1 மோசே மலையிலிருந்து இறங்கிவர மிகுந்த தாமதமானதை ஜனங்கள் உணர்ந்தனர். அவர்கள் ஆரோனைச் சூழ்ந்து, அவனை நோக்கி, “பாரும், மோசே எங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே வழி நடத்தி வந்தான். இப்போது அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆகவே எங்களுக்கு முன்பாகச் சென்று வழி நடத்துவதற்குச் சில தேவர்களை உருவாக்கும்” என்றனர்.
2 ஆரோன் ஜனங்களிடம், “உங்கள் மனைவி, பிள்ளைகளுக்குச் சொந்தமான பொன் காதணிகளை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றான்.
3 எல்லா ஜனங்களும் தங்கள் பொன் காதணிகளைச் சேர்த்து ஆரோனிடம் கொடுத்தனர்.
4 ஆரோன் ஜனங்களிடமிருந்து அவற்றை வாங்கி, அதைப் பயன்படுத்தி ஒரு கன்றுக் குட்டியின் உருவத்தை வார்த்தான். பின்பு ஒரு உளியைப் பயன்படுத்தி, அந்த சிலையைச் செதுக்கினான். பின் அதை பொன் தகட்டால் மூடினான். அப்போது ஜனங்கள், “இஸ்ரவேலரே, இந்த தெய்வங்களே உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தன!” என்றனர்.
5 ஆரோன் இவற்றையெல்லாம் பார்த்தான். கன்றுக்குட்டியின் எதிரில் ஒரு பலிபீடம் அமைத்தான். பின்பு ஜனங்களை நோக்கி, “கர்த்தரைக் கனப்படுத்துவதற்கு நாளை ஒரு பண்டிகை நடத்துவோம்” என்றான்.
6 மறுநாள் காலையில் ஜனங்கள் வெகு சீக்கிரமாக எழுந்தனர். அவர்கள் மிருகங்களைக் கொன்று தகன பலிகளையும், சமாதானபலிகளையும் படைத்தனர். ஜனங்கள் தின்று, குடித்துக்களிக்க உட்கார்ந்தனர். பின்பு எழுந்து மிகுதியான அநாகரீகத்தில் ஈடுபட்டனர்.
7 அப்போது கர்த்தர் மோசேயிடம், “இந்த மலையைவிட்டு சீக்கிரமாய் கீழே இறங்கிப் போ. எகிப்திலிருந்து நீ வெளியே அழைத்து வந்த, உனது ஜனங்கள் மிகவும் சீர்கேடான பாவத்தைச் செய்திருக்கிறார்கள்.
8 செய்யும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்ட வைகளினின்று மிக வேகமாய் சோரம் போனார்கள். பொன்னை உருக்கி கன்றுக் குட்டியை வார்த்தார்கள். அவர்கள் அதைத் தொழுது அதற்குப் பலி செலுத்துகிறார்கள். அதனிடம், ‘எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தின தெய்வங்கள் இவையே’ என்றனர்” என்றார்.
9 மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் இந்த ஜனங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பிடிவாத குணமுடையோர் என்பதையும் அறிவேன். அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திரும்புவார்கள்.
10 எனவே என் கோபத்தால் அவர்களை அழிப்பேன். பின் உன் மூலமாக ஒரு பெரிய ஜனத்தை உரு வாக்குவேன்” என்றார்.
11 ஆனால் மோசே தேவனாகிய கர்த்தரை மிகவும் கெஞ்சி, “கர்த்தாவே, உமது கோபத்தால் உமது ஜனங்களை அழித்து விடாதேயும். உமது மிகுந்த ஆற்றலினாலும் வல்லமையாலும் நீர் இந்த ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தீர்.
12 ஆனால் நீர் உமது ஜனங்களை அழித்துவிட்டால் எகிப்தியர்கள், ‘கர்த்தர் அந்த ஜனங்களுக்குத் தீமை செய்யத் திட்டமிட்டார். எனவே அவர்களை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார். அவர்களை மலைகளில் கொல்ல விரும்பினார். அவர்களைப் பூமியிலிருந்து நிர்மூலமாக்க எண்ணினார், என்று சொல்வார்கள்.’ எனவே, உமது ஜனங்களிடம் கோபம் கொள்ளாதிரும். உமது எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்! உமது ஜனங்களை அழித்துவிடாதிரும்.
13 ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் (யாக்கோபு) ஆகியோரை நினைவுகூரும். அவர்கள் உமக்குப் பணிவிடை செய்தனர். உமது பெயரால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர். ‘நான் உன் ஜனங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்வேன். நான் உன் ஜனங்களுக்கு வாக்குறுதி அளித்த தேசத்தைக் கொடுப்பேன். அத்தேசம் என்றும் அவர்களுக்குரியதாகும்’ என்று நீர் வாக்குறுதி தந்தீர்” என்றான்.
14 எனவே, கர்த்தர் ஜனங்களுக்காக மனஸ்தாபப்பட்டார். தான் செய்வதாகக் கூறிய செயலைக் கர்த்தர் செய்யவில்லை, அவர் ஜனங்களை அழிக்கவில்லை.
15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான். உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை அவன் கையில் ஏந்திவந்தான். கற்பலகைகளின் முன்புறம், பின்புறமும் அந்தக் கட்டளைகள் எழுதப்பட்டிருந்தன.
16 தேவனே அக்கற்களை உண்டாக்கி, அக்கற்களின் மீது கட்டளைகளை எழுதியிருந்தார்.
17 மலையிலிருந்து இறங்கியபோது பாளையத்திலிருந்து பெரும் சத்தத்தை யோசுவா கேட்டான். யோசுவா மோசேயை நோக்கி: “நம் பாளையத்தில் யுத்த சத்தம் எழும்புகிறது” என்றான்.
18 மோசே பதிலாக, “இது வெற்றியால் ஒரு படை எழுப்பும் சத்தமல்ல. தோல்வியால் ஒரு படை எழுப்பும் கூக்குரலும் அல்ல. நான் கேட்டது இசையின் சத்தமே” என்றான்.
19 மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடன மாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். அவன் கற்பல கைகளை தரையில் வீசி எறிந்தான். மலை அடிவாரத்தில் அவை சுக்கு நூறாக உடைந்து சிதறின.
20 பின்பு மோசே ஜனங்கள் செய்த கன்றுக் குட்டியை உடைத்து, அதை நெருப்பில் போட்டு உருக்கினான். பொன்னைத் தூளாகுமட்டும் அரைத்து அதைத் தண்ணீரில் கரைத்தான். அந்த தண்ணீரை பருகும்படி இஸ்ரவேல் ஜனங்களை வற்புறுத்தினான்.
21 மோசே ஆரோனை நோக்கி, “இந்த ஜனங்கள் உனக்குச் செய்ததென்ன? ஏன் இந்த மாபெரும் கேடான பாவத்தைச் செய்யும்படியாக அவர்களை வழி நடத்தினாய்?” என்று கேட்டான்.
22 ஆரோன், “கோபம் கொள்ளாதிரும், இந்த ஜனங்கள் எப்போதுமே பாவம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும் அல்லவா.
23 ஜனங்கள் என்னிடம், ‘மோசே எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினான். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, எங்களை வழிநடத்துவதற்கு தெய்வங்களைச் செய்’ என்றார்கள்.
24 நான் அவர்களிடம், ‘உங்களிடம் பொன் காதணிகள் இருந்தால், அவற்றை என்னிடம் கொடுங்கள்’ என்றேன். ஜனங்கள் பொன்னை என்னிடம் கொடுத்தார்கள். நான் பொன்னை நெருப்பில் போட்டேன். நெருப்பிலிருந்து கன்றுகுட்டி வந்தது!” என்று பதிலுரைத்தான்.
25 ஜனங்கள் கட்டுப்பாட்டை மீறி அநாகரீகமாக நடக்கும்படியாக ஆரோன் அவர்களை அனுமதித்ததை மோசே கண்டான். ஜனங்கள் காட்டுமி ராண்டித்தனமாக நடந்துகொண்டதை அவர்களின் பகைவர்கள் கண்டனர்.
26 எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள்.
27 பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான்.
28 லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர்.
29 மோசே, “தமக்குப் பணிவிடை செய்ய கர்த்தர் இன்று உங்களைத் தெரிந்தெடுத்தார். ஏனென்றால், இன்றைக்கு உங்களில் ஒவ்வொருவரும் அவனது மகனுக்கு எதிராகவும், சகோதரனுக்கு எதிராகவும் இருந்தீர்கள். எனவே இன்று அவர் உங்கள் மேல் ஆசீர்வாதம் பொழிவார்” என்றான்.
30 மறுநாள் காலையில் மோசே ஜனங்களை நோக்கி, “நீங்கள் கொடிய பாவம் செய்துள்ளீர்கள்! நான் கர்த்தரிடம் மேலே போவேன். உங்கள் பாவத்தை அவர் மன்னிப்பதற்காக நான் ஏதாவது செய்யக்கூடுமா எனப் பார்ப்பேன்” என்றான்.
31 எனவே மோசே கர்த்தரிடம் மீண்டும் சென்று, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! இந்த ஜனங்கள் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் பொன்னால் ஒரு தேவனைச் செய்தனர்.
32 இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை கிறுக்கி விடும்” என்றான்.
33 ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக் கெதிராக பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன்.
34 எனவே நீ கீழே போய் நான் சொல்கிற இடத்திற்கு ஜனங்களை வழிநடத்து. எனது தூதன் உங்களுக்கு முன்பாகச் சென்று வழிநடத்துவார். பாவம் செய்கிற மனிதர்கள் தண்டிக்கப்படும் காலம் வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
35 எனவே கர்த்தர் ஒரு கொடிய நோய் ஜனங்களை வாதிக்கும்படியாகச் செய்தார். ஆரோனிடம் பொன் கன்றுக்குட்டியைச் செய்யுமாறு கேட்டதால் அவர் இவ்வாறு செய்தார்.
யாத்திராகமம் 32 ERV IRV TRV