1 பிலேயாம் பாலாக்கிடம், “இங்கே ஏழு பலி பீடங்களை கட்டி. ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தயார் செய்யும்” என்றான்.
2 பாலாக் பிலேயாம் சொன்னபடி செய்தான். பிறகு பாலாக்கும் பிலேயாமும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு காளையையும் ஒவ்வொரு பலிபீடத்திலும் பலியிட்டனர்.
3 பிறகு பிலேயாம் பாலாக்கிடம், “இப்பலிபீடத்தின் அருகில் இரும். நான் இன்னொரு இடத்திற்குப் போவேன். பிறகு கர்த்தர் என்னிடம் வருவார். நான் என்ன சொல்லவேண்டுமோ அதனை அவர் சொல்லுவார்” என்றான். பிறகு பிலேயாம் ஓர் உயரமான இடத்திற்குச் சென்றான்.
4 அந்த இடத்தில் பிலேயாமிடம் தேவன் வந்தார். பிலேயாம் அவரிடம், “நான் ஏழு பலி பீடங்களைத் தயார் செய்துள்ளேன். அவற்றில் இரண்டில் ஒரு காளையும் ஒரு ஆட்டுக் கடாவையும் பலியிட்டேன்” என்றான்.
5 கர்த்தர் பிலேயாமிடம் அவன் என்ன சொல்ல வேண்டுமோ அதனைச் சென்னார். பிறகு கர்த்தர், “பாலாக்கிடம் திரும்பிப்போ. நான் இவற்றைச் சொல்லச் சொன்னேன் என்று அவனிடம் சொல்” என்றார்.
6 எனவே பிலேயாம் பாலாக்கிடம் போனான். பாலாக்கும் அவனோடு மோவாபின் தலைவர்களும் பலிபீடத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர்.
7 பிறகு பிலேயாம் பின்வருமாறு சொன்னான்: மோவாபின் அரசனான பாலாக் என்னை இங்கே அழைத்து வந்தான். ஆராம் மலையின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்தேன். பாலாக் என்னிடம், “வா, வந்து எனக்காக யாக்கோபிற்கு எதிராகப் பேச வேண்டும், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் பேச வேண்டும்” என்று கேட்டான்.
8 ஆனால் தேவன் அந்த ஜனங்களுக்கு எதிராக இல்லை. எனவே, என்னாலும் அவர்களுக்கு எதிராகப் பேச முடியாது! கர்த்தர் அந்த ஜனங்களுக்கு தீமை ஏற்படும்படி பேசவில்லை. எனவே என்னால் அவ்வாறுச் செய்ய முடியாது.
9 நான் மலையிலிருந்து அந்த ஜனங்களைப் பார்க்கிறேன். உயரமான மலையிலிருந்து அவர்களைப் பார்க்கிறேன். அவர்கள் தனியாக வாழ்கிறார்கள். அவர்கள் வேறொரு தேசத்தாரையும் சேர்ந்தவர்கள் அல்ல.
10 யாக்கோபின் ஜனங்களை எவரால் எண்ணிப் பார்க்க முடியும்? அவர்கள் புழுதியைப் போல அதிக எண்ணிக்கையுள்ளவர்கள். இஸ்ரவேல் ஜனங்களின் நாலில் ஒரு பங்கைக்கூட எவராலும் எண்ண இயலாது. என்னை ஒரு நல்ல மனிதனைப் போன்று மரிக்கவிடு. அவர்களுடைய வாழ்வைப் போன்று மகிழ்ச்சியோடு என் வாழ்வையும் முடியவிடு!.
11 பாலாக் பிலேயாமிடம், “நீர் எனக்கு என்ன செய்தீர்? எனது பகைவர்களுக்கு எதிராகப் பேசும்படி உம்மை அழைத்து வந்தேன். ஆனால் நீர் அவர்களை ஆசீர்வாதம் செய்கிறீரே!” என்றான்.
12 ஆனால் பிலேயாம், “கர்த்தர் என்னிடம் சொல்லுமாறு சொன்னவற்றையே நான் சொல்வேன்” என்றான்.
13 பிறகு பாலாக் அவனிடம், “இன்னொரு இடத்திற்கு வா. அந்த இடத்திலிருந்து அவர்களில் மிகுதியான ஜனங்களை நீ பார்க்க முடியும். ஆனால் அவர்களில் முழு பகுதியினரை உன்னால் பார்க்க முடியாது. ஆனால் அவர்களில் ஒரு பகுதியினரை உன்னால் பார்க்க முடியும். எனக்காக அங்கிருந்து அவர்களுக்கு எதிராக நீ பேச முடியும்” என்றான்.
14 எனவே பாலாக் பிலேயாமை காவற்காரன் மலைக்கு அழைத்து சென்றான். இது பிஸ்கா மலையின் உச்சியில் இருந்தது. அங்கே பாலாக் ஏழு பலிபீடங்களைக் கட்டினான். பின் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக்கடாவையும் தனித்தனியாக ஒவ்வொரு பலிபீடத்திலும் பலியாக செலுத்தினான்.
15 பிலேயாம் பாலாக்கிடம், “இந்தப் பலி பீடத்தின் அருகிலே இரு. நான் அந்த இடத்திற்குப் போய் தேவனைச் சந்தித்துவிட்டு வருகிறேன்” என்றான்.
16 எனவே கர்த்தர் பிலேயாமிடம் வந்து பேசி, தான் சொன்னவற்றை பாலாக்கிடம் திரும்பிப்போய் சொல்லுமாறு கூறினார்.
17 பிலேயாம் பாலாக்கிடம் திரும்பிப் போனான். அங்கே பலிபீடத்தின் அருகிலேயே பாலாக் நின்றுகொண்டிருந்தான். அவனோடு, மோவாபின் தலைவர்களும் நின்றுகொண்டிருந்தனர். பிலேயாம் வருவதைப் பார்த்து பாலாக், “கர்த்தர் என்ன சொன்னார்?” எனக் கேட்டான்.
18 பிலேயாம் அவனிடம், “பாலாக்! எழுந்து நில். நான் சொல்வதைக் கவனி. சிப்போரின் மகனான பாலாக்கே! நான் சொல்வதைக்கேள்:
19 தேவன் ஒரு மனிதனல்ல; அவர் பொய்ச் சொல்லமாட்டார். அவர் மானிடன் அல்ல. அவரது முடிவு மாறாதது. கர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால் அவர் அதனை நிச்சயம் செய்வார். கர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால் அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார்.
20 கர்த்தர் அந்த ஜனங்களை ஆசீர்வதிக்குமாறு சொன்னார். அவர் அவர்களை ஆசீர்வதித்தார். அதனை என்னால் மாற்ற முடியாது.
21 யாக்கோபின் ஜனங்களிடம் தேவன் எவ்வித தவறையும் காணவில்லை. இஸ்ரவேல் ஜனங்களிடம் எவ்வித பாவத்தையும் தேவன் பார்க்கவில்லை. கர்த்தரே அவர்களின் தேவன். அவர் அவர்களோடு இருக்கிறார். அந்த மாபெரும் அரசர் அவர்களோடு இருக்கிறார்!
22 அவர்களை அவர் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். அவர்கள் காட்டுக் காளையைப் போன்று பலம் பொருந்தியவர்கள்.
23 யாக்கோபின் ஜனங்களைத் தோற்கடிக்கிற வல்லமை எதுவும் இல்லை. இஸ்ரவேல் ஜனங்களை தடுத்து நிறுத்துகிற மந்திரம் எங்குமில்லை. ‘தேவன் செய்த மாபெரும் செயல்களை பாருங்கள்’ என்று யாக்கோபையும் இஸ்ரவேல் ஜனங்களையும் பற்றி ஜனங்கள் பேசுவார்கள்.
24 அந்த ஜனங்கள் சிங்கம் போன்று பலமுள்ளவர்கள். அவர்கள் சிங்கத்தை போன்றே சண்டையிடுவார்கள். அந்தச் சிங்கம் பகைவரை அடித்துத் தின்னும்வரை ஓய்வு எடுக்காது. தனக்கு எதிராக வந்த ஜனங்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை அது ஓய்வு எடுக்காது” என்றான்.
25 பிறகு பாலாக் பிலேயாமிடம், “நீ அவர்களுக்கு நன்மை நடக்குமாறு கேட்க வேண்டாம். நீ அவர்களுக்கு தீமை ஏற்படுமாறும் கேட்கவேண்டாம்” என்றான்.
26 பிலேயாம் அதற்கு, “கர்த்தர் சொல்லச் சொல்லுகிறவற்றைத்தான் நான் சொல்வேன் என்று ஏற்கெனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று பதிலுரைத்தான்.
27 பிறகு பாலாக் பிலேயாமிடம் “எனவே என்னோடு இன்னொரு இடத்திற்கு வா. அங்கேயிருந்து நீ அவர்களைச் சபிப்பது தேவனுக்குப் பிடிக்கலாம்” என்று அழைத்தான்.
28 பிலேயாமைப் பாலாக் அழைத்துக் கொண்டு பேயோர் என்னும் மலையின் உச்சிக்குப் போனான். அது பாலைவனத்திற்கு மேலே தெரிந்தது.
29 பிலேயாம், “ஏழு பலிபீடங்களை இங்கே கட்டு. பிறகு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலிக்கென்று ஆயத்தப்படுத்து” என்றான்.
30 பிலேயாம் கேட்டுண்டபடி பாலாக் செய்தான். பலிபீடத்தில் காளைகளையும் ஆட்டுக் கடாக்களையும் பலியிட்டான்.
எண்ணாகமம் 23 ERV IRV TRV