Revelation 13 in Gujarati TRV Compare Thiru Viviliam
1 அப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வெளியே வரக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து மணிமுடிகளும் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்களும் காணப்பட்டன.2 நான் கண்ட அந்த விலங்கு சிறுத்தைபோல் இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போன்றும் வாய் சிங்கத்தின் வாய்போன்றும் இருந்தன. அந்த அரக்கப்பாம்பு தன் வல்லமையையும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அதற்கு அளித்தது.3 அந்த விலங்கின் தலைகளுள் ஒன்று உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய அளவுக்குப் படுகாயப்பட்டிருந்ததுபோல் தோன்றியது; ஆனால், அந்தப் படுகாயம் குணமாகியிருந்தது. மண்ணுலகு முழுவதும் வியப்புற்று அவ்விலங்கைப் பின் தொடர்ந்தது.4 அரக்கப்பாம்பு அவ்விலங்குக்குத் தன் அதிகாரத்தை அளித்திருந்ததால், மக்கள் அப்பாம்பை வணங்கினார்கள்; “விலங்குக்கு ஒப்பானவர் யார்? அதனுடன் போரிடக் கூடியவர் யார்?” என்று கூறி அவ்விலங்கையும் வணங்கினார்கள்.⒫5 ஆணவப் பேச்சுப் பேசவும் கடவுளைப் பழித்துரைக்கவும் அவ்விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது; நாற்பத்திரண்டு மாதம் அது அதிகாரம் செலுத்த விடப்பட்டது;6 கடவுளையும் அவரது பெயரையும் உறைவிடத்தையும் விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத் தொடங்கியது.7 இறைமக்களோடு போர்தொடுக்கவும் அவர்களை வெல்லவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது; குலத்தினர், மக்களினத்தினர், மொழியினர், நாட்டினர் ஆகிய அனைவர்மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.8 மண்ணுலகில் வாழ்வோர் அனைவரும் அதை வணங்குவர். இவர்கள் கொலை செய்யப்பட்ட ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் உலகம் தோன்றியது முதல் பெயர் எழுதப்படாதோர்.⒫9 கேட்கச் செவி உடையோர் கேட்கட்டும்;10 “சிறையிலிடப்பட வேண்டியவர் சிறையிலிடப்படுவர்; வாளால் கொல்லப்பட வேண்டியவர் வாளால் மடிவர்.” ஆகவே இறைமக்களுக்கு மனவுறுதியும் நம்பிக்கையும் தேவை.11 பின்னர், மற்றொரு விலங்கு மண்ணிலிருந்து வெளியே வரக் கண்டேன். ஆட்டுக்கிடாயின் கொம்புகளைப் போன்று இரு கொம்புகள் அதற்கு இருந்தன. ஆனால், அது அரக்கப்பாம்பு போன்று பேசியது.12 அவ்விலங்கு முதலாம் விலங்கின் முழு அதிகாரத்தையும் அதன் முன்னிலையில் செயல்படுத்தியது. உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய படு காயத்தினின்று குணம் பெற்றிருந்த முதல் விலங்கை மண்ணுலகும் அதில் வாழ்வோரும் வணங்கும்படி செய்தது.13 அது பெரிய அடையாளச் செயல்கள் செய்தது; மனிதர் பார்க்க விண்ணிலிருந்து மண்மீது நெருப்பு விழும்படியும் செய்தது.14 இவ்வாறு முதல் விலங்கின் முன்னிலையில் அது செய்யும்படி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த அரும் அடையாளங்களால் மண்ணுலகில் வாழ்வோரை ஏமாற்றியது; வாளால் படுகாயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்குக்குச் சிலை ஒன்று செய்யுமாறு அவர்களிடம் கூறியது.15 அச்சிலையைப் பேசவைக்கவும் அதனை வணங்காதவர்களைக் கொலை செய்யவும் அதற்கு உயிர் கொடுக்குமாறு இரண்டாம் விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது.16 சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது.17 இவ்வாறு, அந்த விலங்கின் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக்கொள்ளாத எவராலும் விற்கவோ வாங்கவோ முடியவில்லை.⒫18 இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.