1 தாவீது மரித்துப்போவதற்குரிய நேரம் வந்தது. எனவே அவன் சாலொமோனிடம் சொல்லும்போது
2 “நான் எல்லா மனிதரையும் போலவே மரிக்க இருக்கிறேன். ஆனால் நீ மேலும் பலத்தில் வளர்ந்து மனிதனாக இரு.
3 இப்போது, உனது தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்து நட. நீ அனைத்து சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும், முடிவுகளுக்கும் உடன்படிக்கைகளுக்கும் கீழ்ப்படி. மோசேயின் சட்டங்களில் எழுதப்பட்ட அனைத்திற்கும் கீழ்ப்படிந்திரு. நீ இவற்றைச் செய்தால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் நீ போகிற அனைத்து திட்டங்களிலும் வெற்றிபெற்றவன் ஆவாய்.
4 நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்லிய வழிகளில் உன் பிள்ளைகள் கவனமாகவும் மனதுக்கு உண்மையாகவும் நடந்தால், பின்னர் இஸ்ரவேலரின் அரசன் உன் குடும்பத்தில் உள்ள ஒருவனாகவே இருப்பான்’ என்றார்” என்றான்.
5 தாவீது மேலும், “செருயாவின் மகனான யோவாப் எனக்கு என்ன செய்தான் என்பதை நினைத்துப் பார். அவன் இஸ்ரவேலரின் படையிலுள்ள இரண்டு தளபதிகளைக் கொன்றான். அவன் நேரின் மகனான அப்னேரையும் ஏத்தேரின் மகனான அமாசாவையும் கொன்றான் அவன் இவர்களைச் சமாதானக் காலத்தின்போது கொன்றான் என்பதை நினைத்துப்பார். இம்மனிதர்களின் இரத்தமானது அவனது அரைக்கச்சையிலும் கால்களிலுள்ள பாதரட்சைகளிலும் படிந்தது. நான் அவனைத் தண்டித்திருக்க வேண்டும்.
6 ஆனால் இப்போது நீ தான் அரசன். எனவே நீ விரும்புகிற வழியில் அவனைத் தண்டிப்பதுதான் மிகப் புத்திசாலித்தனமானது. ஆனால் அவன் கொல்லப்படவேண்டியவன் என்பதில் மட்டும் நீ உறுதியாக இருக்கவேண்டும். அவனைத் தன் முதுமையில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே!
7 “கீலேயாத்தியனான பர்சிலாயின் பிள்ளைகளுக்கு இரக்கம் காட்டு. அவர்களை உனது நண்பர்களாக்கி உனது மேஜையிலேயே உணவு உண்ணச் செய். நான் உன் சகோதரனாகிய அப்சலோமிடமிருந்து ஓடிப்போகும்போது அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.
8 “கேராவின் மகனான சீமேயி இன்னும் இங்கே தான் இருக்கிறான் என்பதை நினைத்துக்கொள். அவன் பகூரிமின் ஊரைச் சார்ந்த பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன். நான் மக்னாயீமுக்குப் போகும்போது அவன் என்னை மோசமாக சபித்தான். ஆனாலும் நான் யோர்தானுக்குப் போனதும் அவன் என்னை வரவேற்றதால் நான் உன்னை வாளால் கொல்வதில்லை என்று கர்த்தர் மேல் வாக்குறுதிக் கொடுத்துவிட்டேன்.
9 எனினும், அவனை குற்றமற்றவன் என்று எண்ணி நீ தண்டிக்காமல் விட்டுவிடாதே. அவனை என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியும். அவனையும் முதியவயதில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே” என்றான்.
10 பின்னர் தாவீது மரித்தான். அவன் தாவீது நகரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டான்.
11 இஸ்ரவேலை 40 ஆண்டு தாவீது அரசாண்டான். அதாவது 7 ஆண்டுகள் எப்ரோனிலும் 33 ஆண்டுகள் எருசலேமிலும் ஆண்டான்.
12 இப்போது சாலொமோன் அரசன் தனது தந்தையின் சிங்காசனத்தில் அமர்ந்தான். அவன் ராஜ்யபாரம் முழுவதையும் தன் ஆளுகையின்கீழ் கொண்டு வந்தான்.
13 ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் வந்தான். அவள் அவனிடம், “நீ சமாதானத்தோடு வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள். அவனோ, “ஆமாம், இது ஒரு சமாதான வருகையே ஆகும்.
14 நான் உங்களிடம் சொல்வதற்கு ஒரு காரியம் இருக்கிறது” என்றான். பத்சேபாள், “அப்படியென்றால் சொல்” என்றாள்.
15 அதோனியா, “ஒரு காலத்தில் அரசாங்கம் எனக்குரியதாயிருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் அடுத்த அரசன் நான்தான் என்று எண்ணினார்கள். ஆனால் நிலைமை மாறிவிட்டது. இப்போது எனது சகோதரன் அரசனாகிவிட்டான். கர்த்தர் அவனை அரசனாகத் தேர்ந்தெடுத்துவிட்டார்.
16 இப்போது உங்களிடம் கேட்க ஒரு காரியம் உள்ளது. தயவு செய்து மறுத்துவிடாதீர்கள்” என்றான். பத்சேபாள், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.
17 அதோனியா, “அரசனாகிய சாலொமோனிடம் நீ என்ன கேட்டாலும் அவன் கொடுப்பான் என்பது எனக்குத் தெரியும். அவன், நான் சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணக்கும்படி செய்யவேண்டும்” என்று கேட்டான்.
18 பிறகு பத்சேபாள், “நல்லது இதுபற்றி உனக்காக அரசனிடம் பேசுவேன்” என்றாள்.
19 எனவே பத்சேபாள் அரசன் சாலொமோனிடம் பேசுவதற்காகப் போனாள். சாலொமோன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றான். அவன் குனிந்து வணங்கி பிறகு உட்கார்ந்தான். அவளுக்கு இன்னொரு சிங்காசனம் கொண்டுவரும்படி வேலைக்காரர்களிடம் கூறினான். அவனது வலது பக்கத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள்.
20 பத்சேபாள் அவனிடம், “நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய காரியம் உள்ளது. தயவுசெய்து மறுத்துவிடாதே” என்றாள். அதற்கு அரசன், “அம்மா, நீங்கள் என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். நான் மறுக்கமாட்டேன்” என்றான்.
21 எனவே பத்சேபாள், “உனது சகோதரனான அதோனியா சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும்” என்றாள்.
22 அதற்கு அவன் தன் தாயிடம், “அபிஷாகை அதோனியாவிற்குக் கொடுக்கும்படி நீ ஏன் வேண்டுகிறாய். அவனையே அரசனாக்கிவிடு என்று நீ ஏன் கேட்கவில்லை. இத்தனைக்கும் அவன் எனக்கு மூத்தசகோதரன் தானே! ஆசாரியனான அபியத்தாரும் யோவாபும் அவனுக்கு பக்கபலமாக இருப்பார்கள்!” என்றான்.
23 பிறகு சாலொமோன் கர்த்தரிடம் ஒரு வாக்குறுதி செய்துகொடுத்தான். “நான் இதற்குரிய விலையை அதோனியாவை செலுத்தச் செய்வேன்! அது அவனது உயிராகவும் இருக்கும்!
24 கர்த்தர் என்னை இஸ்ரவேலின் அரசனாக்கினார். என் தந்தை தாவீதிற்கு உரிய சிங்காசனத்தை நான் பெறுமாறு செய்தார். கர்த்தர் தன் வாக்குறுதியைக்காத்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஆட்சியை அளித்தார். நான் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று அதோனியா கொல்லப்படுவான்” என்றான்.
25 அரசனான சாலொமோன் அதை பெனாயாவிற்கு கட்டளையிட்டான். அவன் சென்று அதோனியாவைக் கொன்று விட்டான்.
26 பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம் அரசனான சாலொமோன், “நான் உன்னைக் கொல்ல வேண்டும். ஆனால் உன்னை உனது வீடு இருக்கிற ஆனதோத்திற்குப் போக அனுமதிக்கிறேன். நான் இப்போது உன்னைக் கொல்லமாட்டேன். ஏனென்றால் என் தந்தையோடு பயணம்செய்யும்போது கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றாய். என் தந்தையின் துன்பங்களிலும் பங்கு பெற்றிருக்கிறாய் என்று தெரியும்” என்றான்.
27 சாலொமோன் ஆசாரியனாகிய அபியத்தாரிடம் மேலும் தொடர்ந்து அவன் கர்த்தருக்கு சேவை செய்யமுடியாது என்றும் சொன்னான். இது கர்த்தர் சொன்ன வழியிலேயே நிகழ்ந்தது. சீலோவில் தேவன் ஆசாரியனான ஏலி பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் இவ்வாறுதான் சொன்னார். அபியத்தாரும் ஏலியின் குடும்பத்தினன்தான்.
28 யோவாப், இதைப்பற்றி கேள்விப்பட்டதும் அஞ்சினான். அவன் அப்சலோமிற்கு உதவாவிட்டாலும் அதோனியாவிற்கு உதவியிருக்கிறான். அவன் கர்த்தருடைய கூடாரத்துக்கு ஓடிப்போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.
29 யாரோ ஒருவன் சாலொமோனிடம் போய், யோவாப் கர்த்தருடைய கூடாரத்தில் பலிபீடத்தருகில் இருப்பதாய் சொன்னான். எனவே சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவிடம் அங்குபோய் அவனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.
30 பெனாயா கர்த்தருடைய கூடாரத்திற்குப் போய் யோவாபிடம், “வெளியே வா! என அரசன் சொல்கிறான்” என்றான். ஆனால் யோவாபோ, “இல்லை, நான் இங்கேயே மரிக்கிறேன்” என்றான். எனவே பெனாயா அரசனிடம் திரும்பி வந்து யோவாப் சொன்னதைச் சொன்னான்.
31 பிறகு அரசன் பெனாயாவை நோக்கி, “அவன் சொல்வதுபோன்று செய்! அங்கேயே அவனைக் கொன்று புதைத்துவிடு. பின்னரே நானும் எனது குடும்பமும் பழியிலிருந்து விடுதலை பெறுவோம். அப்பாவி ஜனங்களை கொன்றதுதான் யோவாப் செய்த குற்றம்.
32 யோவாப் அவனைவிட மிகச்சிறந்த இரண்டு பேரைக் கொன்றிருக்கிறான். அவர்கள் நேரின் மகனான அப்னேரும் ஏதேரின் மகனான அமாசாவும் ஆவார்கள். அப்னேர் இஸ்ரவேல் படையின் தளபதியாகவும் அமாசா யூதேயா படையின் தளபதியாகவும் இருந்தனர். அந்தக் காலத்தில் அவர்களை யோவாப்தான் கொன்றான் என்பது என் தந்தையான தாவீதிற்குத் தெரியாது. எனவே கர்த்தர் அவனைக் கொலையுறும்படி தண்டித்துள்ளார்.
33 அவர்களின் மரணத்துக்கு அவனே காரணம், அவனது குடும்பத்திற்கும் இப்பழி எக்காலத்திற்கும் உரியதாகும். ஆனால் தேவன் தாவீதிற்கும், அவனது சந்ததியினருக்கும், குடும்பத்திற்கும், அரசாங்கத்திற்கும் எக்காலத்திலும் சமாதானத்தை உருவாக்குவார்” என்றான்.
34 எனவே, யோய்தாவின் மகனான பெனாயா யோவாபைக் கொன்றான். அப்பாலைவனத்திலேயே, அவனது வீட்டிற்கு அருகிலேயே யோவாப் அடக்கம் செய்யப்பட்டான்.
35 பிறகு யோவாபின் இடத்தில் யோய்தாவின் மகனான பெனாயாவைத் தனது படைத்தளபதியாக அரசன் நியமித்தான். அபியத்தாரின் இடத்தில் சாதோக்கை சாலொமோன் தலைமை ஆசாரியனாக நியமித்தான்.
36 பிறகு சீமேயியை வரவழைத்தான். அரசன் அவனிடம், “எருசலேமிலே உனக்கென்று ஒரு வீட்டைக் கட்டி அதிலே வாழ்ந்து கொள். நகரத்தை விட்டு வெளியே போகாதே.
37 நீ நகரத்தை விட்டு கீதரோன் ஆற்றை தாண்டிச் சென்றால் கொல்லப்படுவாய். அது உனது சொந்த தவறாக இருக்கும்” என்றான்.
38 எனவே சீமேயி, “அரசனே! அது நல்லது. நான் உங்களுக்குக் கீழ்ப்படிவேன்” என்றான். அதனால் எருசலேமில் நீண்ட காலம் அவன் வாழ்ந்தான்.
39 ஆனால் மூன்று ஆண்டுகள் கழிந்ததும், அவனது இரண்டு அடிமைகள் அவனைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் காத் நகர அரசனான மாக்காவின் மகனான ஆகீஸிடம் ஓடிச் சென்றனர். சீமேயிக்கு தனது அடிமைகள் காத் நகரில் இருப்பது தெரியவந்தது.
40 எனவே சீமேயி தனது கழுதையின் மீது சேணத்தைப் போட்டு காத்திலுள்ள ஆகீஸ் அரசனிடம் சென்றான். அவன் தன் அடிமைகளைக் கண்டுபிடித்து வீட்டிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்தான்.
41 ஆனால் சிலர் சாலொமோனிடம் சீமேயி எருசலேமிலிருந்து காத்திற்குச்சென்று திரும்பியதைப் பற்றி சொன்னார்கள்.
42 எனவே சாலொமோன் அவனை அழைத்துவரச் செய்தான். அரசன், “நீ எருசலேமை விட்டுச்சென்றால் கொல்லப்படுவாய் என்று நான் கர்த்தருடைய பேரால் ஆணைச் செய்து உன்னை எச்சரித்துள்ளேன். நீ எங்காவது சென்றால், உன் மரணத்துக்கு உன் தவறே காரணம் என்றும் எச்சரித்திருக்கிறேன். நான் சொன்னதற்கு நீயும் ஒப்புக்கொண்டிருக்கிறாய். எனக்குக் கீழ்ப்படிவதாகக் கூறினாய்.
43 உனது சத்தியத்திலிருந்து ஏன் தவறினாய்? எனது கட்டளைக்கு ஏன் கீழ்ப்படியவில்லை
44 என் தந்தை தாவீதிற்கு எதிராகப் பல தவறுகளை நீ செய்துள்ளாய் என்பதை அறிவேன். இப்போது அத்தவறுகளுக்குக் கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார்.
45 ஆனால் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார். அவர் தாவீதின் அரசாங்கத்தை என்றென்றும் பாதுகாப்பார்” என்றான்
46 பிறகு அரசன் பெனாயாவிடம் சீமேயியைக் கொல்லுமாறு ஆணையிட்டான். அவனும் அப்படியே செய்தான். இப்போது சாலொமோன் தன் அரசாங்கத்தை தன் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான்.
1 இராஜாக்கள் 2 ERV IRV TRV