மத்தேயு 22 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 இயேசு மேலும் சிலவற்றை உவமைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
2 “பரலோக இராஜ்யமானது தன் மகனது திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த மன்னன் ஒருவனுக்கு ஒப்பாகும்.
3 அம்மன்னன் விருந்துண்ண சிலரை அழைத்தான். விருந்து தயாரானபொழுது தன் வேலைக்காரர்களை அனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னான். ஆனால் அவர்களோ மன்னனது விருந்துக்கு வர மறுத்து விட்டார்கள்.
4 “பின் மன்னன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். தன் வேலைக்காரர்களிடம் மன்னன் இவ்வாறு சொல்லியனுப்பினான். ‘நான் ஏற்கெனவே அவர்களை விருந்துண்ண அழைத்துவிட்டேன். எனவே, அவர்களிடம், என்னிடமிருந்த சிறந்த காளைகளையும் கன்றுகளையும் உண்பதற்காக அடித்துள்ளேன். எல்லாம் தயாராக உள்ளன. திருமண விருந்துண்ண வாருங்கள்! என்று கூறுங்கள்’ என்றான்.
5 “வேலைக்காரர்கள் சென்று அவர்களை அழைத்தார்கள். ஆனால் அவர்களோ வேலைக்காரர்களின் அழைப்பைப் பொருட்படுத்தவில்லை. வேறு வேலைகளைக் கவனிக்க அவர்கள் சென்று விட்டார்கள். ஒருவன் தன் வயலில் வேலை செய்யவும் மற்றொருவன் தன் வியாபாரத்தைக் கவனிக்கவும், சென்றனர்.
6 வேறு சிலரோ வேலைக்காரர்களைப் பிடித்து அடித்துக் கொன்றுவிட்டனர்.
7 கோபமடைந்த மன்னன் தன் வேலைக்காரர்களைக் கொன்றவர்களைக் கொல்வதற்காகத் தனது படையை அனுப்பினான். மன்னனது படை அவர்களது நகரத்தையே எரித்தது.
8 “அதன் பிறகு, மன்னன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து, ‘திருமண விருந்து தயாராக உள்ளது. நான் அவர்களை விருந்துக்கு அழைத்தேன். ஆனால் அவர்களோ எனது விருந்துக்கு வருமளவிற்கு நல்லவரல்லர்.
9 ஆகவே, தெரு முனைகளுக்குச் செல்லுங்கள். உங்கள் கண்ணில் படுகிறவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழையுங்கள். எனது விருந்துக்கு வரச் சொல்லுங்கள்’ என்று சொன்னான்.
10 எனவே, மன்னனது வேலைக்காரர்கள் தெருக்களுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களை அழைத்து வந்தனர். வேலைக்காரர்கள் நல்லவர்களையும் தீயவர்களையும் திருமணவிருந்து தயாராகவிருந்த இடத்துக்கு அழைத்து வந்தார்கள். அந்த இடம் விருந்தினர்களால் நிரம்பியது.
11 “மன்னன் விருந்தினர் அனைவரையும் காண்பதற்காக வந்தான். திருமணத்திற்கு வர ஏற்றதாக உடையணிந்திராத ஒருவனை மன்னன் கண்டான்.
12 மன்னன் அவனிடம், ‘நண்பனே, நீ எப்படி உள்ளே வந்தாய்? திருமணத்திற்கு வர ஏற்றதாக நீ உடை அணிந்திருக்கவில்லையே?’ என்று கேட்டான். ஆனால் அம்மனிதனோ எதுவும் பேசவில்லை.
13 எனவே, மன்னன் தன் வேலைக்காரர்களிடம், ‘இவனது கையையும் காலையும் கட்டுங்கள். இவனை இருளில் எறியுங்கள். அங்கு, மக்கள் வேதனையால் பற்களைக் கடித்துக் கொள்வார்கள்’ என்று சொன்னான்.
14 “ஆம், பலர் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்று இயேசு சொன்னார்.
15 பின்னர் பரிசேயர்கள், இயேசு போதனை செய்து கொண்டிருந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். இயேசு ஏதேனும் தவறாகப் பேசினால் அவரைப் பிடித்துவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டார்கள்.
16 பரிசேயர்கள் இயேசுவை ஏமாற்ற சிலரை அவரிடம் அனுப்பினார்கள். தங்களுள் சிலரையும் ஏரோதியர்களில் சிலரையும் அவர்கள் இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் நேர்மையானவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனுடைய வழிகளைக்குறித்த உண்மைகளை நீர் போதிப்பதையும் அறிவோம். உம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்து நீர் கவலைப்படுவதில்லை. உமக்கு எல்லோரும் சமம்.
17 ரோமானியப் பேரரசர் சீசருக்கு வரி செலுத்துவது சரியா தவறா? உமது கருத்தைச் சொல்லும்” என்றார்கள்.
18 ஆனால் அவர்கள் தன்னை ஏமாற்ற முயற்சிப்பதை இயேசு அறிந்தார். ஆகவே இயேசு, “மாயமானவர்களே! எதற்காக என்னை ஏதும் தவறாகச் சொல்லவைக்க முயற்சிக்கிறீர்கள்?
19 வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் காட்டுங்கள்” என்று கூறினார். அவர்கள் ஒரு வெள்ளி நாணயத்தை இயேசுவிடம் காட்டினார்கள்.
20 பின் இயேசு, “நாணயத்தில் யாருடைய உருவம் உள்ளது? யாருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டார்.
21 அதற்கு அவர்கள் “சீசரின் உருவமும் சீசரின் பெயரும்.” என்று பதிலளித்தனர். எனவே இயேசு அவர்களுக்குச் சொன்னார், “சீசருடையதை சீசருக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் கொடுங்கள்.”
22 இயேசு கூறியதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். இயேசுவை விட்டு விலகிச் சென்றார்கள்.
23 அதே நாளில் சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். (யாரும் மரணத்திலிந்து உயிர்த்தெழ முடியாது என்று நம்புகிறவர்கள் சதுசேயர்கள்) சதுசேயர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்டனர்.
24 அவர்கள், “போதகரே, திருமணமான ஒருவன் குழந்தைகள் இல்லாமல் இறந்துவிட்டால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணக்கவேண்டுமென மோசே நமக்குக் கூறியுள்ளார். அப்படியெனில், அவர்கள் இறந்த சகோதரனுக்குக் குழந்தை பெறுவார்கள்.
25 எங்களில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதலாமவன் மணம் செய்து கொண்டான். ஆனால் அவன் குழந்தைகள் இல்லாமலேயே இறந்துவிட்டான்.
26 அவனது சகோதரன் அப்பெண்ணை மணந்து கொண்டான். பின், இரண்டாவது சகோதரனும் இறந்துவிட்டான். அதே போல மூன்றாவது சகோதரனுக்கும் மற்ற சகோதரர்கள் அனைவருக்கும் நடந்தது.
27 இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள்.
28 ஏழு பேர் அவளை மணந்தார்கள். எனவே, மரணத்திலிருந்து அவர்கள் உயிர்த்தெழும்பொழுது அவள் யாருடைய மனைவியாக இருப்பாள்?” என்று கேட்டார்கள்.
29 அதற்கு இயேசு, “வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறது என்பது உங்களுக்குத் தெரியாததால் உங்களுக்குப் புரியவில்லை. மேலும் தேவனின் வல்லமையைக்குறித்து உங்களுக்குத் தெரியவில்லை.
30 மனிதர்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்பொழுது, அவர்களுக்குத் திருமணங்கள் நடக்கமாட்டா. உயிர்த்தெழும் அனைவரும் பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களுக்கு ஒப்பாவார்கள்.
31 மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதைக் குறித்து தேவன் என்ன சொல்லியுள்ளார் என்பதைப் படித்திருக்கிறீர்களல்லவா?
32 தேவன், ‘ஆபிரகாமின் தேவன் நானே, ஈசாக்கின் தேவன் நானே, யாக்கோபின் தேவன் நானே’ அவர்களின் தேவன் என்று தேவன் தம்மைப்பற்றி கூறினார். அவர் இறந்தவர்களின் தேவன் அல்ல. அவர் வாழ்கிறவர்களின் தேவன்” என்றார்.
33 அதைக் கேட்ட அனைவரும் இயேசுவின் போதனையைக் கண்டு வியந்தனர்.
34 சதுசேயர்களால் வாதிட இயலாதபடி இயேசு பதில் அளித்தார் என்று பரிசேயர்கள் அறிந்தனர். எனவே, பரிசேயர்கள் ஒன்று கூடினார்கள்.
35 ஒரு பரிசேயன் மோசேயின் சட்டத்தை நன்கு கற்றவன். அவன் இயேசுவைச் சோதிக்க ஒரு கேள்வி கேட்டான்,
36 “மோசேயின் சட்டங்களில் எது மிக முக்கியமானது?” என்று அந்தப் பரிசேயன் கேட்டான்.
37 இயேசு அதற்கு, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’
38 இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை.
39 இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’
40 எல்லா கட்டளைகளும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் இந்த இரண்டு கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டவைதான்” என்றார்.
41 பரிசேயர்கள் ஒன்றாய் கூடியிருந்த பொழுது, இயேசு அவர்களை ஒரு கேள்வி கேட்டார்.
42 “கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்?” என்றார். அதற்குப் பரிசேயர்கள், “கிறிஸ்து தாவீதின் குமாரன்.” என்றனர்.
43 பின் இயேசு பரிசேயர்களிடம் கூறினார், “பின் எதற்காக தாவீது அவரை ‘ஆண்டவரே’ என்றழைத்தார்? தாவீது பரிசுத்த ஆவியின் வல்லமையாலே பேசினார். தாவீது சொன்னது இதுவே:
44 “‘கர்த்தர் (தேவன்) எனது ஆண்டவரிடம் (கிறிஸ்து) கூறினார்: எனது வலது பக்கத்தின் அருகில் உட்காரும்; உம் எதிரிகளை உம் கட்டுக்குள் வைப்பேன்!’
45 தாவீது ‘ஆண்டவர்’ என கிறிஸ்துவை அழைக்கிறார். எனவே கிறிஸ்து எப்படி தாவீதின் குமாரனாக முடியும்?” என்று கேட்டார் இயேசு.
46 பரிசேயர்கள் ஒருவராலும் இயேசுவின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. அந்த நாளிலிருந்து இயேசுவை ஏமாற்றி கேள்வி கேட்க முயற்சி செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.