தானியேல் 12 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ‘அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ. அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.2 இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்.3 ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.4 தானியேல்! நீ குறித்த முடிவுகாலம் வரும்வரை இந்த வார்த்தைகளை மூடி வைத்து இந்த நூலை முத்திரையிட்டுவை. உலகில் நிகழ்வதைப் பலர் தெரிந்து கொள்ள வீணிலே முயற்சிசெய்வர்.”⒫5 அப்பொழுது, ஆற்றுக்கு இக்கரையில் ஒருவரும் அக்கரையில் ஒருவருமாக இருவர் நிற்பதைத் தானியேல் ஆகிய நான் கண்டேன்.6 அப்பொழுது, மெல்லிய பட்டாடை உடுத்தி ஆற்றுநீரின்மேல் நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, “இந்த விந்தைகள் எப்பொழுது முடிவுக்கு வரும்?” என்று கேட்டேன்.7 அப்பொழுது, மெல்லிய பட்டாடை உடுத்தி ஆற்று நீரின்மேல் நின்றுகொண்டிருந்த அந்த மனிதர் தம் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, “இன்னும் மூன்றரை ஆண்டுகள் கடந்தபின், புனித மக்களின் ஆற்றலைச் சிதறடிப்பது முடிவுறும் வேளையில், இவை யாவும் நிறைவேறும்” என்றும் வாழ்பவரின் பெயரால் ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டேன்.8 நான் அதைக்கேட்டும் அதன் பொருளை அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது அவரைநோக்கி, “என் தலைவரே! இவற்றிற்குப் பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டேன்.9 அதற்கு அவர், “தானியேல்! நீ போகலாம்; குறிக்கப்பட்ட நாள் வரையில் இந்தச் சொற்கள் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும்.10 பலர் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வர்; புடம்போடப்படுவர்; தம்மை வெண்மையாக்கிக் கொள்வர்; பொல்லாதவர் தீய வழியில் நடப்பர்; அவர்கள் அதை உணரவும் மாட்டார்கள்; ஆனால் ஞானிகள் உணர்ந்து கொள்வார்கள்.11 அன்றாடப் பலி நிறுத்தப்பட்டு ‘நடுங்கவைக்கும் தீட்டு’ அமைக்கப்படும் காலம்வரை ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.12 ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்வரை காத்திருப்பவரே பேறு பெற்றவர்.13 நீயோ தொடர்ந்து வாழ்வை முடி; நீ இறந்து அமைதி பெறுவாய்; முடிவு காலம் வந்தவுடன் உனக்குரிய பங்கைப் பெற்றுக் கொள்ள நீ எழுந்து வருவாய்” என்றார்.தானியேல் 12 ERV IRV TRV