ஏசாயா 51
9 எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
10 மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?
11 அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன்பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
12 நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?
13 இடுக்கண்செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? இடுக்கண்செய்கிறவனுடைய உக்கிரம் எங்கே?
14 சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.
15 உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.
16 நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.