யாத்திராகமம் 12 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 மோசேயும் ஆரோனும் இன்னும் எகிப்தில் இருக்கையில் கர்த்தர் அவர்களிடம் பேசினார்:
2 “இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும்.
3 இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திற்கும் இந்தக் கட்டளை உரியது: இம்மாதத்தின் பத்தாவது நாள் ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டினருக்காக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர வேண்டும்.
4 ஒரு ஆட்டுக்குட்டியை உண்பதற்கு வேண்டிய ஆட்கள் அவனது வீட்டில் இல்லாதிருந்தால், அவன் அக்கம் பக்கத்தாரில் சிலரை உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு அழைக்க வேண்டும். ஆட்டுக் குட்டி ஒவ்வொருவரும் உண்ணப் போதுமானதாக இருக்கவேண்டும்.
5 அந்த ஆட்டுக் குட்டி ஒரு வயது நிரம்பிய கடாவாகவும், நோயற்றதாகவும் இருக்க வேண்டும். அது ஒரு செம்மறி ஆடு அல்லது வெள்ளாட்டின் குட்டியாக இருக்கலாம்.
6 மாதத்தின் பதினான்காவது நாள்வரை அம்மிருகத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். அந்நாளில், இஸ்ரவேல் கோத்திரத்தின் எல்லா ஜனங்களும் மாலைப்பொழுதில் அவற்றைக் கொல்ல வேண்டும்.
7 நீங்கள் அதன் இரத்தத்தைச் சேகரிக்க வேண்டும். இந்த இரத்தத்தை, அதன் இறைச்சியை உண்ணுகிறவர்கள் தங்கள் வீட்டு வாசலின் மேற்பகுதியிலும், பக்க வாட்டிலும் நிலைக்கால்களில் பூசவேண்டும்.
8 “இந்த இரவில், ஆட்டுக்குட்டியை நெருப்பில் வாட்டியெடுத்து மாமிசம் எல்லாவற்றையும் உண்ண வேண்டும். நீங்கள் கசப்பான கீரை வகைகளையும், புளிக்காத ரொட்டியையும் கூட சாப்பிட வேண்டும்.
9 ஆட்டுக்குட்டியை நீங்கள் தண்ணீரில் வேக வைக்கக்கூடாது. அந்த ஆட்டுக் குட்டி முழுவதையும் நெருப்பினால் சுடவேண்டும். அதன் தலை, கால்கள் மற்றும் உள் உறுப்புக்கள் எல்லாம் இருக்க வேண்டும்.
10 அந்த இரவுக்குள் நீங்கள் மாமிசம் முழுவதையும் சாப்பிட்டு முடிக்கவேண்டும். காலையில் மாமிசம் மீதியாயிருந்தால் நெருப்பில் அந்த மாமிசத்தை சுட்டு எரிக்கவேண்டும்.
11 “நீங்கள் உணவைச் சாப்பிடும்போது பயணத்திற்குத் தயாரான உடை அணிந்தவர்களாய் இருக்க வேண்டும். உங்கள் மிதியடிகளை அணிந்து, கைத்தடிகளை ஏந்தியவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் அதை அவசரமாகச் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இது கர்த்தருடைய பஸ்கா பண்டிகை. கர்த்தர் தமது ஜனங்களைப் பாதுகாத்து, எகிப்திலிருந்து விரைவாக வெளியில் கொண்டுவரும் நேரம்.
12 “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன்.
13 ஆனால் உங்கள் வீடுகளில் பூசப்பட்ட இரத்தம் ஒரு விசேஷ அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைப் பார்த்ததும் உங்கள் வீட்டைக் கடந்து போவேன். எகிப்தின் ஜனங்களுக்குத் தீமையான காரியங்கள் ஏற்படுமாறு செய்வேன். அத்தீய நோய்கள் ஒன்றும் உங்களைப் பாதிக்காது.
14 “இந்த இரவை நீங்கள் எப்போதும் நினைவு கூருவீர்கள். இது உங்களுக்கு ஒரு விசேஷ விடுமுறை நாளாக இருக்கும். எப்போதும் இந்த விடுமுறை நாளில் உங்கள் சந்ததியார் கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள்.
15 இந்த விடுமுறையின் ஏழு நாட்களும் புளிக்காத மாவினால் செய்த ரொட்டியை உண்ணவேண்டும். இந்த விடுமுறையின் முதல் நாளில் புளிப்பான யாவற்றையும் உங்கள் வீடுகளிலிருந்து அகற்ற வேண்டும். இப்பண்டிகையின் ஏழு நாட்களிலும் யாரும் புளிப்பான எதையும் உண்ணக்கூடாது. யாரேனும் புளிப்பானதைச் சாப்பிட்டால், அவன் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து ஒதுக்கப்படவேண்டும்.
16 விடுமுறை காலத்தின் முதல் நாளிலும் கடைசி நாளிலும் பரிசுத்த சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். இந்நாட்களில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. உங்கள் சாப்பாட்டிற்கான உணவைத் தயாரிப்பது மட்டுமே நீங்கள் செய்யும் வேலையாக இருக்க வேண்டும்.
17 நீங்கள் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை நினைவுகூர வேண்டும். ஏனெனில் இந்நாளில் உங்கள் ஜனங்கள் எல்லோரையும் குழுக்களாக எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். எனவே உங்கள் எல்லா சந்ததியாரும் இந்த நாளை நினைவுகூர வேண்டும். எந்நாளும் நிலைபெற்றிருக்கும் சட்டமாக இது அமையும்.
18 எனவே (நிசான்) முதல் மாதத்தின் பதினான்காவது நாளில் நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியை உண்ணத் துவங்க வேண்டும். அதே மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரைக்கும் இந்த புளிப்பில்லாத ரொட்டியைத் தொடர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டும்.
19 ஏழு நாட்கள் உங்கள் வீடுகளில் எந்தப் புளிப்பான பொருளும் காணப்படக் கூடாது. இஸ்ரவேலின் குடிமகனாகிலும், அந்நியனாகிலும், புளிப்பானதைச் சாப்பிட்டால் அவன் இஸ்ரவேல் ஜனத்தினின்று ஒதுக்கப்பட வேண்டும்.
20 இந்த ஓய்வு நாளில் நீங்கள் புளிப்புள்ள உணவை உண்ணவே கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் புளிப்பு இல்லாத மாவால் செய்த ரொட்டியையே உண்ணவேண்டும்” என்றார்.
21 மோசே எல்லா மூப்பர்களையும் (தலைவர்கள்) ஒன்றாகக் கூடிவரச் செய்தான். மோசே அவர்களிடம், “உங்கள் குடும்பங்களுக்குரிய ஆட்டுக்குட்டிகளைக் கொண்டு வந்து, பஸ்கா பண்டிகைக்காக அவற்றைக் கொல்லுங்கள்.
22 ஈசோப் தழைகளை எடுத்து, அவற்றை இரத்தம் நிரம்பியிருக்கும் கிண்ணங்களில் தோய்த்து எடுத்து வாசல் நிலைக்கால்களின் பக்கங்களிலும், மேலேயும் இரத்தத்தைப் பூசுங்கள். காலை வரைக்கும் ஒருவனும் அவனது வீட்டை விட்டு எங்கும் போகக்கூடாது.
23 எகிப்தின் முதற்பேறானவற்றை அழிப்பதற்காகக் கர்த்தர் கடந்து செல்லும்போது அவர் வாசல் நிலைக்கால்களிலிருக்கும் இரத்தத்தைக் காண்பார். அப்போது கர்த்தர் அந்த வீட்டைப் பாதுகாப்பார். அழிக்கிறவன் உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்களைச் சேதப்படுத்த கர்த்தர் அவனை விடமாட்டார்.
24 நீங்கள் இக்கட்டளையை நினைவுகூர வேண்டும். உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் எந்நாளும் இது சட்டமாக இருக்கும்.
25 கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்திற்குப் போன பிறகும் இதை நினைவுகூர்ந்து செய்ய வேண்டும்.
26 உங்கள் பிள்ளைகள், ‘நீங்கள் ஏன் இந்த பண்டிகையைக் கொண்டாடுகிறீர்கள்?’ என்று உங்களைக் கேட்டால்,
27 நீங்கள், ‘இந்தப் பஸ்காப் பண்டிகை கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குரியதாகும். ஏனெனில், நாங்கள் எகிப்தில் வாழ்ந்தபோது கர்த்தர் இஸ்ரவேலரின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர்களைக் கொன்றார், ஆனால் அவர் நமது வீடுகளின் ஜனங்களைக் காப்பாற்றினார்.’ என்று கூறுங்கள்” என்றார். ஜனங்கள் கர்த்தரைப் பணிந்து தொழுதுகொள்கிறார்கள்
28 கர்த்தர் இந்தக் கட்டளையை மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டவற்றைச் செய்தார்கள்.
29 நள்ளிரவில் கர்த்தர் எகிப்தின் முதற்பேறானவர்களை, எகிப்தை ஆண்ட பார்வோனின் முதல் மகனிலிருந்து, சிறையிலுள்ள கைதியின் முதல் மகன் வரைக்கும் எல்லோரையும் அழித்தார். எல்லா முதற் பேறான மிருகங்களும் மரித்தன.
30 அந்த இரவில் எகிப்தின் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் மரித்தனர். பார்வோனும், அவனது அதிகாரிகளும், எகிப்தின் எல்லா ஜனங்களும் சத்தமிட்டு அழுதனர்.
31 அந்த இரவில் பார்வோன் மோசேயையும், ஆரோனையும் வரவழைத்தான். பார்வோன் அவர்களிடம், “எழுந்து என் ஜனங்களை விட்டு விலகிப்போங்கள். நீங்கள் கூறுகிறபடியே நீங்களும் உங்கள் ஜனங்களும் செய்யலாம். போய்க் கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்!
32 உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் நீங்கள் கூறியபடியே உங்களோடு எடுத்துச் செல்லலாம், போங்கள்! என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்றான்.
33 எகிப்தின் ஜனங்களும் அவர்களை விரைந்து போகும்படிக் கேட்டுக்கொண்டனர். அவர்கள், “நீங்கள் போகா விட்டால், நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம்!” என்று கூறினார்கள்.
34 இஸ்ரவேல் ஜனங்கள் ரொட்டியைப் புளிக்கச் செய்வதற்கும் நேரமிருக்கவில்லை. மாவிருந்த கிண்ணங்களைத் துணியால் பொதிந்து அவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.
35 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மோசே கூறியபடியே செயல்பட்டனர். அவர்கள் அக்கம் பக்கத்தாராகிய எகிப்தியரிடம் சென்று ஆடைகளையும், பொன் மற்றும் வெள்ளி பொருட்களையும் கேட்டார்கள்.
36 இஸ்ரவேல் ஜனங்கள் மீது எகிப்தியர்களுக்கு இரக்கம் உண்டாகுமாறு கர்த்தர் செய்தார். எனவே எகிப்தியர்கள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தனர்.
37 ராமசேசிலிருந்து சுக்கோத்துக்கு இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்தனர். சமார் 6,00,000 புருஷர்கள் இருந்தனர். குழந்தைகள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
38 ஆடுகளும், மாடுகளும், பிற பொருட்களும் மிக அதிகமாக இருந்தன. அவர்களோடு இஸ்ரவேலர் அல்லாத வெவ்வேறு இனத்து ஜனங்களும் பயணம் செய்தனர்.
39 ரொட்டி மாவை புளிக்கவைக்க ஜனங்களுக்கு நேரம் இருக்கவில்லை. பயணத்திற்காக எந்த விசேஷ உணவையும் அவர்கள் தயாரிக்கவில்லை. எனவே புளிப்பற்ற ரொட்டியையே சுட்டார்கள்.
40 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர்.
41 சரியாக 430 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நாளில் கர்த்தரின் சேனைகள் எகிப்தை விட்டுச் சென்றனர்.
42 கர்த்தர் செய்ததை ஜனங்கள் நினைவுகூரும் அந்த இரவு விசேஷமா னது. இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லாரும் எந்நாளும் அந்த இரவை நினைவுகூருவார்கள்.
43 கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “பஸ்கா பண்டிகையின் விதிகள் இவை: அந்நியன் யாரும் பஸ்காவை உண்ணக் கூடாது.
44 ஆனால் ஒருவன் ஒரு அடிமையை வாங்கி அவனுக்கு விருத்த சேதனம் செய்வித்தால், அந்த அடிமை பஸ்காவை உண்ணலாம்.
45 ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த் தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.
46 “ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் வீட்டில் அவ்வுணவை உண்ண வேண்டும். வீட்டிலிருந்து வெளியே அவ்வுணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஆட்டுக்குட்டியின் எலும்புகளை முறிக்க வேண்டாம்.
47 இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் இப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
48 உங்களோடு வசிக்கும் இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் கர்த்தரின் பஸ்காவில் பங்கு கொள்ள விரும்பினால், அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும். அப் போது அவன் இஸ்ரவேலின் குடிமகனாகக் கருதப் படுவான். அவன் பஸ்கா உணவில் பங்கு கொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், அவன் பஸ்கா உணவை உண்ண முடியாது.
49 இந்த விதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இஸ்ரவேலின் குடி மகன் அல்லது உங்கள் நாட்டில் வசிக்கும் இஸ்ரவேல் அல்லாத எல்லோருக்கும் விதிகள் பொதுவானதாகவே இருக்கும்” என்றார்.
50 கர்த்தர் மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்த கட்டளைகளின்படி இஸ்ரவேலின் ஜனங்கள் குழுக்களாக எல்லோரும் எகிப்தை விட்டுபோனார்கள்.
51 அதே நாளில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தினார். ஜனங்கள் குழுக்களாக புறப்பட்டனர்.