இன்று நான் உங்களுக்கு விதிக்கும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள்.2 நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நுழையும் நாளில், பெரிய கற்களை நாட்டி, அவற்றின்மேல் சாந்து பூசுங்கள்.3 உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தது போல், உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்குள் நீங்கள் நுழையுமாறு கடந்து சென்றதும், அக்கற்களின் மீது திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் எழுதிவையுங்கள்.4 நீங்கள் யோர்தானைக் கடந்து சென்றதும், நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டது போல, இத்தகைய கற்களை ஏபால் மலைமீது நாட்டி, அவற்றின் மீது சாந்து பூசுங்கள்.5 அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கற்களாலான ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். அவற்றின்மீது இரும்புக்கருவிபடவேண்டாம்.6 கற்களால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிபீடம் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலிகளைச் செலுத்துங்கள்.7 நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அங்கேயே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உணவருந்தி மகிழ்ச்சி கொள்ளுங்கள்.8 மேலும், அக்கற்களின்மீது இத்திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் மிகத் தெளிவாக எழுதிவையுங்கள்.9 பின்னர், மோசே லேவியக் குருக்களோடு சேர்ந்து இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் சொன்னதாவது: ‘இஸ்ரயேலே, கவனமாகக் கேள். நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவரின் மக்களினம் ஆகியுள்ளாய்.10 எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நிறைவேற்று’.11 மோசே அன்று மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது:12 நீங்கள் யோர்தானைக் கடந்தபின், மக்களுக்கு ஆசிவழங்குமாறு, சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமின் ஆகியோர் கெரிசிம் மலைமீது நிற்கட்டும்.13 மக்களுக்குச் சாபம் வழங்குமாறு, ரூபன், காத்து, ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோர் ஏபால் மலைமீது நிற்கட்டும்.14 லேவியர் இஸ்ரயேலர் அனைவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியது:15 ‘ஆண்டவருக்கு அருவருப்பானதும், சிற்பியின் கைவினைப் பொருள்களுமான வார்ப்புச் சிலையையோ செதுக்குச் சிலையையோ செய்து அதை மறைவான இடத்தில் வைப்பவர் சபிக்கப்படட்டும்’. உடனே மக்கள் அனைவரும் பதில் மொழியாக ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.16 ‘தம் தந்தையையோ தாயையோ பழிக்கிறவர் சபிக்கப்படட்டும். உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.17 ‘தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.18 ‘பார்வையற்றவரை வழிதவறச் செய்பவர் சபிக்கப்படட்டும்’. உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.19 ‘அந்நியருக்கும், அநாதைக்கும், கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டுபவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.20 ‘தன் தந்தையின் மனைவியோடு கூடுகிறவன் தன் தந்தைக்கு உரியவளின் உடையைத் திறந்ததனால் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.21 ‘எந்தவொரு விலங்கோடும் புணர்கிறவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.22 ‘தன் தந்தையின் புதல்வி அல்லது தன் தாயின் புதல்வியாகிய தன் சகோதரியுடன் கூடுகிறவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.23 ‘தன் மனைவியின் தாயோடு கூடுபவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.24 ‘தமக்கு அடுத்திருப்பவரை ஒளிந்திருந்து கொல்பவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.25 ‘குற்றமற்றவரைக் கொல்வதற்காகக் கையூட்டு வாங்குபவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.26 ‘இத்திருச் சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.