எஸ்தர் 6 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 அதே இரவில், அரசனால் தூங்க முடியவில்லை. எனவே, அவன் ஒரு வேலைக்காரனிடம் வரலாற்று புத்தகத்தைக் கொண்டுவந்து வாசிக்கும்படி கட்டளையிட்டான். (அரசர்களது வரலாற்று புத்தகத்தில் அரசர்களின் ஆட்சியில் நடைபெற்றவற்றின் பட்டியல் இருந்தது.)
2 வேலைக்காரன் அரசனிடம் அதை வாசித்தான். அவன் அரசன் அகாஸ்வேருவை கொல்வதற்கான தீய திட்டத்தையும் வாசித்தான். அது மொர்தெகாய் கண்டுபிடித்த பிக்தானா மற்றும் தேரேசின் திட்டமாகும். அந்த இரண்டு பேரும் அரசனது வாசல் கதவை காக்கிற அதிகாரிகள். அவர்கள் அரசனைக் கொல்லவேண்டும் எனத் திட்டம் போட்டனர். ஆனால் மொர்தெகாய் அத்திட்டத்தைப்பற்றி அறிந்து அதனை யாரோ ஒருவரிடம் சொன்னான்.
3 அதற்கு அரசன், “என்ன சிறப்பும், பெருமையும் இதற்காக மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது?” என்ற கேட்டான். வேலைக்காரர்கள் அரசனிடம், “மொர்தெகாய்க்கு எதுவும் செய்யப்படவில்லை” என்றனர்.
4 அப்போது, அரசனது அரண்மனையில் வெளிப் பகுதியில் ஆமான் நுழைந்தான் அவன் தான் கட்டிய தூக்கு மரத்தில் மொர்தெகாய்யைத் தூக்கில் போடுவதற்காக அரசனைக் கேட்க வந்தான். அவன் முற்றத்தில் வரும்போது அரசன், “இப்போது முற்றத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான்.
5 அரசனது வேலைக்காரர்கள் “முற்றத்தில் ஆமான் நின்றுக்கொண்டிருக்கிறார்” என்றார்கள். எனவே அரசன், “அவனை அழைத்து வாருங்கள்” என்றான்.
6 ஆமான் உள்ளே வந்தபோது, அரசன் அவனிடம், “ஆமான், அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யலாம்?” என்று கேள்விக் கேட்டான். ஆமான் தனக்குள் இப்படியாக நினைத்துக் கொண்டான், “என்னைவிட அதிகமாக பெருமைப்படுத்தும்படி அரசன் விரும்புகிறவன் யாராக இருக்க முடியும்? அரசன் என்னை பெருமைப் படுத்துவதைப் பற்றியே என்று உறுதியாக நினைத்தான்.”
7 ஆகையால், ஆமான் அரசனுக்கு, “அரசன் பெருமைப்படுத்தவேண்டும் என விரும்புகிறவனுக்கு இதனைச் செய்யும்.
8 அரசன் அணிகிற உயர்ந்த ஆடையைக் கொண்டுவாருங்கள். அரசன் ஏறிச் செல்கிற குதிரையையும் கொண்டு வாருங்கள். அவர் தலையில் வைக்கிற அரசமுடியையும் கொண்டு வாருங்கள்.
9 பிறகு அந்த ஆடையையும், குதிரையையும் அரசனது முக்கியமான தலைவனின் கையில் கொடுக்கப்படவேண்டும். அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்து குதிரையின் மேலேற்றி நகர வீதியில் உலா வரும்படி விடவேண்டும். அரசனின் முக்கிய தலைவன் அந்த மனிதனை குதிரை மீது நகர வீதியில் அழைத்து வரும்போது, ‘இதுபோலவே அரசன் பெருமைப்படுத்த விரும்புகிறவன் நடத்தப்படவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்’” என்ற பதில் சொன்னான்.
10 அரசன் ஆமானிடம், “வேகமாகப் போ” என கட்டளையிட்டு, “ஆடையையும், குதிரையையும் கொண்டுவா. இதனை நீ சொன்னபடி யூதனான மொர்தெகாய்க்குச் செய். மொர்தெகாய் அரசனது வாசலருகில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிறான். நீ சொன்னபடி எல்லாவற்றையும் செய்” என்றான்.
11 எனவே ஆமான் ஆடையையும், குதிரையையும் எடுத்தான். ஆடையை மொர்தெகாய்க்கு அணிவித்தான். பிறகு அவனை குதிரையில் உட்கார வைத்து நகர வீதிகளில் உலாகொண்டுபோனான். ஆமான் மொர்தெகாய் பற்றி, “இதுபோல் தான் அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற மனிதன் நடத்தப்பட வேண்டும்” என்று அறிவித்தான்.
12 பிறகு மொர்தெகாய் அரசனது வாசலுக்குத் திரும்பிப்போனான். ஆனால் ஆமான் வீட்டிற்கு விரைவாகப் போனான். அவன் தன் தலையை மூடிக்கொண்டான். ஏனென்றால், அவன் சஞ்சலமும் அவமானமும் அடைந்தான்.
13 பிறகு ஆமான் தன் மனைவி சிரேஷையிடமும் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு ஏற்பட்டதையெல்லாம் சொன்னான். ஆமானின் மனைவியும், ஆட்களும் அவனுக்கு ஆலோசனைச் சொன்னார்கள். அவர்கள், “மொர்தெகாய் யூதனாக இருப்பின் நீ வெல்ல முடியாது. நீ ஏற்கெனவே வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாய். உறுதியாக நீ அழிக்கப்படுவாய்” என்றனர்.
14 இவ்வாறு அவர்கள் ஆமானுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அரசனின் பிரதானிகள் ஆமானின் வீட்டிற்கு வந்தார்கள். எஸ்தர் ஏற்பாடு செய்த விருந்துக்கு வரும்படி ஆமானை அவர்கள் விரைவுபடுத்தினார்கள்.