1 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமை அரசனாக்க விரும்பியதால் அவன் சீகேம் நகரத்திற்குப் போனான்.
2 யெரொபெயாம், சாலொமோனுக்கு அஞ்சி ஓடி எகிப்தில் இருந்தான். அவன் நேபாத்தின் மகன். ரெகொபெயாம் புதிய அரசனாகப் போகிற செய்தியை யெரொபெயாம் கேள்விப்பட்டான். எனவே யெரொபெயாம் எகிப்திலிருந்து திரும்பி வந்தான்.
3 இஸ்ரவேல் ஜனங்கள் யெரொபெயாமைத் தங்களோடு வரும்படி அழைத்தனர். பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், ரெகொபெயாம்,
4 “உனது தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெரிய பாரத்தைச் சுமப்பதுபோல் உள்ளது. இப்பாரத்தை எளிதாக்கும். பிறகு நாங்கள் உமக்கு சேவைச்செய்வோம்” என்றனர்.
5 ரெகொபெயாம் அவர்களிடம், “மூன்று நாட்களுக்குப் பிறகு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றான். எனவே எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள்.
6 பிறகு அரசன் ரெகொபெயாம் தன் தந்தையான சாலொமோனுடன் கூடவே இருந்த மூத்த பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்தான். அவர்களிடம் அவன், “இந்த ஜனங்களுக்கு நான் என்ன பதில் சொல்லவேண்டும்?” என்று கேட்டான்.
7 அம்முதியவர்கள் அவனிடம், “நீங்கள் அந்த ஜனங்களோடு கருணையோடு இருந்தால் அவர்கள் மனம் மகிழும்படி செய்யுங்கள். நல்ல முறையில் பேசுங்கள் பின் அவர்கள் உங்களுக்கு என்றென்றும் சேவை செய்வார்கள்” என்றனர்.
8 ஆனால் ரெகொபெயாம் முதியவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் தன்னோடு வளர்ந்து தனக்கு சேவை செய்துவரும் இளைஞர்களிடம் ஆலோசனை கேட்டான்.
9 அவர்களிடம் அவன், “நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? நான் அவர்களின் வேலை பாரத்தைக் குறைக்கவேண்டும் எனக் கேட்கிறார்கள். என் தந்தை அவர்கள்மேல் சுமத்திய பாரத்தைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று கேட்டான்.
10 ரெகொபெயாமோடு வளர்ந்த இளைஞர்களோ அவனிடம், “உன்னுடன் பேசிய ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது இதுதான். ஜனங்கள் உன்னிடம், ‘உங்கள் தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெருஞ்சுமையை சுமப்பது போல் உள்ளது. ஆனால் நீங்கள் அந்தச் சுமையைக் குறைக்கவேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தப் பதிலைத்தான் நீ கூறவேண்டும்: ‘எனது சுண்டு விரலானது என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது!
11 என் தந்தை உங்கள் மீது பெருஞ்சுமையை ஏற்றினார். நானோ அதைவிடப் பெருஞ்சுமையை ஏற்றுவேன். என் தந்தை உங்களைச் சவுக்கினால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக் கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்று ஆலோசனை வழங்கினர்.
12 மூன்று நாட்களுக்குப் பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் வந்தனர். அரசன் ரெகொபெயாம் மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள் என்று அவர்களிடம் சொல்லி இருந்தான்.
13 பிறகு ரெகொபெயாம் அரசன் அவர்களோடு மிகக் கடுமையாகப் பேசினான். முதியவர்கள் சொன்ன ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.
14 ரெகொபெயாம் அரசன் இளைஞர்கள் ஆலோசனை சொன்னபடியே பேசினான். அவன், “என் தந்தை உங்கள் சுமையை அதிகமாக்கினார். நான் அதைவிட அதிகமாக்குவேன். அவர் உங்களைச் சவுக்கால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக்கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்” என்றான்.
15 எனவே அரசன் ரெகொபெயாம் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. இம்மாற்றங்கள் தேவனிடமிருந்து வந்ததினால் அவன் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. தேவன் இந்த விளைவை ஏற்படுத்தினார். அகியாவின் மூலமாக யெரொபெயாமுடன் கர்த்தர் பேசிய அவரது வார்த்தை உண்மையாகும்படி இது நடந்தது. அகியா சிலோனிய ஜனங்களிடமிருந்து வந்தவன். யெரொபெயாம் நேபாத்தின் மகன்.
16 இஸ்ரவேல் ஜனங்கள் தம் அரசனான ரெகொபெயாம் தமது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கண்டனர். பிறகு அவர்கள் அரசனிடம், “நாங்களும் தாவீது குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? ஈசாயின் நிலத்தில் நாங்கள் ஏதாவது பெற்றோமா? எனவே இஸ்ரவேலராகிய நாம் நமது வீடுகளுக்குப் போவோம். தாவீதின் மகன் தன் சொந்த ஜனங்களை ஆண்டுகொள்ளட்டும்!” என்றனர். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
17 ஆனால் யூத நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் பலர் இருந்தனர். ரெகொபெயாம் அவர்களை ஆண்டுவந்தான்.
18 கட்டாயமாக வேலைசெய்ய வேண்டும் என நியமிக்கப்பட்ட ஜனங்களுக்கெல்லாம் அதோனிராம் பொறுப்பாளியாக இருந்தான். அவனை ரெகொபெயாம் இஸ்ரவேல் ஜனங்களிடம் அனுப்பி வைத்தான். ஆனால் அவனை இஸ்ரவேல் ஜனங்கள் கல்லெறிந்து கொன்றனர். ரெகொபெயாம் ஓடிப்போய் தேரில் ஏறிக்கொண்டான். அவன் தப்பித்து எருசலேமிற்கு ஓடினான்.
19 அன்று முதல் இன்று வரை இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் குடும்பத்துக்கு எதிராகவே இருந்து வருகின்றனர்.
2 நாளாகமம் 10 ERV IRV TRV