1 பின்பு, தாவீது, குலத்தலைவர்கள், அரசருக்குப் பணியாற்றிவந்த பிரிவுகளின் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள், அரசருக்கும் அவர் புதல்வருக்கும் உடைமையான அனைத்துச் சொத்துக்கள் மற்றும் மந்தைகளைக் கண்காணித்து வந்த தலைவர்கள் ஆகிய இஸ்ரயேலின் அனைத்துத் தலைவர்களையும், மற்றும் அரண்மனை அலுவலர்கள், போர்வீரர்கள், வலிமைமிகு எல்லா வீரர்கள் ஆகியோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தார்.⒫

2 பின்பு, அரசர் தாவீது எழுந்து நின்று கூறியது: “என் சகோதரரே! என் மக்களே! எனக்குச் செவி கொடுங்கள். நம் கடவுளின் கால்மணையாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்குக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு என் மனத்தில் எண்ணினேன்; அதைத் கட்டுவதற்குரிய முன்னேற்பாடுகளையும் செய்தேன்.

3 ஆனால், கடவுள், ‘நீ என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டாம், ஏனெனில், நீ போர் பல செய்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்’ என்றார்.

4 ஆயினும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேல்மேல் என்றென்றும் அரசனாய் இருப்பதற்கு என் தந்தை வீட்டாரிலெல்லாம் என்னைத் தேர்ந்துகொண்டார். தலைமை ஏற்குமாறு யூதா குடும்பத்தையும், யூதா குடும்பத்தில் என் தந்தை வீட்டையும் தேர்ந்து கொண்ட என் தந்தையின் புதல்வருள் என்மேல் விருப்பமுற்று இஸ்ரயேல் அனைவர் மேலும் என்னை அரசன் ஆக்கினார்.

5 ஆண்டவர் எனக்குப் புதல்வர் பலரை அளித்துள்ளார். அவர்களுள், இஸ்ரயேலில் ஆண்டவரது அரசின் அரியணைமீது அமர்வதற்கு, என் மகன் சாலமோனைத் தேர்ந்து கொண்டார்.⒫

6 அவர் என்னை நோக்கி, ‘உன் மகன் சாலமோனே என் இல்லத்தையும் என் முற்றங்களையும் கட்டியெழுப்புவான். அவனை நான் எனக்கு மகனாகத் தேர்ந்து கொண்டுள்ளேன். நானும் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்.

7 அவன் என் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் இன்றுபோல் உறுதியுடன் கடைப்பிடித்து வந்தால் நான் அவன் அரசை என்றென்றும் நிலைநாட்டுவேன்’ என்றார்.⒫

8 எனவே, இப்பொழுது ஆண்டவரின் சபையாகிய இஸ்ரயேலர் எல்லாரின் கண் காண, நம் கடவுளின் செவி கேட்க, நான் கூறுவது; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் விதிமுறைகள் அனைத்தையும் நாடிக் கடைப்பிடிப்பீர்களாக! அப்போது நீங்கள் இந்த நல்ல நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குப் பின் உங்கள் புதல்வர் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.⒫

9 என் மகனே, சாலமோன்! நீயோ, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு மனத்தோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்; ஏனெனில், ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆய்ந்தறிகிறார்; எல்லாத் திட்டங்களையும், எல்லா எண்ணங்களையும் பகுத்தறிகிறார்; நீ அவரைத் தேடினால் கண்டடைவாய், நீ அவரைப் புறக்கணித்தால் அவர் உன்னை என்றென்றும் கைவிடுவார்.

10 இதோ பார்! திருத்தலமாகக் கோவில் ஒன்று கட்டுவதற்கு ஆண்டவர் உன்னைத் தெரிந்தெடுத்துள்ளார்! துணிவுடன் அதைச் செய்வாயாக!”⒫

11 தாவீது தம் மகனிடம் கோவிலின் மண்டபம், அதன் அறைகள், அதன் கருவூல அறைகள், அதன் மேல்மாடிகள், அதன் உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கைக்கான அறை ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.

12 மேலும், தம் மனத்தில் எண்ணியபடி, ஆண்டவரது இல்லத்தின் முற்றங்கள், அதைச் சுற்றியுள்ள அறைகள், கடவுளின் கோவிலுக்கான கருவூலங்கள், நேர்ச்சைப் பொருள்களின் கருவூலங்கள் ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.

13 அவர், குருக்கள், லேவியர் ஆகியோரின் பிரிவுகள், ஆண்டவரின் இல்லப் பணிக்கான அனைத்து முறைவேலை, ஆண்டவரது இல்லப் பணிக்கான அனைத்துக் கலங்கள் ஆகியவற்றின் செய்முறை குறிப்புகளைக் கொடுத்தார்.

14 ஒவ்வொரு திருப்பணிக்கும் தேவையான பொன், வெள்ளிக் கலங்களைச் செய்வதற்கான பொன், வெள்ளியின் செக்கேல் நிறையையும்,

15 பொன் விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் பொன் அகல்களுக்கும் தேவையான பொன்னின் நிறையையும், வெள்ளி விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் அகல்களுக்கும் தேவையான வெள்ளியின் நிறையையும்,

16 திருமுன்னிலை அப்ப மேசை ஒவ்வொன்றிற்குமான பொன் நிறையையும், வெள்ளி மேசைக்கான வெள்ளி நிறையையும்,

17 அள்ளுக்கருவிகளுக்கும், கலங்களுக்கும், கிண்ணங்களுக்குமான பசும்பொன்னின் நிறையையும் பொற்கலங்களில் ஒவ்வொரு கலத்திற்கும் தேவையான நிறையையும் வெள்ளிக் கலங்களின் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் தேவையான நிறையையும் கொடுத்தார்.⒫

18 தூபபீடத்திற்கான புடமிடப்பட்ட பொன்னின் நிறையையும் கொடுத்தார். இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை மூடும் பொற்கெருபுகளைக் கொண்ட பொன் தேரின் மாதிரி வடிவத்தையும் கொடுத்தார்.

19 தாவீது, “இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார்” என்றார்.⒫

20 தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, “நீ மன வலிமை கொள்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே! செயல்படு! கடவுளாகிய ஆண்டவர், என் கடவுள் உன்னோடும் இருக்கிறார். ஆண்டவரின் இல்லப்பணி அனைத்தும் நிறைவு பெறும்வரை அவர் உன்னைவிட்டு விலகார்; உன்னைக் கைவிடார்.

21 இதோ, கடவுளது கோவிலின் அனைத்துத் திருப்பணிக்கெனவும், குருத்துவ, லேவியப் பிரிவுகள் தயாராய் உள்ளன; எல்லா வகைப் பணியிலும் உனக்கு உதவி செய்ய, எந்த ஒரு பணியையும் செய்வதற்குத் திறமை வாய்ந்தோரும் ஆர்வமிக்கோரும் உன்னோடு இருக்கின்றனர். மேலும், தலைவர்களும் மக்கள் யாவரும் உன் கட்டளைகள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.”

1 நாளாகமம் 28 ERV IRV TRV